
தமிழின் தொன்மை, வளம், சீர்மை, சிறப்பு எல்லாம் தோண்டத் தோண்ட, துருவி துருவி ஆராய ஆராயப் "புதையல் எடுத்ததுபோல' வெளிப்படுகின்றன.
அரசர்கள் செல்வர்களிடம் செல்வம் குவிந்தால் அவற்றை எங்கே சேமித்து வைப்பது? அதனைப் பூமிக்கு அடியில் புதைத்து வைத்தார்கள். பெரும்பாலும் ஆற்றோரங்களில் புதைத்து வைப்பதுண்டு. புதைத்த இடத்தில் அடையாளத்திற்காக, ஒரு மரத்தை நட்டு வளர்ப்பார்கள். பெருஞ் செல்வரிடம் ஒரு பொலிவு காணப்படுவது போல, "நிதி'யில் மேல் நிற்கும் மரம்கூடப் பொலிவுடன் விளங்குமாம். "உடைமை' ஒரு மெய்ப்பாடு என்றார் தொல்காப்பியர். அதற்கு உரை எழுதிய பேராசிரியர் ""அஃதாவது நிதிமேல் நின்ற மரம்போலச் செல்வமுடைமையான் வரும் மெய்ப்பாடு'' என விளக்கினார். ஒüவையார், ""பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்து''எனப் பாடுவதால் 14, 15-ஆம் நூற்றாண்டு வரை இப்பழக்கம் இருந்தது எனலாம்.
சேரமன்னன் ஒருவன் இவ்வாறு புதைத்துவைத்து, பிறகு அடையாளம் தெரியாமல் தவறிப்போய், நிலம் தின்னும்படி விடப்பட்டது என மாமூலனார் பாடுகிறார்.
""நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய நிறையக் குவைஇ அன்று அவண்
நிலம் தினத் துறந்து நிதியத்து அன்ன...''
(அகம்.127)
ஆம்பல் ஒன்று வாய் நிறைய - ஆம்பல் மலர்போலும் ஒரு கொள்களத்தில், எண்ணிலடங்காத செல்வத்தைப் புதைத்தமை தெரிகிறது. மாமூலனார் பிறிதொரு பாடலில் இப்பழக்கம் வடநாட்டிலும் இருந்ததைக் குறிப்பிடுகிறார். நந்தர்கள் பாடலிபுத்திர நகரை தலைநகராகக் கொண்டு, சுமார் 350 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்கள் கங்கையாற்றின் ஓரத்தே புதைத்துவைத்த செல்வத்தை, பெருவெள்ளம் வந்தபோது அடித்துக்கொண்டு போய்விட்டதாம்.
""பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ'' (அகம்.265)
மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பியன் கண்டியூரில் வி.சண்முகநாதன் வீட்டின் பின்புறம் தோண்டும்போது ஒரு புதையல் கண்டெடுக்கப்பட்டது. அதில் சிந்துவெளி எழுத்துகள் உள்ளன. ஐ.மகாதேவன் "முருகுஅன்' என்று படித்துக்காட்டி, அதன் காலம் கி.மு.2000-1500 ஆகலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். செல்வப் புதையலைவிட, தமிழ்ச் செல்வத்தை உணர்த்தும் இது பல மடங்கு சிறப்புடையதல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.