கலித்தொகையில் சிவதாண்டவம்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. ""கற்றறிந்தார் ஏத்தும் கலி'', ""கல்வி வலார் கண்ட கலி'' என்னும் தொடர்களால் சிறப்பிக்கப்படும் இலக்கியம்.
Updated on
3 min read

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. ""கற்றறிந்தார் ஏத்தும் கலி'', ""கல்வி வலார் கண்ட கலி'' என்னும் தொடர்களால் சிறப்பிக்கப்படும் இலக்கியம். பண்டைக் காலத்தில் இசையோடு பாடும் இசைப்பாட்டாகவே கலித்தொகை விளங்கியது. இதைத் தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள, ""ஒற்றொடு புணர்ந்து'' (நூ.242) என்னும் நூற்பாவின் கீழ் பேராசிரியர் எழுதியுள்ள, ""அவையாவன, கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்பது'' என்னும் உரைப்பகுதி இதனை விளக்கும்.

கலித்தொகையில், பாலை பாடிய பெருங்கடுங்கோவின் பாலைக் கலியின் கடவுள் வாழ்த்துப் பாடல் பரம்பொருள் சிவபெருமானை ஏற்றிப் போற்றுகிறது. இவ்வாழ்த்துப் பாடல், ஆனந்தத்தாண்டவம் நிகழ்த்தி, ஐந்தொழில் புரியும் ஆடல்வல்லானின் மூன்று முக்கிய தாண்டவங்களைக் குறிப்பிடுகிறது. பாடல் வருமாறு:

""ஆறுஅறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து,

தேறுநீர் சடைக்கரந்து, திரிபுரம் தீ மடுத்து,

கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங்கூளி

மாறாப்போர், மணிமிடற்று, எண்கையாய் கேள், இனி

படுபறை பல இயம்ப, பல்உருவம் பெயர்த்து நீ,

"கொடுகொட்டி' ஆடுங்கால், கோடுஉயர் அகல் அல்குல்,

கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ?

மண்டமர் பலகடந்து, மதுகையால் நீறணிந்து,

"பண்டரங்கம்' ஆடுங்கால், பணைஎழில் அணை மென்தோள்,

வண்டரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?

கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத்தார் சுவற்புரள,

தலை அங்கை கொண்டு, நீ "காபாலம்' ஆடுங்கால்,

முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ? எனஆங்கு

பாணியும், தூக்கும், சீரும் என்றிவை மாணிழை அரிவை காப்ப

ஆணமில் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி'' (பா.அடி.1-15)

"ஒழுக்கநெறியை நன்கறிந்த அந்தணர்க்கு அருமறைகளை முன்னர் கூறினாய். தெளிந்த நீருடைய கங்கையின் வேகத்தை ஒடுக்குவதற்காக, நின் சடையில் அதை ஏந்தி, அடக்கி நின்றாய். கொடுஞ்செயல்கள் புரிந்த மூன்று அசுரர்களையும் நெருப்பிலிட்டு நீறாக்கி நின்றாய். வாக்குக்கும் மனத்திற்கும் எட்டாதவனாக, அவற்றைக் கடந்து, அவற்றுக்கு மேலாகவும் நிற்பாய். கடுமையான கூளிப்போர் ஆற்றும் ஆற்றலும் உடையாய். நீலமணி போலக் கறை விளங்கும் கண்டமும், எட்டுக் கரங்களும் கொண்டு விளங்குவாய். அத்தகைய ஐயனே! யான் கூறுவதையும் கேட்பீராக...!

ஒலிமிக்க பறைகள் பல ஒலி செய்ய, மாறிமாறிப் பல்வேறு வடிவங்களும் காட்டிக்காட்டி, நீ கொடுமையான "கொட்டி' என்ற கூத்தினை (கொடுகொட்டி) ஆடுவாயே...! அப்போது பக்கம் உயர்ந்து அகன்ற அல்குலினையும், கொடிபோன்ற நுண்மையான இடையினையும் உடையவளோ, தாளம் முடிந்துவிடும் காலத்தைக் குறிக்கும் "சீரை'த் தந்து நின்னருகில் நிற்பவள்?

கொடிய போர்கள் பலவற்றையும் வென்றாய். அந்த வலிமையால், பகைவரது உடல்கள் வெந்த நீற்றையும் அணிந்தாய். நீ, "பாண்டரங்கம்' என்ற கூத்தை ஆடுங்காலத்திலே, மூங்கிலழகும் அணை போன்ற மென்தோளும், வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடையவளோ, தாளத்தின் இடைக்காலத்தை உணர்த்துவதான "தூக்கை'த் தந்து நிற்பவள்?

கொலைக் குணமுடைய வேங்கையைக் கொன்று அதன் தோலை உடுத்திருப்பாய். கொன்றை மலர் மாலை தோள்களிலே கிடந்து புரள, கையிலே தலையை ஏந்திக் "காபாலம்' (மண்டை ஓடு) என்ற கூத்தினை ஆடுவாய். அப்போது, முல்லை அரும்புகளை அணிந்தது போன்ற முறுவலை உடையவள்தானோ, நினக்குத் தாளத்தின் முதலான "பாணி'யினைத் தருபவள்! என்று, அவ்விடத்திலே நீ அழித்தல் தொழிலை நடத்தும் காலங்களிலே, பாணியும் தூக்கும் சீரும் என்ற தாள காலங்களை மாட்சி பொருந்திய அணியுடையவளான உமாதேவியானவள் காத்து நிற்க, நீ ஆடுவாயோ...? அம்மையின் அந்த அருட்செயலால்தான் நீ, நின் வெம்மையை ஒடுக்கி, ஓர் உருக்கொண்டு, அன்பற்ற பொருளான எமக்கும் வந்து பொருந்தி நின்றாய்! அதன் காரணத்தைக் கூறுவாயாக?' என்பதுதான் பாடலின் பொருள்.

