சங்க இலக்கியங்களைப் புதிய கோட்பாட்டின் அடிப்படையிலும் புதிய அணுகுமுறையிலும் ஆய்வு செய்வது தமிழ்த் திறனாய்வுலகின் புதிய போக்காகும். அப்புதிய நோக்கியலான ஆய்வின் பாற்பட்டதாகப் புவியியல் துறையின் இன்றியமையாத கூறான "காலநிலையியல் நோக்கில் பழந்தமிழ் இலக்கியமான முல்லைப்பாட்டை நோக்கலாம்.
காலநிலையியல்
காலநிலையியல் என்பது புவியியல் துறையின் ஒரு குறிப்பிட்ட பிரிவாகும். ஓரிடத்தின் வேறுபட்ட கால நிலைக்குப் பல்வேறு கூறுகள் காரணிகளாக அமைகின்றன. காலநிலை என்பது ஒருங்கிணைக்கப்பட்ட வானிலையாகும். வானிலை என்பது வேறுபடுத்தப்பட்ட காலநிலையாகும். குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் உரிய காலநிலைக்கும் வானிலைக்குமான வேறுபாடு காலநிலையியல் எனப்படும். அதாவது மண், தாவரங்கள், குடியிருப்புகள் முதலிய கூறுகள் காலநிலை மாற்றத்திற்குரிய அடிப்படையாக அமைகின்றன. காலநிலையியல் பற்றிய புவியியல் கருத்தமைவுகளும் அதற்கான கூறுகளும் முல்லைப்பாட்டின் இலக்கியச் செய்திகளும் ஒத்த தன்மையுடன் விளங்குவதை இவ்வாய்வுரையின் மூலம் காண்போம்.
முல்லைத் திணையும் முல்லைப் பாடல்களும்
அன்பின் ஐந்திணைகளுள் ஒன்றாக அமையும் முல்லைத்திணை, ""மாயோன் மேயக் காடுறை உலகமும்'' எனத் தொல்காப்பியரால் முதலில் சுட்டப்படும் சிறப்புடையது. தொல்காப்பியத்தில் முல்லைத்தினை நான்கு இடங்களில் இடம்பெறுகிறது. முல்லைத்திணையில் காலம் பற்றிப் பேசும்பொழுது, ""காரும் மாலையும் முல்லை'' (தொல்.952) எனவும், புறத்திணை பற்றிப் பேசும்பொழுது, ""வஞ்சிதானே முல்லையது புறனே'' (தொல்.பொருள்.புறத்.7) என்பனவும் தொல்காப்பியத்தில் முல்லைத்திணை பற்றிய செய்திகளாகும். முல்லைத்திணையில் அமையும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் இருநூற்றி முப்பத்து மூன்று (233) பாடல்களாகும். பாடிய புலவர்கள் எண்பத்து மூன்று (83) பேர். இவர்களுள் ஐங்குறுநூற்றில் முல்லைத்திணைப் பாடல்கள் பாடிய பேயனார் அதிக (100) பாடல்கள் பாடியவர்.
மழைப்பொழிவு
முல்லைத் திணையின் சிறுபொழுதாகிய மாலையும் பெரும்பொழுதாகிய கார்காலமும் முல்லைப் பாட்டின் தொடக்கத்திலேயே இடம்பெறுகின்றன.
""நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழில
பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை''
(முல்லை:1-6)
அளவுகடந்த மழைப்பொழிவினைக் காட்டும் நப்பூதனார், மழை பொழிகின்ற முறைமையை இலக்கியமாக்கும் பாங்கு எண்ணுதற்குஉரியதாகும். அதாவது, அலை பெருகிய கடல் நீரினை மேகமானது முகர்ந்து, சூல் கொண்டு எழிலோடு விளங்கிய மழைக்காலத்தில் பெருமழையாகப் பொழிகிறது என்கிறார். மழைப்பொழிவில் முல்லை நிலக் கடவுளாகிய திருமாலை இணைத்துப் பேசுகிறார். பிறிதோரிடத்தில், கார்கால மழையின் காரணமாகப் பெருகும் கான் யாறு தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை, ""கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்'' (முல்லை-24) என்கிறார். மேலும், போர் முடித்துத் தலைவன் மீண்டும் வரும் கார்கால பருவத்தொடக்கத்தில் வெண்மேகம் கருக்கொண்டு மழையைப் பொழிந்தது என்பதை, ""எதிர்செல் வெண் மழை பொழியும் திங்களில்'' (100) எனச் சுட்டுகிறார். இவ்வாறு முல்லைநில முதற்பொருளான மழைப்பொழிவு காலநிலையியல் கூறுகளைப் பெற்று புதுத்திறனாய்வு நோக்கிற்கு வழி வகுக்கிறது எனலாம்.
