பறவை காவலன்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்களை, ஆறரிவுடையன எனப் பகுத்து, உணர்த்துதற்குத் தொல்காப்பியர்க்கு வாய்த்தது, அன்றைய இயற்கைச் சூழலே. தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றி, வேறுபாடின்றி உறவு கொண்டாடி வாழ்ந்தது ஒரு புதுமையாகும்.
பறவை காவலன்
Published on
Updated on
1 min read

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்களை, ஆறரிவுடையன எனப் பகுத்து, உணர்த்துதற்குத் தொல்காப்பியர்க்கு வாய்த்தது, அன்றைய இயற்கைச் சூழலே. தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றி, வேறுபாடின்றி உறவு கொண்டாடி வாழ்ந்தது ஒரு புதுமையாகும்.

"பறவை காவலன்' எனப் போற்றப்பட்ட, ஆஅய் எயினன் தனது நாட்டில் உள்ள காடுகள், தோட்டம் துரவு அனைத்திலும் பறவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல், தானே முன்நின்று அவற்றை வளர்த்து வந்துள்ளான். அவன் அருளுடையவன், சொன்ன சொற்பிழையாதவன். "புன்னாடு' என்னும் நாட்டினை, நன்னன் என்பான் துன்புறுத்திய காலத்து, அந்நாட்டு மக்களைக் காப்பதாக ஆஅய் எயினன் உறுதி கூறினான்.

நன்னனுடைய நண்பன் மிஞிலி. புன்னாடு காரணமாக, ஆஅயுடன் பாழிப் பறந்தலையில் நன்னன் போர் தொடுத்தனன். அவனுக்குத் துணையாக மிஞிலி என்பானும் போரிடலானான். கடும்போரில் மிஞிலியால் ஆஅய் எயினன் கொல்லப்பட்டான். அது நண்பகற்போது. கடும் வெயில். நிலைமை அறிந்த பறவைகள் எல்லாம் ஒருங்குகூடித் தம் சிறகுகளால் குடைபோல பந்தரிட்டு, நிழலைச்செய்து ஆஅயின் உடலைப் பாதுகாத்தன. இக்காட்சியைக் காணச் சகிக்காத நன்னனுக்கு பொறாமையால் கடுஞ்சினம் பொங்கியதாம்.

""..... ..... ஆஅய் எயினன்

அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை

இழைஅணி யானை இயல்தேர் மிஞிலியொடு

நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து

ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு

அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று

ஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலி

நிழல் செய்து'' (பரணர், அகம்.208)

அனைத்துப் பறவைகளும் தத்தம் சிறகுகளை விரித்துக் குடைபோல் கோலி, நிழல்செய்து "புள்ளிற்கு' ஏமமாகிய (காவலாகிய) அருளாளனைக் காத்தனவாம். அகநானூறு 142, 181, 396 ஆகிய பாடல்களிலும் பரணர் ஒருவரே இச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் சிறுமலை அருகே ஒரு நிலக்கிழார், அகவை முதிர்ந்த நிலையில் தோப்பிலேயே தங்கி, உணவு உண்டு வாழலானார். ஒரு நாயையும் பல பறவைகளையும் போற்றி, உணவு வேளையில் தமக்கு வந்த உணவில் ஒரு பங்கைப் படைத்து அவை உண்ணச் செய்து வந்தார். அவர் காலமான அன்றும் பிறகும், அவர் படுத்திருந்த இடத்தையே நாய் சுற்றிச்சுற்றி வந்ததாம். நாள்தோறும் குறிப்பிட்ட உணவு வேளையில் பறவைகள் வந்து, பெரியவரைக் காணாது கூக்குரலிட்டுக் கூடிக் கத்தியதாம். இவ் அவலக் காட்சியைப் பலரும் பார்த்து வியந்தனராம்!

மனித உறவுகளைவிடச் சிற்றுயிர்களின் உறவு மேலானது போலும் என்று எண்ணத் தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com