அழிந்துபோன அற்புத வரிகள்...

அழிந்துபோன அற்புத வரிகள்...

ஐம்பெருங்காப்பியங்களுள் வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்கள் அழிந்துவிட்டன.  ஆனால், வளையாபதி நூலின் எழுபத்திரண்டு பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. புறத்திரட்டிலும், யாப்பருங்கல விருத்தியிலும் அப்பாடல்கள் காணக்கிடைக்கின்றன.

÷"ஒரு பெண்ணின் கூந்தல் எவ்வளவு அழகாக உள்ளது. கருமை நிறத்துடன், எண்ணெய் பூடப்பட்ட அக்கூந்தல் மேகமாய் அலைபாய்கிறது. வாசனைமிக்க - அழகே வடிவான அக்கருங்கூந்தல் காலம் என்கிற கொடிய நெருப்பில் அழகிழந்து, உருமாறி, எல்லாம் திசைமாறிப் போய்விடுவதை "நெஞ்சே... நீ அறியமாட்டாயா? அப்படி காலமாகிய கனலில் அவை உருமாறிப்போனாலும், நெஞ்சே, நீ இன்னும் மயக்கத்திலிருந்து விடுபடுவதாகத் தெரியவில்லையே' எனும் பொருள் தரும் அப்பாடல் வருமாறு:

""நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போது அவிழ்ந்து

கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே!

கோலம் குயின்ற குழலும் கொழுஞ் சிகையும்

காலக் கனல் எரியின் வேம் வாழி நெஞ்சே...

காலக் கனல் எரியின் வேவன கண்டாலும்

சால மயங்குவது  என் வாழி நெஞ்சே!''

எவ்வளவு பொருள் பொதிந்த பாடல் இது. இதைத் தொடர்ந்து உன்னதமான மற்றுமொரு பாடலும் உண்டு.

÷"முடி மன்னர்கள் பிறிதொரு காலத்தில் மணிமுடி இழந்து தங்கள் பெருமைகளை எல்லாம் இழந்து ஒன்றுமில்லாமல் போய்விடுவதுண்டு. இதெல்லாமல் கண்டு நெஞ்சே, நீ மயக்கம் கொள்ளாதே, எப்போதும் உத்தமமாகிய நல்ல நெறியிலே நின்று செயல்படுவாய். அப்படி உத்தமமாகிய நல்ல நெறியிலே நின்று தொடர்ந்து செயல்படுவாயானால், நெஞ்சே... உனக்கு நிச்சயம் "சித்தி' என்னும் பேரானந்தப் பெருவாழ்வு கிடைக்கும் என்பதை நிச்சயமாய் உணர்வாய்!' - அப்பாடல் வருமாறு:

""வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்

மத்தக மாண்பு அழிதல் காண்வாழி நெஞ்சே!

மத்தக மாண்பு அழிதல் கண்டால் மயங்காதே

உத்தம நன்நெறிக்கண் நில்வாழி நெஞ்சே

உத்தம நன் நெறிக்கண் நின்று ஊக்கம் செய்தியேல்

சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே!

இத்தகைய பாடலைப் பாடிய புலவரைக் கையெடுத்து வணங்கத் தோன்றுகிறதல்லவா? ஆனால், அந்தப் புலவர் பெயரும் நமக்குக் கிடைக்கவில்லையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com