சொல் வேட்டை- 43
ஒரு மனிதன் பெயர் விளங்கும்படி வாழ்ந்தாலும், வாழாவிட்டாலும், அவனை இவ்வுலகத்திற்கு அடையாளம் காட்டுவது அவனுடைய பெயர்தான்.


ஒரு மனிதன் பெயர் விளங்கும்படி வாழ்ந்தாலும், வாழாவிட்டாலும், அவனை இவ்வுலகத்திற்கு அடையாளம் காட்டுவது அவனுடைய பெயர்தான். இவ்வுலகம் முழுவதும் பெயர்கள் தோன்றிய விதமும், அவை பல்வேறு படிமங்களைப் பெற்ற விதமும், மிகச்சுவையான செய்திகள் ஆகும். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் வரை, ஒருவரது பெயருக்கு முன்னால் அவருடைய தந்தையின் பெயரிலுள்ள முதலெழுத்தை இனிஷியலாகப் போடும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஒருவருக்கு இடப்பட்ட பெயர் (given name), அவருடைய தந்தை அல்லது முன்னோர்களைக் குறிக்கும் இடைப்பெயர் (middle name) மற்றும் ஒருவர் பிறந்த குடியை அல்லது குடும்பத்தைக் குறிக்கும் கடைப்பெயர் (surname) ஆகியவை பல நாடுகளில் 12 அல்லது 15-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது. நம் நாட்டில் இவை கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட்டபோது, பல குழப்பங்கள் ஏற்பட்டன.
முதன்முறையாக வெளிநாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, விமானநிலையம் முதல் தங்கியிருந்த விடுதிவரை, எல்லா இடங்களிலும் நான், என் தந்தையின் பெயராகிய வெங்கட்ராமன் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டேன். என் பெயரைச் சொன்னபோது, அந்தப் பெயரில் எங்கும் பதிவு (booking) இல்லை என்று சொன்னபோதுதான், இக்குழப்பத்தின் அடிப்படையைப் புரிந்து கொண்டேன். அதன் பிறகுதான், பலபேர், தங்கள் தந்தையின் பெயரிலுள்ள முதலெழுத்தை பெயருக்கு முன்னால் இனிஷியலாகப் போடுவதைத் தவிர்த்து, பெயருக்குப் பின்னால் போடுவதன் பொருளைப் புரிந்துகொண்டேன். பெயருக்குப் பின்னால் போடப்படும் எழுத்தை, இனிஷியல் என்று சொல்வது எந்த அளவிற்குப் பொருத்தம் என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், இவ்வார சொல் வேட்டைக்கு வருவோம்.
பி.சண்முகவேல், "இனிஷியல்' என்ற சொல்லுக்கு தலைப்பெழுத்து என்றும். இரா.பொ.வீரையன், முதலெழுத்து என்றும், வே.குழந்தைசாமி, முகப்பெழுத்து என்னும் சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர். ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், "முன்னெழுத்து' என வழக்கமாகப் பொருள் கொண்டாலும், உயிர்கொடுத்த தன் பெற்றோரின் முதலெழுத்தைக் குறிப்பதால் "உயிரெழுத்து' என்றும், ஒருவரின் பூர்வீகத்தைக் குறிப்பதால் "பூர்வீக எழுத்து' என்றும், கருவாக்கிய பெற்றோரின் பெயரெழுத்தென்பதால் "கருவெழுத்து' என்றும் குறிப்பிடலாம் என்கிறார்.
கோ.தமிழரசன், குழந்தை உருவாகத் தாய்-தந்தை முதன்மையாக இருப்பதால், இச்சொல்லுக்கு முதலெழுத்து அல்லது முதன்மை எழுத்து என்னும் சொற்கள் பொருந்தும் என்கிறார். சோலை.கருப்பையா, பூர்வாங்க அடையாளக்குறி, வாரிசு அடைகுறி, பெயர் முன்னெழுத்து ஆகிய சொற்கள் பொருந்தும் என்கிறார். தெ.முருகசாமி, தொடக்கம் அல்லது முதலாவதாக என்று கூறலாம் என்கிறார். வெ.ஆனந்தகிருஷ்ணன், முதலெழுத்து, பெயர்முதலெழுத்து, தலைப்பெழுத்து என்றும், செ.சத்தியசீலன், சொல்லின் முதலெழுத்து, தொடக்க முயற்சி, சுருக்கக் கையொப்பம், பெயரின் முதலெழுத்து அல்லது பெயர்முதல் என்னும் சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.