ஆதியும் அந்தமும் இல்லாதவன்: ஐந்தொழிலுக்கும் முதல்வன். ஊழிக்காலத்திலே அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கி, மீளவும் தோற்றுவிப்பவனும் அவனே. அவன் ஊழிப்பெருங் கூத்தினை ஆடி உலகை அழித்துக் கொண்டிருக்கிற வேளையில், அருள் சக்தியான தேவியின் கடைக்கண் பார்வைக்கு இலக்காவான். அதனால், அவனுடைய உக்கிரம் படிப்படியாகக் குறையும். மீண்டும் அருளோடு, ஆதிசக்தியின் துணையோடு, உலகைப் படைக்க முனைவான். இத்தத்துவம் சிவசக்தியின் (அர்த்தநாரி) உண்மை நிலையை விளக்குவதாகும்.

""முக்கண்ணன் முன்னொருநாள்

மூவகைக் கூத்தாடினான்''

என்றும், சிவபெருமான் ஆடிய பதினொரு வகை ஆடல்களை,

""பதினோ ராடலும் பாட்டின் பகுதியும்

விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்''

என்றும் சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது. இப்பதினோராடல்களை மாதவியும் ஆடினாளாம்.

மூவகைத் தாண்டவம்: இப்பாடலில், கொடுகொட்டி, ப(ô)ண்டரங்கம், காபாலம் ஆகிய மூவகைத் தாண்டவங்கள் கூறப்பட்டுள்ளன. கொடுகொட்டி ஊழிக்காலக் கூத்தையும், பாண்டரங்கம் திரிபுரத்தை எரியச்செய்து, அந்த நீற்றைப் பூசி ஆடிய கூத்தையும், காபாலம் நான்முகனின் ஆணவத்தை அடக்க, அவன் தலையைக் கையால் கிள்ளி எடுத்து ஆடிய கூத்தையும் உணர்த்துவன.

சிவபெருமான் முப்புரத்தை எரித்த

போது, தீப்பற்றி எரிவதைக் கண்டு

மனம் இரங்காமல் கை கொட்டி ஆடியதால் கொடுகொட்டி (கொடுங்கொட்டி) என்றாயிற்று. கொட்டிச் சேதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு. கொடுகொட்டி என்ற ஓர் இசைக் கருவியும் உண்டு.

திரிபுரம் எரித்த சாம்பலைத் தன் மேனியெங்கும் பூசிக்கொண்டு வெள்ளைநிறச் சாம்பல்காட்டை அரங்க மேடையாகக்கொண்டு அவன் ஆடிய ஆட்டம்தான் பண்டரங்கம்.

வெம்மையும் தண்மையும்:இச் சிவதாண்டவத்தின்போது அர்த்தநாரியான - ஒரு பாதியான சக்தி ஒதுங்கி நிற்பாள் என்பதும், அவளுடைய பெருங் கருணையினால் சிவபெருமானின் சினம் தணியும் என்பதும் தத்துவம். அதாவது, பிரிவு நிகழும் காலமோ வெம்மை மிகுந்த கோடைக்காலம். அவ் வெம்மையோடு, பிரிவின் வெம்மையும் சேர்ந்தால் இல்வாழ்க்கை கருகிப்போய்விடும் நிலை ஏற்படும். இந்நிலை மாற, அம்மையின் நினைவு சிவன்பால் எழவேண்டும்; அன்பும் ஆர்வமும் பிறக்க வேண்டும். இந்த சிவசக்திக் கலப்பு நிலையையே அதாவது, வெம்மையும் தண்மையும் இணையும் வாழ்வியல் நிலையையே சிவனின் கோரத் தாண்டவமாகவும், அதனால் துடிப்புற்ற சக்தி அவனுக்குத் தன் நினைவு தோன்றவும், அருள் பிறக்கவும் -

சுரக்கவும் தாளம் உணர்த்தி நிற்பதாகவும் புலவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை ஜெயங்கொண்டாரும்,

""புவன வாழ்க்கைச் செயல் வண்ணம்

நிலைநிறுத்த மலைமகளைப்

புணர்ந்தவனைச் சிந்தை செய்வோம்''

எனக் கலிங்கத்துப்பரணியில் போற்றியுள்ளார்

சிவசக்தி உறவு அனைத்து உயிர்களின் ஆண்-பெண் இல்லற உறவுக்கு மூலமாகும். கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலின் வழி சிவசக்தியின் ஐக்கியமும், கணவன்-மனைவியின் ஒருமைப்பாடும் - ஒற்றுமையும், சிவதாண்டவங்களும், சிவபெருமானின் பெருங்கருணையும் அதன்மூலம் சைவ சித்தாந்தக் கருத்துகளும் விளக்கப்பட்டுள்ளன. அம்மையப்பரின் இக்கோலத்தைத் தொன்மைக்கோலம் என மணிவாசகப் பெருந்தகை (திருவாசகம், திருக்கோத் தும்பி) போற்றிப் புகழ்வார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com