"இராமாயண சாயபு' அல்ஹாஜ் தாவூத்ஷா!

கும்பகோணம்-நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா. அந்தக் காலத்தில்
"இராமாயண சாயபு' அல்ஹாஜ் தாவூத்ஷா!

கும்பகோணம்-நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா.

அந்தக் காலத்தில் அந்த ஊருக்கு "நறையூர்' என்று பெயர். இவரை "நறையூர் தாவூத்ஷா' என்றுதான் அழைப்பார்கள். நாச்சியார் கோயிலில் திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, பின்னர் கும்பகோணம் "நேடிவ்' உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தார். இவரின் தமிழ் ஆசிரியர் ராமானுஜ ஆச்சாரியார். கல்லூரியில் இவருக்குத் தமிழ் ஆசிரியராக இருந்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர். அடுத்து முன்னாள் இந்தியக் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் இவருக்குத் தத்துவப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசான்.

1909-ஆம் ஆண்டு "சபுரா' என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1912-ஆம் ஆண்டில் நாச்சியார் கோயிலிலேயே முதன் முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் இவர்தான். மதுரை தமிழ்ச் சங்கத்தில் தேர்வு எழுதி முதல் மாணவனாக தங்கப்பரிசும் பெற்றார்.

தாவூத்ஷா, இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்று, ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார். 1934-ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிரசாரத்திற்காக "தேச சேவகன்' என்ற வார இதழை சென்னையில் நடத்தினார். பிரசார வல்லுநராக இருந்த தாவூத்ஷா, சென்னை நகரத் தெருக்களிலும், வெளியூரிலும் கூட்டங்கள் நடத்தி, மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் தேச விடுதலையின் அவசியத்தையும் தெளிவுபடப் பிரசாரம் செய்து வந்தார். அவரின் கடுமையான உழைப்பினால், சென்னை மாவட்டக் காங்கிரஸின் தலைவரானார். பிறகு சென்னை நகர சபையின் நகரத் தந்தையாகவும் நியமிக்கப்பட்டார்.

1934-ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி "வரலாற்று தொகுப்பு' என்ற நூலை வெளியிட்டார். 1937-இல் "எல்லைப்புற காந்தி கான் அப்துல் கஃபார்கான்' என்ற நூலை எஸ்.சத்தியமூர்த்தியின் முன்னுரையுடன் புத்தகமாக வெளியிட்டார். மூதறிஞர் ராஜாஜி, சேலம் மருத்துவர் வரதராஜுலு, மறைமலையடிகள், திரு.வி.க. போன்றோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

நபிகள் நாயகம்(ஸல்) பிறந்த நாள் விழாக்களில் பல ஊர்களில் பல மேடைகளில் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கம்பராமாயணம் கதாகாலட்úக்ஷபமும் செய்துவந்தார். இதனால் மக்கள் இவரை, "இராமாயண சாயபு' என்றே அழைத்தனர்.

1905-ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் "சுதேச நன்னெறி சங்கம்' என்ற சங்கத்தைத் தொடங்கி ஒரு நூலகம் நடத்தினார். அவருடைய சொற்பொழிவுகளை 1919-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் "கமலம்' என்ற பெயரில் சிறு சிறு வெளியீடுகளாக வெளியிட்டார்.

1921-இல் "தத்துவ இஸ்லாம்' என்ற பெயருடன் மாதப் பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். இந்த இதழ் 1923 ஜனவரியில் "தாருல் இஸ்லாம்' என்று மாற்றப்பட்டது. 1922 பிப்ரவரி மாதம் லண்டனுக்கு சமயப் பிரசாரம் செய்வதற்குச் சென்றார். அங்கே "இஸ்லாமிய ரெவ்யூ' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

