சேமச்செப்பு

நாம் இன்றைய நாளில் பெற்றிருக்கும் அறிவியல் வளர்ச்சியை சங்க காலத்திலேயே மிக எளிதாக எட்டியிருந்தனர் என்ற உண்மையை அறியும்போது வியப்பு மேலிடுகிறது.
சேமச்செப்பு

நாம் இன்றைய நாளில் பெற்றிருக்கும் அறிவியல் வளர்ச்சியை சங்க காலத்திலேயே மிக எளிதாக எட்டியிருந்தனர் என்ற உண்மையை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. இன்றைய "வெப்பக்குடுவை' போன்ற சுடுநீர் சேமிப்புக் கலத்தை (பிளாஸ்க்} சேமச்செப்பு) பண்டைய தமிழர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குறுந்தொகை பாடல் (277) வழி அறியமுடிகிறது. மேலும், இப்பாடலில் பிச்சை எடுப்பதற்கு நியதியும் ஒழுங்கு முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பது "ஓர்இல் பிச்சை' என்ற சொற்றொடர் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதனால், இதைப் பாடிய புலவர்கூட "ஓர்இல் பிச்சையார்' என்று பெயர் பெற்றார். தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு, தோழி அறிவரைக் கண்டு வினவியது என்பது பாடல் குறிப்பு.

÷இப்பாடலில் தோழி, ""அறிவனே! குற்றமற்ற தெருவில் குற்றமற்ற இல்லத்தின் வாயிலில் வெண்ணெய் விழுதுடன் செந்நெல் சோற்றுருண்டையை ஒரே இல்லத்துப் பிச்சையாகப் பெற்று வயிறார உண்டு, முன்பனிக் காலத்தில் விரும்பத்தக்க சுடுநீரையும் சேமச்செப்பில் பெறுவீரே! எம் காதலரும் நீர் வினவும் மின்னிடை நடுங்கும் வாடைக்காலத்தில் வருவார்... அறிவீர்'' என்று கூறுகிறாள்.

""ஆசுஇல் தெருவின் ஆய்இல் வியன்கடைச்

செந்நெல் அமலை வெண்மை வெள்இழுது

ஓர்இல் பிச்சை ஆர மாந்தி,

அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்

சேமச் செப்பிற் பெறீஇயரோ? நீயே -

மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை

எக்கால் வருவது? என்றி;

அக்கால் வருவர்எம் காதலரே''

இப்பாடலில் "சேமச்செப்பு' என்பது அறிவியல் வளர்ச்சியையும், "ஓர்இல் பிச்சை' என்பது ஓர் உன்னத நியதியையும், சோறுடன் வெண்ணெய் பிச்சையாக ஈயப்பெறுவது செல்வச் செழிப்பையும், குற்றமற்ற இல் மற்றும் குற்றமற்ற தெருவில் பிச்சை பெறுவது என்பது சமூக ஒழுக்க மேம்பாட்டையும் புலப்படுத்துவதாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com