

அவையடக்கம்' என்ற சொல்லை அவை+அடக்கம் எனப் பிரிக்கலாம். அவை-சபை. அவை எனும் சொல் அவையில் உள்ள மக்களையே உணர்த்தும்; ஈண்டு இடவாகுபெயர். அடக்கம் என்ற சொல், அடக்கம் தெரிவிக்கும் பாடலைச் சுட்டும்; ஈண்டு தொழிலாகுபெயர். ஆனால், தற்போது "அவையடக்கம்' என்ற சொல் அவைக்கு முன்பு தான் இயற்றிய நூலோடு நிற்கும் புலவன், "எளியேன்', "கடையேன்', "அறியேன்' என்று தன்னைத்தானே தாழ்த்தி (இகழ்ந்து) கூறிக்கொள்ளும்படியானச் சொற்களே நம் நினைவுக்கு வருகின்றன.
""வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே'' (பொரு.செய்.111) என்பார் தொல்காப்பியர். அதாவது, "அவையை வாழ்த்துதல், அவையத்தார் அடங்கு மாற்றால் இனியவாகச் சொல்லி அவரைப் புகழ்தல்' என்கிறார். மேலும்,
""அவையடக் கியலே யரில்தபத் தெரியின்
வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின்''
(பொரு.சொல்.113) என்றார்.
"வல்ல கூறுதல்' என்று சங்க இலக்கியமான அகநானூற்றில் (பா.352) ""அன்பினன் என நீ வல்லகூறி'' என்று பயிலுகிறது. வல்ல கூறி - சிறப்பித்துக் கூறி; வல்லா கூறுதல் - சிறப்பியாது கூறுதல். அதாவது, சிறப்பியாது தன்னுடைய நுட்பமான கருத்தைக்கூற நேர்ந்தாலும், கேட்போர் கொள்ளுமாறு வகுத்துக்கூற வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். இதன் மூலம் "நூல் நுவலும் முறையை'த்தான் "அவையடக்கம்' என்று கூறுகிறாரேயன்றி, அவைக்கு முன் தமிழ்ப் புலவன் தன்னைத் தாழ்த்திக் கூறவோ, அவையில் உள்ளவர்களைப் புகழ்ந்து கூறவோ நூற்பா வகுக்கவில்லை என்பது தெளிவு; அது தமிழ் நெறியும் அன்று. சங்க இலக்கிய நூல்களில் அவையடக்கப் பாடல்களைக் காண இயலாது.
இளங்கோவடிகள், ""நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்'' என்று உரத்தக் குரலில், அழுத்தமாகத் தனது அறிவும் தெளிவும் தோன்றும் வண்ணம் அறிவித்தார். எனவே, இளங்கோவடிகளின் காலம் வரையிலும் அவையடக்கத்திற்கு தற்போது உள்ள பொருள் தோன்றவில்லை என்றே கூறலாம்.
திருவள்ளுவர் "அவை அஞ்சாமை' என்று ஓர் அதிகாரம் வகுத்துள்ளார். ""ஒளியார் முன் ஒள்ளியராதல்'' (714) என்றும், ""நூலொடென் நுண்ணவை அஞ்சுபவர்க்கு?'' (726) என்றும் தமிழ்ப் புலவரைத் தட்டி எழுப்பி நம்பிக்கை ஊட்டினாரேயன்றி, பிறருக்கு அடங்கித் தன்னைத் தாழ்த்தவோ, தாழ்த்திக் கூறவோ திருவள்ளுவர் எந்த இடத்திலும் கூறவில்லை. ஆனால், அவையில் பணிவுடன் நடக்க வேண்டும் என்பது அவர்தம் கருத்து. பணிவு வேறு; தன்னை இழிவாகக் கூறிக்கொள்வது வேறு.
பிற்காலத்தில் தோன்றிய அவையடக்கப் பாடல்கள் தொல்காப்பிய நெறிக்கு மாறுபட்டிருப்பினும், அவை அளிக்கும் உவமை நயங்கள் படித்து மகிழத்தக்கவை. கம்பர், வில்லிப்புத்தூராழ்வார், புலவர் புகழேந்தி போன்றோரின் அவையடக்கப் பாடல்களை மறக்கத்தான் முடியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.