"தாருல் இஸ்லாம்' என்றால் முஸ்லிம் உலகம் என்று பொருள். தாருல் இஸ்லாம் பத்திரிகையுடன் (புரட்சி நாளிதழ்) ரஞ்சித மஞ்சரி 1932-ஆம் ஆண்டில் பொழுதுபோக்கு (மாத) இதழாக நடத்தினார். தாருல் இஸ்லாம் நாளிதழை சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர்.சீனிவாசன் தவறாமல் படிப்பார். அவர் தாவூத்ஷாவின் நண்பராகவும் இருந்தார். அதுமட்டுமல்ல, ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் தாருல் இஸ்லாம் பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்து, வாராவாரம் ஆனந்த விகடனை தாவூத்ஷாவுக்குத் தொடர்ந்து இலவசமாக அனுப்பி வந்தார். அத்துடன், தாருல் இஸ்லாம் பத்திரிகையைத் தொடர்ந்து படித்தும் வந்தார்.

சென்னையில் "கார்டியன்' என்ற அச்சகத்தை தாவூத்ஷா விலைக்கு வாங்கினார். சொந்த அச்சகம் வந்ததும் தாருல் இஸ்லாம் வார இதழாக மாற்றப்பட்டது. 1934-இல் இருமுறை இதழாக வெளிவந்தது. பிறகு நாளிதழாக மாற்றப்பட்டது. 1941-ஆம் ஆண்டு சென்னையில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தபோது காலை, மாலை என இரு வேளையும் வெளியான ஒரே பத்திரிகை "தாருல் இஸ்லாம்' ஒன்றுதான். இப்பத்திரிகை பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் சென்றன.

பத்திரிகை இடைக்காலத்தில் நஷ்டப்பட்டதால், 1947-இல் மாத இதழாக வெளியிட்டார். சினிமா விமர்சனம், சினிமா செய்திகள், கலைஞர்கள் பேட்டி எல்லாம்கூட அதில் வெளிவந்தன. இஸ்லாமியர் ஒருவர் நடத்தும் பத்திரிகையில் சினிமா செய்திகள் வெளிவருவது அந்தக் காலத்தில் அதிசயமாகப் பேசப்பட்டது.

இவர் எழுதிய முஹம்மது நபி(ஸல்)யின் வாழ்க்கை வரலாறு, அபூபக்கர் சித்திக்(ரலி) என்ற இவருடைய நூல்கள் பள்ளிகளில் இடம்பெற அரசாங்கம் அனுமதி அளித்தது.

இவர் எழுதிய பிற நூல்களாவன: ஈமான், நாயக வாக்கியம், நபிகள் நாயக மான்மியம், இஸ்லாம் எப்படி சிறந்தது?, நபிகள் நாயகமும் நான்கு தோழர்களும், ஜியாரத்துல் குபூர், இஸ்லாமிய ஞானபோதம் (மதங்களின் மாநாட்டில் முதல் பரிசு பெற்ற நூல்), குத்பாப் பிரசங்கம் தமிழில் இருக்க வேண்டும் என்று கூறிய தாவூத்ஷா, "குத்பாப் பிரசங்கம்' என்ற நூலையும் வெளியிட்டார்.

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பை 1931-ஆம் ஆண்டு வெளியிட்டார். "அம்மையத்' என்ற பெயரில் மூன்றாம் பாகத்தை வெளியிட்டார். இதுபோல தொடர்ந்து பல தலைப்புகளில் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார். தமது 70-வது வயதில் தாருல் இஸ்ஸôம் பத்திரிகையை நிறுத்திவிட்டார்.

தாவூத்ஷா எழுதிய வேறு பெருங்கதைகள்: கள்ள மார்க்கெட்டு மோகினி, காதலர் பாதையில், ரஸ்புதீன், ஜுபைதா, கப்பல் கொள்ளைக்காரி, காபூல் கன்னியர், களபுரி இரகசியம், காதல் பொறாமையா? அல்லது பொறாமைக் காதலா?, ஹத்திம் தாய், மலை விழுங்கி மகாதேவன்; சிறுகதைகள்: சுவாசமே உயிர், ஜீவவசிய பரமரகசியம், மெஸ்மரிசம், குலாம் காதரும் குல்லாவும், முட்டை வியாபாரி. சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த தாவூத்ஷா, 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com