நல்லார் யார்?

நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்கநல்லார் சொற்கேட்பதும் நன்றே - நல்லார்குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடுஇணங்கி இருப்பதுவும் நன்றே!
நல்லார் யார்?
Updated on
1 min read

நல்லாரைக் காண்பதும் நன்றே! நலமிக்க

நல்லார் சொற்கேட்பதும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்றே!

ஒளவையார் இயற்றிய மூதுரை பாடல் இது. இப்பாடலை அரசவையில் ஒüவையார் பாட, அதைக் கேட்ட மன்னன், ""இப்பாடல் நீதிநெறியைக் கூறும் பாடல் போன்று தோன்றினாலும், இது அகத்துறை சார்ந்த பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது. யாரேனும் இதை "சரி' என்று ஏற்றுக்கொண்டு விளக்கினால், அவருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பேன்'' என்றான்.

அகத்துறைக்கான எந்தவிதமான கருத்தும் இப்பாடலில் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவையோர் கூறிவிட்டனர். அரசன், ஒüவையை நோக்கி, ""ஒüவைப் பிராட்டியே! இப்பாடலில் காதற்சுவைக் கருத்துள்ளது என்ற என் கூற்றை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?'' என்றான்.

""அரசே! மக்களுக்குப் பொதுவான அறிவுறையைக் கூறும்படிதான் இப்பாடலைப் பாடியுள்ளேன். ஆனால், தங்களின் மதிநுட்பத்தால் அதில் அகப்பொருள் கண்டுள்ளீர்கள். ஆகவே, உங்கள் கூற்றிலும் உண்மை இருக்கிறது; உங்கள் கூற்றை நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்றார்.

""அப்படியானால், இப்பாடலுக்கு விளக்கம் கூறுங்கள்'' என்றான் அரசன்.

""நல்லார் என்ற சொல்லுக்கு "பெண்' என்ற பொருளும் உண்டு. எனவே, "நல்லாரைக் காண்பதுவும் நன்றே' என்றால், தன் மனதுக்கினிய காதலியைக் காண்பது நன்று என்றும் பொருள் கொள்ளலாம். தொடர்ந்து அந்த நலமிக்க காதலியின் சொற்களைக் காதுகுளிரக் கேப்பதுவும் நன்று; அந்தக் காதலியின் நற்குணங்களைக் கூறி அவளைப் புகழ்வதும் நன்று; அத்தகைய காதலியோடு இணங்கி வாழ்வதுவும் நன்று என்றும் இப்பாடலுக்கு காதல் சுவை அமையுமாறும் பொருள் கூறலாம். இதைத்தானே அரசே நீங்கள் எண்ணத்தில் கொண்டிருந்தீர்கள்?'' என்றார்.

அரசன் பெருமகிழ்ச்சி கொண்டு, ""ஒüவைப் பிராட்டியே! என் உள்ளக் குறிப்பை அறிந்து பொருள் கூறிவிட்டீர்கள். உங்கள் புலமையை வெல்ல யாரால் முடியும்? உங்கள் மூலமாகவே அதை அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் இந்த வினாவை எழுப்பினேன். நான் அறிவித்தபடி இந்த ஆயிரம் பொன் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்றான்.

""அரசே நான் கூழுக்குப் பாடுகின்றவள். உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். ஆயிரம் பொன்னை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? இதை உங்கள் அவைக்களப் புலவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிடுங்கள்'' என்று கூறினாராம் ஒüவையார். இவரைப் போன்ற "நல்லாரை' இப்போது காண முடியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com