கோ.மன்றவாணன், முதலெழுத்து, முன்னெழுத்து, தலைப்பெழுத்து, முகப்பெழுத்து, அறிமுக எழுத்து, பெயர்ச்சுருக்கெழுத்து முதலிய சொற்களைக் கூறியுள்ளார்.
சி.செந்தமிழச்சேய், "கடலூர் மின்வாரிய தமிழ் ஆர்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை' வெளியிட்ட ஆட்சிச் சொற்கள் அகர முதலியில் இனிஷியல் என்ற சொல்லுக்கு தொடக்கம், சுருக்கொப்பம், தொடங்குகின்ற என்றும், இனிஷியல்ஸ் என்ற சொல்லுக்கு தலைப்பெழுத்துக்கள் என்றும் பொருள் தரப்பட்டுள்ளதாகவும், மேலும், இனிஷியல் என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும், பெயரெச்சமாகவும், வினையாகவும் பொருட்படுவதால், இச்சொல்லுக்கு சுருக்கொப்பமிடு, முதலெழுத்து என்னும் சொற்களும் பொருந்தும் என்கிறார்.
என்.ஆர்.ஸத்யமூர்த்தி, முதலெழுத்து, பெயர்முதல், மூலப்பெயர்முதல், தோற்றப்பெயர்முதல் என்றும், பா.ஜம்புலிங்கம், தலைப்பெழுத்து, முதலெழுத்து, முன்னெழுத்து, முதற்பெயர், பெயர்க்குருக்கம் ஆகிய சொற்களையும் எழுதியுள்ளனர்.
மான்விழி, இனிஷியல் என்பது ஒருவரின் பெயரிலுள்ள முதலெழுத்தாக வருவது என்றும், இது பெயர்ச்சொல்லில் வரும்போது, முதலெழுத்து, முன்னெழுத்து, முதன்மைஎழுத்து என்ற பொருள்களில் வரும் என்றும், பெயரடையில் வரும்போது, முதல்நிலை, துவக்கநிலை, தொடக்கநிலை, தொடக்கம், துவக்கம் அல்லது முகிழ்த்தல் என்ற பொருள்களில் வரும் என்றும் கூறியுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இனிஷியல் என்ற சொல்லுக்கு, சொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, பெயரின் முதலெழுத்துகளை மட்டும் குறி, முதலெழுத்து மட்டும் குறித்துக் கையொப்பமிடு என்ற பொருள்களும், இனிஷியல்ஸ் என்ற சொல்லுக்கு, தலைப்பெழுத்துக்கள் என்ற பொருளும் தரப்பட்டுள்ளன.
இந்தவாரக் கடிதங்களில், 9 பேர் முதலெழுத்து என்ற சொல்லையும், 6 பேர் தலைப்பெழுத்து என்ற சொல்லையும் பரிந்துரைத்துள்ளனர். நான் எப்போதும், வாக்கெடுப்பின் அடிப்படையில் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்ற குறை, சில வாசகர்களுக்கு உண்டு. அக்குறையைப் போக்கும் விதமாக, இவ்வாரம் பெருவாரியான வாசகர்களின் பரிந்துரையை ஏற்கிறேன். தர்க்க ரீதியாகப் (logical) பார்த்தால், முதலெழுத்து என்ற சொல், பெயரிலுள்ள முதலெழுத்தைக்கூடக் குறிக்கலாம் என்றாலும், அதைவிடப் பொருத்தமான சொல் வேறில்லை என்பதால், இனிஷியல் என்ற சொல்லுக்கு முதலெழுத்து என்ற சொல்லே மிகவும் பொருந்தும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...