

தலைவியைக் காணத் தலைவன், குறியிடமாகிய சிறைப்புறத்தே (வீட்டைச் சுற்றியுள்ள வேலியின் வெளிப்பக்கம்) ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறான். அவன் ஒதுங்கி நிற்பதை அறிந்த தலைவி, தன் தோள் மெலிவை அவனுக்கு எடுத்துக்கூறி விரைவில் தன்னை மணந்து கொள்வதற்கு அவனைத் தூண்ட வேண்டும் என விரும்பி, தன் தோழிக்கு உரைப்பதுபோல இவ்வாறு கூறுகிறாள்.
""தோழி! பழையதாகிய கடல் அலைகள் அளைந்தாடி மகிழ்கின்ற, கடற்பறவைகள் ஒலி செய்திருக்கும் கடற்கரைச் சோலையிலே, பூங்கொத்துகள் மலர்ந்த புன்னை மரம் விளங்கும் மேட்டின் நிழலிடத்தே, தலைவனோடு சேர்ந்திருந்த காலத்தில் தலைவனை என் கண்கள் கண்டன, எம் செவிகள் அவன் சொற்களைக் கேட்டதும் அன்றைக்குத்தான்! அதன் பின்னர், எனது பரந்த மென்மை கொண்ட என் தோள்கள், அவன் என்னை மணந்தால், தாம் மாட்சி கொண்ட அழகினை அடைந்தும், என்னைப் பிரிந்தால் சோர்வுற்றும் போகின்றனவே! இது எதனாலோ?'' என்கிறாள் தலைவி. இதன் கருத்தாவது, தலைவன் இடையீடின்றி என்னருகே இருக்க வேண்டும். விரைவில் மணந்துகொண்டு, பிரிவின்றி ஒன்றுபட்டிருக்கும் இல்வாழ்வை வாழவேண்டும்' என்று தலைவி நினைப்பதாகும்.
நெய்தல் திணைப் பாடலான இதைப் பாடியவர் வெண்மணிப்பூதியார். தலைவன் விரைவில் "தன்னை மணப்பின் நலன்' எய்தும் என்பதைத் தோள்கள் நெகிழ்ந்ததன் மூலம் தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்திய தலைவியின் பாடல் இதுதான்.
""இதுமற் றெவனோ தோழி! - முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்ளிமிழ்க் கானல்,
இணரவிழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டன மன்எம் கண்ணே; அவன்சொல்
கேட்டன மன்எம் செவியே; மற்றவன்
மணப்பின் மாணலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, என்தடமென் தோளே?''
(குறுந்-299)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.