"தோழரின் தோழர்' தனுஷ்கோடி ராமசாமி!

சமகால இலக்கியங்கள், மனித வாழ்வின் மதிப்புகளைத் தீர்க்கமாகக் களமிறங்கி விமர்சனம் செய்து வருகின்றன. இது நவீன இலக்கியத்தின் வளர்ச்சிப் பதிவு. இதுகாறும் பேசப்படாத - பேச முடியாத சமூக வெறுமைகளைப் படைப்பிலக்
"தோழரின் தோழர்' தனுஷ்கோடி ராமசாமி!

சமகால இலக்கியங்கள், மனித வாழ்வின் மதிப்புகளைத் தீர்க்கமாகக் களமிறங்கி விமர்சனம் செய்து வருகின்றன. இது நவீன இலக்கியத்தின் வளர்ச்சிப் பதிவு. இதுகாறும் பேசப்படாத - பேச முடியாத சமூக வெறுமைகளைப் படைப்பிலக்கியங்கள் அழுத்தமாக, ஆழமாகவே, நடப்பியல் நெறி நின்று பிரதிபலிக்கின்றன. இலக்கியவாதியின் தனிப்பட்ட எழுத்தாளுமை, இயக்கம் சார்பான கொள்கை, கோட்பாடுகளுக்குள் இருத்தப்படும்போது, அது விளிம்புநிலை மக்களுக்கான கலகக்குரலாக, பொதுவுடைமைக்கான புரட்சிக் குரலாக ஆவேசமெடுக்கின்றன. அத்தகைய ஆவேசக்குரலை தம் படைப்புகளில் ஏற்றி, சமூகக் கீழ்மைகளைக் கருகச் செய்யும் செந்தீயாக மாற்ற முயற்சித்தவர் தனுஷ்கோடி ராமசாமி.

 1944-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள "கலிங்கல் மேட்டுப்பட்டி' என்ற கிராமத்தில் பிறந்தவர். தந்தை சக்கணத்தேவர், தாய் மாயக்காள். த.ரா., ஆரம்பக் கல்வியைக் கலிங்கல் மேட்டுப்பட்டியிலும், உயர்நிலைக் கல்வியை சாத்தூர் ஆயிர வைசிய பள்ளியிலும் பயின்றார். தூய தனிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்து, 1964-இல் தூத்துக்குடி துவக்கப் பள்ளியில் ஆசிரியரானார். கள்ளகுளத்தூர், சாத்தூர் பள்ளிகளிலும் பணியாற்றி இருக்கிறார்.

 த.ரா., பள்ளிப் பருவத்திலேயே "மாணவர் சங்கம்' மற்றும் "இலக்கிய மன்றங்கள்' அமைத்துத் "தனித்தமிழ்' வளர்ச்சிக்கு வித்திட்டவர். ஆரம்பக் காலங்களில் காந்திய நெறியில் பற்றுகொண்ட இவர், ஆசிரியர் பெரியாழ்வார், பேராசிரியர் இராம சுந்தரத்தின் கருத்துகள், நா.வானமாமலையின் ஆராய்ச்சி இதழ் இவைகளால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிசத்திற்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

 அவரின் முதல் சிறுகதையான "சிம்ம சொப்பனம்' ஆனந்த விகடனில் வெளியானது. நாரணம்மா, சேதாரம், தீம்தரிகிட, வாழ்க்கை நெருப்பு, பெண்மை என்றும் வாழ்க ஆகியவை அவருடைய சிறுகதைத் தொகுப்புகள்.

 ÷ த.ரா.வின் படைப்புகள் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு, ஆனந்த விகடன் பொன்விழாப் பரிசு, லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, அக்னி சுபமங்களா சிறுகதைப் போட்டிப் பரிசு ஆகிய பரிசுகளைப் பெற்றுள்ளன. இவருடைய கதைகள் ஆங்கிலம், கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 பாரதியின் பற்றாளரான த.ரா., நல்லதோர் வீணை செய்தே, ரோஷம், பெண்மை என்றும் வாழ்க, அழகின் ரகசியம், வாழ்க்கை நெருப்பு ஆகிய கதைகளைப் பெண் விடுதலை, பெண் உரிமை குறித்த புரட்சியை முற்போக்குச் சிந்தனைகளாக, பெண்மையின் கலை அழகியல் மிளிரப் படைத்திருக்கிறார். ஜாதி என்ற சகதிக்குள் புதையுண்ட மக்களை மீட்க வேண்டும் என்கிற ஆதங்கம் த.ரா.விற்குள் எப்பொழுதும் இருந்தது. அதன் வெளிப்பாடே "குன்றக்குடிக்கு வழி', "ஆயிரம் ஆண்டுத் தணல்' முதலிய கதைகள்.

