திருக்குறளில் "கற்றல்' சிந்தனைகள்!

'கற்றல்' என்பது கல்விக் கொள்கையின்படி பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வாகும்.
Updated on
2 min read

'கற்றல்' என்பது கல்விக் கொள்கையின்படி பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வாகும். இக்கல்வியை ஒருவன் இறக்கும் வரை தொடர்ந்து கற்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

""யாதானும் நாடாமால் ஊராமால் என்றொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு'' (397)

என்று சிந்தித்துள்ளார். மேலும், கற்றல் என்பதை, "அறியாமை' உள்ளது என்பதை "அறியும்' நிகழ்வாகும் என்கிறார். இதை, சிற்றின்ப நோக்கில் வைத்து, தலைவன்-தலைவியின் இடை வினை இன்ப நிகழ்வின் மூலம் காமத்துப்பாலில்,

""அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு'' (1110)

என்பதன் மூலம் தலைவியிடம் இன்பம் நுகரும் தலைவனுக்கு ஒவ்வொரு கணமும் அனுபவிக்கப்படும் சிற்றின்பமானது எவ்வாறு உள்ளது எனின், ஏற்கெனவே, அதாவது, ஒரு கண நேரத்திற்கு முன்பு அனுபவித்த இன்பம் பொய்த்துவிட்டது. காரணம், அதனைக் காட்டிலும் நிகழ்காலத்தில் அனுபவிக்கப்படும் இன்பமானது புதுமை பயப்பதாக உள்ளது என்னும் கருத்தை கற்றலோடு வைத்து சிந்தித்துள்ளார் வள்ளுவர்.

இக்குறட்பாவில், "அறிதோறும் அறியாமை' என்னும் சொற்றொடரை கல்வியியல் கொள்கையாக்கி, தமிழ்ச் செய்யுள் இலக்கண வழக்கின்படி, "உவமை' ஆக்கியுள்ளார். ""உவமை என்பது உள்ளுங்காலை உயர்ந்ததன் மேற்றே'' என்பதற்கொப்ப கையாண்டுள்ளார். அதாவது, மேற்சுட்டிய குறட்பாவில் இடம்பெறும் குறளுக்கு தலைவன், தலைவியின் சிற்றின்ப அனுபவத்தை உவமேயமாகவும், கல்விக் கொள்கையை உவமையாகவும் சித்திரித்துள்ளார்.

திருக்குறளில் "கற்றல்' என்பது செவிச்செல்வத்தால் "கேட்டல்' என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளது. இதை,

""கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி'' (356)

எனும் குறளில், "கற்றீண்டு' என்ற சொல்லுக்கு, "தேசிகர்பால் கேட்டல்' என்ற உரையினை வகுத்துச் செல்கிறார் உரையாசிரியர் பரிமேலழகர்.

கற்பதில் தெளிவு

ஒருவர் கற்பதை தெளிவாகக் கற்க வேண்டும். தெளிவு என்பது தாம் கற்றவற்றை கற்றவாறே பிறருக்குப் புலப்படுத்தவும் வேண்டும். கற்பதோடு அல்லாமல் கற்றபடி நிற்க வேண்டும் என்ற உண்மையை 391-ஆவது குறளில் கூறியுள்ளார். மேலும், "கற்பவை' என்ற சீர் மூலம் காலத்திற்கேற்றாற் போல கல்வி நிலையில் மாறும் எனும் கருத்தினை கற்பவை என்பதன் மூலம் விளக்குகிறார். இது, தற்போது கல்வியாளர்களால் கூறப்படும் "மாற்றம் என்பது மாறாதது' எனும் கல்விக் கொள்கைக்கு அரண் சேர்ப்பதாக உள்ளது.

மேலும், தாம் கற்றவற்றை பிறருக்கு விளங்கும் வண்ணம் எடுத்துச்சொல்லவும் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல், கற்றவற்றால் யாதொரு பயனும் இல்லை. இதை, ஓர் அழகிய உவமையின் மூலம் வள்ளுவர் கையாளுகிறார். அதாவது, "மலர்' என்றால் "வாசம்' வீசவேண்டும். அவ்வாறு வாசம் வீசாத மலர் கொத்துக் கொத்தாக மலர்வதால் என்ன பயன்? என்பதை,

""இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்'' (650)

என்பதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். ஐம்புலப் பயிற்சி மூலம் கல்வி நடைபெற வேண்டும் என்று புரொபல் முதலிய கல்வியாளர்கள் கூறுகின்றனர். இந்த புலப்பயிற்சிக் கல்வி மூலம் கற்றல் சிறப்பாக நடைபெறும் என்பது ஆங்கில வழி (அ) மேலை நாட்டுக் கல்வியாளர்களின் கொள்கை. இக்கொள்கையை, திருவள்ளுவர் முன்பே, காமத்துப்பாலில் வைத்து சிந்தித்துள்ளார்.

கற்றல் என்பது, தாம் கற்றவற்றை, கற்றவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் புலப்படுத்த வேண்டும் என்பதை, 722-ஆவது குறள் வாயிலாக "கற்றல்' எப்படி அமைய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

""கல்வி அறிவு பெற்ற ஒரு மனிதனின் சிறப்பான பண்பு, அவன் எப்பொழுதும் பொது நன்மை குறித்துக் கருதலேயாகும்'' என்று (நூல்: கல்வியின் கருத்தியல் அடிப்படைகள், பக்.42) குறிப்பிடப்படுகிறது. இக்கருத்தினை வள்ளுவர் "கல்வி' அதிகாரத்தில், குறள் 399-இல் சிந்தித்துள்ளார். இதன் மூலம் கற்றல் கொள்கையுடன் அதன் பயனையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

கற்றல் என்பது கேட்டல் மூலமாகவும் நடைபெறும். அதாவது, கேள்விச் செல்வத்தின் மூலம் திருவள்ளுவர் பல கற்றல் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com