நம்பி - நங்கை

தமிழிலக்கண இலக்கியங்களில் நம்பி நங்கை என்னும் சொல் ஆளப்பெற்றுள்ள நிலையை ஆராய்வோம்.
நம்பி - நங்கை
Published on
Updated on
1 min read

தமிழிலக்கண இலக்கியங்களில் நம்பி நங்கை என்னும் சொல் ஆளப்பெற்றுள்ள நிலையை ஆராய்வோம். ஆணிற் சிறந்தவரை நம்பி என்றும், பெண்ணிற் சிறந்தவரை நங்கை என்றும் அழைப்பது தமிழர் மரபு. தொல்காப்பிய எழுத்ததிகாரத் தொகை மரபில் உயர்திணைப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறும் போது அவற்றுள், இகர ஈற்றுப் பெயர் திரிபிடன் உடைத்தே (13) என்னும் நூற்பா இடம்பெற்றுள்ளது.

இதற்கு இளம்பூரணர் "நம்பிப்பூ, நம்பிப்பேறு' என்று சான்று காட்டியுள்ளார். சங்க இலக்கியங்கள் "அறிவுடைநம்பி' முதலான பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. மாணிக்கவாசகர் சிவபெருமானை "நம்பி' என்ற பெயரால் குறிப்பிட்டுள்ளார் என்பதைத் திருவாசகம், "நம்பி இனித்தான் நல்காயே' என்னும் வரி (கோயில் மூத்த திருப்பதிகம், பா.9) உணர்த்துகிறது.

தஞ்சை பெரியகோயில் கல்வெட்டு ஒன்றில் "நம்பி ஆரூரனார்க்கும் நங்கை பரவையார்க்கும்' என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. அத்தொடர் வழி சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் நம்பி என்ற திருநாமம் இருந்தமை புலனாகிறது. இவ்வாறு நம்பி என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற ஆரூரர் (சுந்தரர்) தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில் ஒன்பது நம்பிகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை வருமாறு:

நம்பி, வேல்நம்பி (3 முறை), சீர்நம்பி, பெருநம்பி, ஒருநம்பி, அருநம்பி, தார்நம்பி.

திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியவரும், பன்னிரு திருமுறைகளைத் தொகுத்து வழங்கியவரின் பெயரும் நம்பியாண்டார் நம்பி என்பது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நம்பி என்ற நல்ல தமிழ்ப் பெயரை இக்காலத் தமிழர்கள் தம் பிள்ளைகளுக்கும் பெயராக வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பி என்ற பெயருக்குள்ள சிறப்பைப் போன்று நங்கை என்ற பெயர்க்கும் சிறப்புண்டு என்பதை அறிஞருலகம் ஆராயலாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com