கல்வியில் ஒழுக்கம் காப்போம்...

கல்விக்கு அடிப்படை ஒழுக்கம். பளபளப்பிலும், படாடோபத்திலும் கிடைப்பதல்ல கல்வியொழுக்கம்.
கல்வியில் ஒழுக்கம் காப்போம்...
Updated on
3 min read

கல்விக்கு அடிப்படை ஒழுக்கம். பளபளப்பிலும், படாடோபத்திலும் கிடைப்பதல்ல கல்வியொழுக்கம். அது எப்படி இருக்க வேண்டும் என்பதை அதே தலைப்பிலே அருளி இருக்கிறார் ஒüவை மூதாட்டி. ஒüவையின் தமிழ் நூல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டதாகும். ஆனால், ஏழெட்டு நூல்களே இப்போது முழுமையாக இருப்பவை.

ஒüவையின் இந்தக் "கல்வியொழுக்கம்' நூலானது நூறாண்டு காலம் காணாமல் போய், "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.யால் தேடிப் பதிப்பிக்கப் பெற்றதாகும்.

""கல்வியொழுக்கம் வரிவரியாக அகர வரிசைப்படி பாடப்பட்டதாகும். இலண்டன் பிரதியில் மொத்தம் 86 வரிகள் உள்ளன. ""அஞ்சு வயதில் ஆதியை யோது'' என்பதை முதல் வரியாகக் கொண்டு நூல் தொடங்குகிறது. இலண்டன் மியூசியத்திலிருந்து எனக்குக் கிடைத்த பிரதி முழுமையானதில்லை. 85-வது வாக்கியம் வரை மூலமும், தமிழ் உரையும், ஆங்கில மொழிபெயர்ப்பும் முழுமையாக உள்ளன. 86-வது வாக்கியத்திற்குத் தமிழ் உரையோ, ஆங்கில மொழிபெயர்ப்போ இல்லை. ""வெüவிப் படிக்க வாழ் வுண்டாமே!'' என்ற மூலம் மட்டுமே இருக்கின்றது. கிடைத்த பிரதியின் அமைப்பைப் பார்க்குமிடத்து,

86-க்கு மேலும் வாக்கியங்கள் இருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. பதிப்பாசிரியர் கே.எஸ். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள முன்னுரையில் 94-வது வாக்கியம் பற்றி விமர்சிக்கப்படுகிறது. இதனாலும், 94-க்கு மேற்பட்ட வாக்கியங்கள் கொண்டதாக நூல் அமைந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது'' எனக் கல்வியொழுக்கம் நூலின் முன்னுரையில் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. குறிப்பிட்டுள்ளார்.

உலகில் கல்வியும், கல்வியோடு சேர்ந்த ஒழுக்கமும் காலமெல்லாம் நிலைக்கட்டும்!