 சிறந்த முற்போக்கு எழுத்தாளரான த.ரா., 1970-களில் தீவிரமாக இயங்கிவந்த "மதுரை கலை இலக்கியப் பெருமன்ற' இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தி.சு.நடராசன், நவபாரதி, பரிணாமன், சந்திரபோஸ் போன்ற இன்னபிற தோழர்களின் ஊக்கத்தால் தேர்ந்த படைப்பாளியானார். இலக்கியப் பேராசான் ஜீவா உருவாக்கிய "தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்' என்ற அமைப்பின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.

 1985-இல் வெளிவந்த "தோழர்' நாவல், அவரின் ஆரம்பக்கால கம்யூனிச தாக்கத்தால் உருவான சோஷலிச யதார்த்தவாத நாவல். ஜெயகாந்தனின் தாக்கம் த.ரா.விடம் அதிகம் இருந்ததாகக் கூறுவர். ஆயினும், தன் படைப்புகளில் தனக்கென ஓர் ஆளுமையுடன் தனித்துவ உத்தியைக் கையாண்டிருக்கிறார் த.ரா.

 தனிமனித ஒழுக்கம், வாழ்வியல் கூறுகளை மேம்படுத்தும் என்பதன் சாரமே அவரின் கட்டுரைத் தொகுப்பு. "காதலும் மனித விடுதலையும்' த.ரா.வின் கவிதைத் தொகுப்பு. உளவியல், குடும்ப உறவுகள், பாலியல் சிக்கல்களை வாழ்வும் படைப்பும் இயைந்த ஒரு நிலைப்பாட்டில் "நிழல்', "ஒரு கவிதை' என்ற இரு குறுநாவல்களிலும் சித்திரித்திருக்கிறார். படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய அவரின் மேடைப்பேச்சு கர்ஜனையோடு கூடிய சமூகச் சாடலின் சொல் வீச்சாகவும் இருந்திருக்கிறது.

 ÷1972-இல் சரஸ்வதி என்பவரை மணந்தார். இவர்களுடைய மகன் "அறம்'

 என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.

 த.ரா.வின் அங்கதச் சுவையால் உருவானதே "செந்தட்டிக் காளை'க் கதைகள். உலகளாவிய கருத்துப் பரவல் கொண்ட த.ரா., ""மனிதர்கள் மீது கொண்ட அக்கறையைக் கூறும்பொழுது, கேவிக் கேவி அழுது, ஆவேசமுற்று, சினந்து, சீறி உவகையில் துள்ளி பின் எழுதியிருக்கிறேன். என் கலைப் படைப்பிற்கான இவற்றைப் பிரசவ வேதனையாக நான் உணரவில்லை. கொடிய சமூக அமைப்பை எதிர்த்து என் பிரிய மக்களுக்காக நான் செய்கிற போர்ப்பிரகடனம்'' என்கிறார்.

 ÷மனிதம் மலர போர் முழக்கம் செய்த அவர், 2005-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி காலமானார்.

 ÷ உலகுக்கு இளம் படைப்பாளிகளை அடையாளம் காட்டும் வகையில் அவருக்கான அறக்கட்டளை ஒன்று சாத்தூரில் இயங்கி வருகிறது. "வர்க்கப் போராட்டம் நீங்கி, ஜாதி மதமில்லா சமத்துவ வாழ்க்கை வேண்டும்' என்று பொதுவுடைமைக் குரல் கொடுத்த தோழரின் தோழரான த.ரா.வின் அடையாளங்கள் இன்னும் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com