இருவேறு மைந்தர்கள்

இல்லற வாழ்வில் பெறக்கூடிய பேறுகளுள் முதன்மையானது அறிவார்ந்த பிள்ளைகளைப் பெறுதலாகும்' என்கிறார் வள்ளுவர். பண்பான பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எழுபிறப்பும் பழிகள் வருவதில்லை என்பதும் அவரது கருத்து.  சங்க
இருவேறு மைந்தர்கள்
Updated on
2 min read

இல்லற வாழ்வில் பெறக்கூடிய பேறுகளுள் முதன்மையானது அறிவார்ந்த பிள்ளைகளைப் பெறுதலாகும்' என்கிறார் வள்ளுவர். பண்பான பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எழுபிறப்பும் பழிகள் வருவதில்லை என்பதும் அவரது கருத்து.

 சங்கத்தமிழில் தலையாய நட்புக்கு இலக்கணமாகச் சொல்லப்படுகின்றவர்கள் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும். பாராமலேயே நட்பு கொண்டு, ஒருவர்க்காக ஒருவர் உயிர் துறந்த உத்தம நண்பர்கள். இந்தப் பெருமக்களுக்குப் பிள்ளைகள் இருந்தனர். ஆனால், அந்தப் பிள்ளைகளைப் பற்றிய ஒப்பீடு இன்னமும் பலரும் அறியாதது.

 சங்க காலத்தில் வாழ்ந்தவர் பிசிராந்தையார் என்ற புலவர். பிசிர் என்பது அந்நாளைய பாண்டிய நாட்டில் உள்ள ஓர் ஊர். இப்போது இவ்வூர் "பிசிர்குடி' என்று வழங்கப்படுகிறது. அது என்ன ஆந்தையார் என்று ஒரு பெயர்? ஆதன் என்பது புலவரின் மகனது பெயர். புலவர்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உண்டு. அவர்கள் அனைவருமே நல்ல பிள்ளைகள்தான். என்றாலும், புலவருக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த பிள்ளையாக ஆதன் விளங்கினான். அதனால் ஊரார் புலவரை "ஆதன் தந்தை' என்றே சிறப்பித்து அழைத்தனர். என் தந்தை என்பது "எந்தை' என்று ஆனதுபோல ஆதன் தந்தை என்ற பெயர் பேச்சு வழக்கில் சிதைந்து "ஆந்தை' என்றாகிவிட்டது.

 அப்படிப்பட்ட பிசிராந்தையார் புலமையில் மிகச் சிறந்தவர்; வயதிலும் முதிர்ந்தவர். இதில் வியப்பு என்னவென்றால், வயதில் மூத்திருந்தாலும் அவரது தலைமுடியில் நரை இல்லை; உடலில் சுருக்கம் இல்லை; முதுமைக்கான அடையாளம் சிறிதுமின்றி இளமைத் தோற்றத்துடன் அவர் காணப்பட்டார்.

 பிசிராந்தையாரின் புதல்வர்கள் குணங்களால் நிரம்பியவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள், புலவர் மகிழும்படியாக எப்பொழுதும் நடந்து கொண்டார்கள். அதன் காரணமாகப் புலவர்க்குக் கவலை என்பதே இல்லாமல் போய்விட்டது. கவலை இல்லை என்றால் நரை திரை மூப்புக்கு இடம் ஏது? பிசிராந்தையார் மிகவும் கொடுத்து வைத்த தந்தை.

 ஆனால், மிகவும் கொடுத்து வைக்காத தந்தை பிசிராந்தையாரின் நண்பரான கோப்பெருஞ்சோழனே ஆவான். பெற்ற பிள்ளைகளே அவனது உயிர்க்கு உலை வைத்துவிட்டார்கள். ஆம், கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விடக் காரணமானவர்கள் அவனுடைய இரண்டு பிள்ளைகள்தான்.

 கோப்பெருஞ்சோழன் அரசாள்கின்ற போதே, தாங்களே நாட்டை ஆளவேண்டும் எனப் பிடிவாதம் செய்தார்கள் பிள்ளைகள் இருவரும். வேந்தன் மறைவுக்குப் பின்னர் அவர்கள் இருவருமே நாட்டை ஆளப்போகின்றவர்கள் என்று அறிந்திருந்தாலும், அவர்கள் அதை உணர்ந்து கொள்ளவில்லை. அதனால் பிள்ளைகள் இருவரும், தந்தையை எதிர்த்துப் படையெடுத்தனர்.

 சோழனும் சினந்து, அவர்களை எதிர்த்துப் போர்க்கு எழுந்தான். அப்போது சோழனின் உள்ளங்கவர் புலவரான எயிற்றியனார், சோழனுக்கு அறிவுரை கூறத்தொடங்கினார்.

 ""நல்லாட்சியால் புகழ்கொண்ட வெற்றி வேந்தே! உன்னோடு போர் செய்ய வந்துள்ள இருவரும் சேரரும் பாண்டியருமாகிய உன் பகைவர்கள் அல்லர்; நீயும் அவர்களுக்குப் பகை வேந்தனும் அல்ல. நீ மண்ணுலகில் புகழை வைத்து விண்ணுலகை அடையும்போது, இந்தச் சோழநாட்டின் ஆட்சி உரிமை உன் பிள்ளைகளுக்கே உரியதாகும். இவை எல்லாம் உனக்கும் தெரியும். புகழ் மிக்கவனே இன்னும் கேட்பாயாக! உன் மைந்தர்கள் போரில் உன்னிடம் தோற்றுவிட்டால், உன் மறைவுக்குப் பிறகு சோழநாடு யாரிடம் ஒப்படைக்கப்படும்...? ஒருக்கால் உன் பிள்ளைகளிடம் நீ தோற்றுவிட்டால், உன் பகைவர்கள் மகிழும்படி பழியை அல்லவா இங்கு விட்டுச்செல்வாய்? அதனால் உன் புதல்வர்களோடு போர் செய்யும் எண்ணத்தை விட்டுவிட்டு, வானவர்கள் விரும்பி வரவேற்கும்வண்ணம் அறச்செயலைச் செய்ய உடனே புறப்படு'' என்றார்.

 ""மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்

 வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!

 *****

 வாழ்கநின் உள்ளம் அழிந்தோர்க்கு

 ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது

 செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்

 அரும்பெறல் உலகத்து ஆன்றவர் விதுப்புறு

 விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே''

 (புறம்-213)

 புலவரின் அறிவுரை சோழனின் உள்ளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் அரசாட்சியைத் துறந்த சோழவேந்தன் கோப்பெருஞ்சோழன், வடக்கிருந்து உயிர்விட்டு வானவர்க்கு அரும்பெரும் விருந்தானான். அவனது செயலுக்கு அவன் பிள்ளைகளே காரணமானார்கள். தந்தைக்குப் பெயர்வாங்கித் தந்த மைந்தன் ஒருபுறம்; தந்தையின் உயிரை வாங்கிய பிள்ளைகள் ஒருபுறம். சங்க காலத்தில் இப்படியும் புதல்வர்கள் இருந்திருக்கிறார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com