1. அஞ்சு வயதில் ஆதியை ஓது

2. ஆதியை ஓத அறிவுண்டாமே

3. இனியது கொடுத்தே எழுத்தை அறி

4. ஈட்டிய நற்பொருள் எழுத்தே ஆகும்

5. உடைமை என்பது கல்வி உடைமை

6. ஊமை என்பவர் ஓதாதவரே

7. எழுதப் படுவது எழுத்தே ஆகும்

8. ஏழை என்பவர் எழுத்தறியாதவர்

9. ஐயம் ஏற்கினும் அறிவது எழுத்தே

10. ஒரு பொழுதாகிலும் ஓதி நன்கு அறி

11. ஓதல் உடைமை வேதவித்தை

12. ஒüவியம் இல்லாதவர் ஆமெழுத்து அறிந்தவர்

13. கண் உடையவர்கள் கற்றவர் தாமே

14. காவலன் எனினும் கணக்கை ஓர்ந்து அறி

15. கிடையாவுடமை கல்வியுடைமை

16. கீர்த்தியும் பெருமையும் கிடைப்பது கல்வி

17. குறைவறக் கற்றவன் கோடியில் ஒருவன்

18. கூர்மை என்பது குன்றாக் கல்வி

19. கெடுப்பினும் கல்வி கேடுபடாது

20. கேள்வியுடைமை தாழ்விலாச் செல்வம்

21. கைப்பொருள் என்பது கசடறு கல்வி

22. கொற்றவன் தன்னிலும் கற்றவன் உயர்ந்தவன்

23. கோதறு கல்வி குவலயந் தருமே

24. சகல கலைக்கும் தலைமை எழுத்தே

25. சாத்திரங் கற்றவன் தன்னையறிந்தவன்

26. சிறுமையில் கல்வி சிலையில் எழுத்தே

27. சீரிய தமிழைத் தெளிய ஓது

28. சுற்றம் என்பது துகளது கல்வி

29. சூட்சமும் தூலமும் தோன்றும் கல்வி

30. சென்ற இடமெல்லாம் சிறப்பே கல்வி

31. சேயன் என்பவன் தீங்கறக் கற்றவன்

32. சைகையும் சமர்த்தும் தந்திடும் கல்வி

33. சொல்லும் பொருளும் தோன்றக் கற்றறி

34. சோம்பர் என்பவர் சொல் எழுத்தறியார்

35. தகும் எழுத்தை அறிந்தவன் தலைவனாவான்

36. தான் கற்றவற்றைச் சபையினில் ஓது

37. திருந்த ஓதிடில் திருவுண்டாமே

38. தீரக் கற்றவன் தேசிகனாவான்

39. துறவோர் என்பவர் துரிசறக் கற்றவர்

40. தூர்த்தர் என்பவர் சொல் எழுத்து அறியார்

41. தெளிய ஓதத் திறமுண்டாமே

42. தேசமும் நாடும் திருந்த ஓது

43. தைக்கக் கற்றவன் சமர்த்தனாவான்

44. தொன்னூல் முழுவதும் தோன்றக் கற்றறி

45. தோழன் ஆவது தோர்விலாக் கல்வி

46. நற்பொருள் கொடுத்து நன்றாய் ஓது

47. நானிலம் முழுவதும் நயந்தருங் கல்வி

48. நில்லாது எதுவும், நிலையே கல்வி

49. நீச்சு அரிதாயினும் கற்பது நிலைமை

50. நுண்பொருள் கொடுத்து நூல் பல அறி

51. நூறாண்டாயினும் கல்வியை நோக்கு

52. நெடுங்கடல் ஓடினும் நிலையே கல்வி

53. நேராக் கல்வி நிலையாகாதே

54. நையக் கற்பினும் நொய்ய நன்குரை

55. நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர்

56. நோகாது உண்பவர் நும்பொருள் அறிந்தோர்

57. பலகலை கற்றவ(னி)ன் பகையைக் கைவிடு

58. பாவலர் என்பவர் பழுதறக் கற்றோர்

59. பிழையறக் கற்பவர் பெரியவராமே

60. பூடும் செல்வமும் பெறத் தரும் கல்வி

61. புரையறக் கற்றவன் புவி ஆள்பவனே

62. பூமியில் செல்வம் புகழ் பெருங்கல்வி

63. பெருமை பெறுவது பேசருங் கல்வி

64. பேதை என்பவர் பெருநூல் அறியார்

65. பையப் பையப் படித்தே ஒழுகு

66. பொருள் மிகக்கொடுத்துப் போதக் கற்றறி

67. போதக் கற்றவன் புண்ணியஞ் செய்தவன்

68. மன்னராயினும் மறைகளை ஓது

69. மாசறக் கற்றோர் மாநிலம் ஆள்வர்

70. மிகப் பெருஞ்செல்வம் விளைத்திடும் கல்வி

71. மீசுரம் கொடுத்து வித்தையை விரும்பு

72. முத்தமிழ் தமக்கு மூப்பு இல்லை

73. மூதறிவை உயர்த்தும் தீதில்லாக் கல்வி

74. மெலியர் ஆயினும் வேண்டுவது எழுத்தே

75. மேலோரென்ன வித்தையைக் கற்றறி

76. மையறு கல்வி கைவிடாது ஓது

77. மொழிவது அகார முதல் எழுத்தாமே

78. மோக விகாரர் முன்னூல் பாரார்

79. வழக்கறிவுறுத்தும் மாசறு கல்வி

80. வாட்டம் தராது மறவாக் கல்வி

81. வித்தை கல்லாதவர் வெறியராவார்

82. வீரியம் பேசார் வித்தை அறிந்தோர்

83. வெண்பா முதலாக விளங்கவே ஓது

84. வேதம் முதலாய் விரைந்து அறிந்தது ஓது

85. வையகமெல்லாம் வாழ்ந்தவே ஓது

("சுடர்மணிக் கவிஞர்' வேம்பத்தூர் கிருஷ்ணன் பதிப்பித்த "கல்வியொழுக்கம்' நூலிலிருந்து...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com