இரும்புண்ட நீர்!

சங்க இலக்கியப் புறநாநூற்றுப் பாடல் ஒன்றில் "இரும்புண்ட நீர்' உவமையாக வருகிறது. "கானப்பேர்' இன்று காளையார் கோயில் என்று வழங்கி வருகிறது. அவ்வூரை ஆட்சிபுரிந்தவன் வேங்கைமார்பன். பாண்டியன் உக்கிரப் பெருவழுதியிடம் பகை கொண்டான் அவன்.
Published on
Updated on
2 min read

சங்க இலக்கியப் புறநாநூற்றுப் பாடல் ஒன்றில் "இரும்புண்ட நீர்' உவமையாக வருகிறது. "கானப்பேர்' இன்று காளையார் கோயில் என்று வழங்கி வருகிறது. அவ்வூரை ஆட்சிபுரிந்தவன் வேங்கைமார்பன். பாண்டியன் உக்கிரப் பெருவழுதியிடம் பகை கொண்டான் அவன். போர் நிகழ்ந்தது; பாண்டியன் வெற்றி பெற்றான். வேங்கைமார்பன் தோல்வியுற்றான். தோல்வியுற்ற தன் கானப்பேரெயிலை இனி பாண்டியனிடம் இருந்து அவன் மீட்க முடியாது என்பதற்கு இந்த "இரும்புண்ட நீர்' உவமையாக அமைத்து ஐயூர் மூலங்கிழார் பாண்டியனைப் பாடிப் புகழ்கிறார்.புறநானூறு 21-ஆம் பாடலில் வருகின்ற தொடர் மட்டும் ஈண்டு சிந்தனைக்குரியது.

""கருங்கைக் கொல்லன் செந்தீமாட்டிய

இரும்புணீரினும் மீட்டற் கரிதென

வேங்கைமார்பன் இரங்க''

என்ற வரியில், "வலிய கையை உடைய, கொல்லனால் செந்தீயின்கண் மாட்டப்பட்ட இரும்புண்ட நீரினும், மீட்டற்கரிதெனக் கருதி வேங்கை மார்பன் வருந்த' என்பது பொருள்.

சுந்தரர் திருக்கழுமலத் திருப்பதிகத்தின் முதல் பாட்டில்,

""ஏதிலென் மனத்துக்கு ஓர் இரும்புண்ட நீரை

எண்வகை ஒருவனை எங்கள் பிரானை''

என்று புறநாநூற்று உவமையை எடுத்துரைத்துள்ளார். இப்பாடலில் தம் மனத்தை இரும்பாகவும், கடவுளை நீராகவும் குறிப்பிடுகிறார். இரும்புண்ட நீர், அவ்விரும்பினின்றும் மீளாதவாறு போலத் தம் திருவுள்ளங்கொண்ட சிவபெருமான், அத்திருவுள்ளத்தினின்றும் மீளான் என்று வருவதில் முன்னோர் மொழி பொருளைச் சுந்தரர் பொன்போல் போற்றியதற்கு எடுத்துக்காட்டாயுள்ளது.

பெருங்கதையில் செவ்வைச்சூடுவார், இவ்வுவமைத் தொடரை ""கனலிரும்புண்ட நீரின் விடாது'' எனக் குறித்துள்ளார்.

திருமூலர் தம்மை நீராகவும் தம்மை உள்வாங்கிய பெருமானை இரும்பாகவும் குறித்துள்ளார். பரஞானம் தன்னுள் அடங்கிய ஆன்மாவை அடக்கிக் கொள்வதையே "இரும்புண்ட நீர்' என உள்ளவாங்கியதாகக் கூறுவர். இது ஞானயோகத்துக்கு உவமையாயிற்று.

""பரமுடன் நந்தமையுண்டு மெய்ஞ்ஞான

நேயாந்தத்தே நந்தியிருந்தனன்

நாமறியோமே''

குருவை இரும்பாகவும், சீடனை நீராகவும் குறிப்பிடுகிறது திருவிளையாடற் புராணம். ""பார்த்த பார்வையால் இரும்புண்ட நீரெனப் பருகுந் தீர்த்தன்'' என்ற வரியில் வாதவூர் அண்ணல் (மாணிக்கவாசகர்), ஆசாரியனிடம் அகப்பட்ட அருமையை இவ்வுவமை மூலம் அறியலாம்.

சீதையைக் கவர்ந்த இராவணன், "காய்ந்த இரும்புண்ட நீர் மீள்வதில்லை; அது மீள்வது என்றாலும் யான் கவர்ந்த சீதை என்னிடமிருந்து மீளாள்' என்ற கூற்றில்,

""இரும்புண்ட நீர் மீள்கினும் என்னுழையில்

கரும்புண்ட சொல் மீள்கிளல் காணுதியால்''

என, "இரும்புண்ட நீர்' மீட்டற்கரிது என்ற பொருளில் கம்பர் பாடியுள்ளார்.

திருவாய்மொழியில் நம்மாழ்வாரும் "இரும்புண்ட நீர்' உவமையை அருளிச் செய்துள்ளார்.

""தீர இரும்புண்ட நீரதுபோல என்னாருயிரை

ஆரப் பருக எனக்கு ஆராவமுதானாயே''

என்ற பாடலில் "இரும்புண்ட நீர்' என்ற உவமை, நீர், உயிர்க்கு ஒப்பாகவும், பெருமானுக்கு ஒப்பாகவும் கூறப்பட்டு, இரும்பு, நீரைத் தன் காய்ச்சல் தீரப்பருகுதல், உயிர் பெருமானைத் தன் தாபம் தீரப் பருகியதற்கும், பெருமான் முற்றப் பருகி உயிரை அகப்படுத்தியதற்கும் ஒப்பாக அருளப்பட்டது. இவ்வாறு "இரும்புண்ட நீர்' உவமை, சங்க காலத்திலிருந்து தொடர்ந்து சமயப் பெரியோர்களாலும் எடுத்தாளப்பட்டுள்ளதை நன்கு அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com