மலர்க்காட்சி
காலநிலை மாற்றத்திற்குரிய அடிப்படைகளாக மண், தாவர வகைகள், விலங்கினங்கள், பறவைகள் என உயிர்த்தொகுதிகளைப் புவியியல் அறிஞர்கள் குறிப்பிடுவர். அவ்வகையில் முல்லைப்பாட்டில் இடம்பெறும் மலர்க்காட்சிகள், காலநிலையியல் நோக்கில் பொருந்தி வருகின்றன.
""நெல்லும் மலரும் தூஉயக் கைதொழுது'' (43) என நெடுநல்வாடையும், ""அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லோடு தூஉய்'' எனச் சிலப்பதிகாரமும் சுட்டுகின்றன. இவ்வகையில் முல்லைப்பாட்டில் விரிச்சி கேட்டு பெருமுது பெண்டிர் நெல்லோடு தூவுகின்ற மலராக ""அரும்பு அவிழ அலரி தூஉய், கைதொழுது'' (10) என "நறுவீ முல்லை' அமைகிறது.
""செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணரக் கொன்றை நன் பொன் கால,
கோடல் குவி, முகை, அங்கை, அவிழ,
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந் நிலப் பெருவழி''
(93-97)
மேற்குறித்த வரிகள், கார்பருவ மழையில் செழித்திருக்கும் முல்லை நிலத்தின் இயற்கை ஓவியமாகும். முல்லைப்பாட்டில் கூறப்பட்ட காயா, கொன்றை, காந்தள், தோன்றி, வரகு, மான் ஆகியவை கருப்பொருட்களாக அமைவதோடு, காலநிலையியல் கூறுகளை நிர்ணயிக்கின்ற தாவர வகைகளாகவும் அமைகின்றன.
மேற்குறித்த முல்லைப்பாட்டுத் தொடர்களில் ""தலைவியைப் பிரிந்திருந்த தலைவனின் மனதுக்குள் முளைத்துச் செழித்திருக்கும் தலைவி மீதான அன்புப் பெருக்கம்'' உள்ளுறையாக வெளிப்படுத்தப்படுகிறது.
உயிரினக் காட்சி
ஒவ்வொரு நிலச்சூழலுக்கும் குறிப்பிட்ட விலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன என்பது காலநிலையியலின் உட்கூறு ஆகும். யானைகள், புலிகள், கரடிகள் முதலியவை உரிப்பொருளாக உள்ளன.
"அரசன் நீண்ட நேரமாகியும் உறக்கம் கொள்ளாமைக்குக் காரணம், யானை முதலிய தன் படைகளின் நிலைமையை, (67-70) இனிமேல் போர் செய்தலும் அப்போரிலே வெற்றி கொள்வதற்கான வழிமுறைகள் போன்றவற்றையும் நினைத்துக் கொண்டிருந்தமை' என்பார் நப்பூதனார். இவ்வாறு உயிரினக்காட்சியை முல்லைப் பாட்டில் காணமுடிகிறது.
காலநிலைக் கூறுகளான, உயிரின, பயிரினக் காட்சிகள், மக்கட் சமுதாயத்தோடு கூடிய சித்திரங்களாக முல்லைப்பாட்டில் இடம்பெற்று புதிய நோக்கில் ஆய்வதற்கு இடமளிப்பது சங்க இலக்கியத்தின் அருமைத் தன்மைக்குச் சான்றாகிறது எனலாம்.
மேலாய்வாக, "காலநிலையியல்' என்ற இந்தப் புவியியல் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து சங்க இலக்கியத்தில் இடம்பெறும் முழுமையான முல்லைப் பாடல்களை நோக்க வாய்ப்பு கிட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.