மரபுத் தொடர்கள்...

பண்டையத் தமிழ்ச் சான்றோர்களும், முன்னோர்களும் வழிவழியாக பொருள் பொதிந்த சொற்றொடர்கள் பலவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
Published on
Updated on
1 min read

பண்டையத் தமிழ்ச் சான்றோர்களும், முன்னோர்களும் வழிவழியாக பொருள் பொதிந்த சொற்றொடர்கள் பலவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அச்சொற்களை வழிவழியாக வழங்கி வந்த முறையை "மரபுச் சொற்கள்' என்று கூறுவர். தமிழில் கணக்கற்ற மரபுச் சொற்கள் வழங்கி வந்திருக்கின்றன. "அவன் அடாவடியாகப் பேசுகிறான்', "வம்பு தும்புக்குப் போகாதே', "அந்த இடத்தில் ஒரே அமளி துமளி', "அவன் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்கிறான்', "ஆர அமர உட்கார்ந்து பேசுவோம்' - இவ்வாறு நம் முன்னோர் பேசும் மரபுச் சொற்கள் ஏராளம். அம்மரபு வழிவந்த சொற்களை மரபு தவறி பேசுவதோ, எழுதுவதோ வழு (குற்றம்-பிழை) எனவும் கூறப்படுகிறது. அம்மரபுச் சொற்களுள் சிலவற்றை அகர வரிசைப்படி காண்போம்; கற்போம்; அன்றாட வாழ்வில் தொடர்ந்து பேசிப்பழகி, பயன்படுத்தி, தமிழ் மரபுச் சொற்கள் (தொடர்கள்) அழியாமல் காப்போம்!

அகட விகடம் - தந்திரம், தட்டுமாற்று

அடரடி படரடி - பெருங்குழப்பம்

அடாதுடி - தீங்கு, தீச்செயல்

அடாபிடி - கொடுஞ்செயல்

அடிதடி - சண்டை

அடியடியாக - தலைமுறை தலைமுறையாக

அண்டப் புரட்டன் - பெருந்தீயன்

அமளி பண்ணுதல் - சச்சரவு உண்டாக்குதல்

அரட்டல் புரட்டல் - நோய் முற்றுதலால் ஏற்படும் வலி

அரிப்பரித்தல் - கொழித்தெடுத்தல்

அலக்கலக்காய் - தனித்தனியாய்

அல்லோல கல்லோலம் - ஆரவாரம்

அலைகுலையாக்குதல் - நிலைகுலையச் செய்தல்

அல்லும் பகலும் - இரவும் பகலும்

அவசரக் குடுக்கை - பதற்றக்காரன்

அழிவழக்கு - வீண் வழக்கு

அளப்பளத்தல் - அலப்புதல், முறுமுறுத்தல்

அளவளாவுதல் - கலந்து பேசுதல்

அளவு படுத்தல் - வரையறை செய்தல்

அறக்கப்பறக்க - விரைவாக, விழுந்து விழுந்து

அறைகூவுதல் - போருக்கு அழைத்தல்

அறைமுறையிடுதல் - குறை தெரிவித்தல்

அறிதுயில் - யோக நித்திரை

அறிவறியாக - விளக்கமாக, தீர

ஆலாப்பறத்தல் - திண்டாடுதல்

ஆறல் பீறல் - பயனற்றது

ஆறவமர - அமைதியாய்

இசைகேடு - சீர்கெட்ட நிலை

இடக்கு முடக்கு - சங்கடம்

இடுக்குப்பிள்ளை - கைக்குழந்தை

இடுமருந்து - வசிய மருந்து

இடைச்சுவர் - இடையூறு

இருவல் நொருவல் - இடிந்தும் இடியாதும் உள்ள அரிசி முதலியன, நன்றாக மெல்லப்படாத உணவு.

இல்லாததும் பொல்லாததும் - பொய்யும் தீங்கு விளைவிப்பதும்

இலம்படுதல் - வறுமையடைதல்

இலைமறைகாய் - மறைபொருள்

இன்னார் இனியார் - பகைவரும் நண்பரும்

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com