இருவேறு அக்கினிக் குஞ்சுகள்!

பாரதியார், சுதந்திர எழுச்சியை மக்களிடம் ஊட்டுவதற்காகக் கனல் தெறிக்கும் பாடல்களைப் பாடினார். "ஆங்கிலேய ஆட்சியாகிய பெரிய காட்டை அழிக்கும் சிறு தீப்பொறியாகிய அக்கினிக் குஞ்சு என்ற சுதந்திர வேட்கையை மக்கள் மனத்தினுள் வைத்துவிட்டேன். இனி ஆங்கிலேய ஆட்சி அழிந்து விடும்' என்று ஆனந்தக் கூத்தாடினார்.
இருவேறு அக்கினிக் குஞ்சுகள்!
Published on
Updated on
1 min read

பாரதியார், சுதந்திர எழுச்சியை மக்களிடம் ஊட்டுவதற்காகக் கனல் தெறிக்கும் பாடல்களைப் பாடினார். "ஆங்கிலேய ஆட்சியாகிய பெரிய காட்டை அழிக்கும் சிறு தீப்பொறியாகிய அக்கினிக் குஞ்சு என்ற சுதந்திர வேட்கையை மக்கள் மனத்தினுள் வைத்துவிட்டேன். இனி ஆங்கிலேய ஆட்சி அழிந்து விடும்' என்று ஆனந்தக் கூத்தாடினார்.

""அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு''

இதே போல சங்க இலக்கியத்தில், "அழகிய தலைவி காட்டை அழிக்கும் சிறு தீயாகிய அக்கினிக் குஞ்சு போலத் தன் நாட்டை அழிப்பதற்குக் காரணமாகிவிட்டாள்' என்று புலவர் மதுரை மருதன் இளநாகனார் (புறநா.349) பாடியுள்ளார்.

தலைவியைப் பெண் கேட்டு அரசன் வருகிறான். வந்தவன் அவள் தந்தையிடம் சென்று தான் கையில் வைத்துள்ள வேலின் நுனியால் தன் வியர்வையைத் துடைத்துக்கொண்டு, அதிகாரத்தோடு பெண் கேட்கிறான். ஆனால், அவளுடைய தந்தையோ அரசன் முன் பணிந்து பேசாமல் அரசனைவிடக் கடுமையாகப் பேசி, பெண் தர மறுக்கிறான். இப்படியே இவர்கள் இருவரும் பேசுவதும் மறுப்பதுமாக இருப்பதைக் கண்ட புலவர், "எங்கே அரசன் ஊரையே அழித்து விடுவானோ' என்று அஞ்சுகிறார். அப்போது, "ஐயோ இந்தத் தலைவி மரத்தினிடையே வைக்கப்படும் சிறு தீப் போல இவ்வூரையே அழிக்கும் - வருத்தும் தெய்வமாக ஆகிவிட்டாளே' என்று வருந்துகிறார்.

""நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்

கடிய கூறும் வேந்தே தந்தையும்

நெடிய வல்லது பணிந்துமொழி யலனே

இஃதிவர் படிவ மாயின் வையெயிற்று

அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை

மரம் படு சிறுதீப் போல

அணங்கா யினள் தான் பிறந்த ஊருக்கே''

பாரதி, காட்டில் பொந்திடை வைத்த சிறு தீ அக்கினிக் குஞ்சு போன்று, தலைவியும் ஊரையே அழிக்க மரத்திடை வைக்கும் சிறு தீயாகிய அக்கிக் குஞ்சு ஆகிறாள். பாரதியின் அக்கினிக் குஞ்சு அனைவராலும் விரும்பப்பட்டது; சங்கப் புலவரின் அக்கினிக் குஞ்சு அனைவராலும் அஞ்சப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com