ஊடல் எல்லை கடந்தால்...

'ஊடல்' என்பது தலைமகனது புறத்தொழுக்கம் பற்றி வருந்தி, தலைவி அவனுடன் மனம் வேறுபட்டு நிற்றல். இது "உப்பமைந் தற்றால் புலவி' எனப்படுகிறது.
ஊடல் எல்லை கடந்தால்...
Published on
Updated on
1 min read

'ஊடல்' என்பது தலைமகனது புறத்தொழுக்கம் பற்றி வருந்தி, தலைவி அவனுடன் மனம் வேறுபட்டு நிற்றல். இது "உப்பமைந் தற்றால் புலவி' எனப்படுகிறது. மிகினும் குறையினும் சுவை தராது; துன்பம் தரும். அகநானூற்றில் ஒரு பாடல், ஊடல் மிகுதலால் வரும் துன்பத்தை வெளிப்படப் புனைவது சற்று வித்தியாசமாக உளது.

தோழி தலைவியிடம் அவனது கூடா ஒழுக்கம் பற்றி, ""ஒரேயடியாக மிகவும் முரண்டு பிடிக்காதே. அவ்வாறு புலந்து நின்றவர்கள், அவனால் கைவிடப்பட்டு பரிதாப நிலையை அடைந்து வறுமையில் வாடுவதைப் பார்!'' என்று கடிந்து பேசுகிறாள். "எருமைப் போத்து, பெருவீரனைப் போல்' வரும் ஊரன் அவன்.

""ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தர

பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ

புலத்தல் ஒல்லுமோ? மனைகெழு மடந்தை!'' (316)

ஊர் கொள்ள முடியாத அத்தனை பரத்தை மகளிரைக்கொண்டு வருகிறான். தாங்க முடியாத அளவு பரத்தையரை அழைத்துவரும் இவனுடன் வீணாகப் புலந்து பயன் என்ன? இல்லக் கிழத்தியே எண்ணிப் பார்! அவனுடன் மிக மாறுபட்டுப் புலந்து நின்றவர்கள் கதி பரிதாபமானது.

""அதுபுலந் துறைதல் வல்லி யோரே

செய்யோள் நீங்க, சில்பதம் கொழித்துத்

தாம்அட்டு உண்டு தமியராகித்

தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப

வைகுந ராகுதல் அறிந்தும்

அறியா ரம்ம அஃது உடலு மோரே'' (அகம்.316)

தலைவனது பரத்தைமை காரணமாக, புலந்து நீங்கும் மனவலிமையுடைய மகளிர், தம்மிடமிருந்து செல்வத் திருமகள் நீங்க, சிறிதளவே சமைத்து உண்டு, தனித்துக் கிடந்து, பாலில்லா மார்பைப் புதல்வர் சுவைத்து அழ, தனித்து விடப்பட்டு உழலுதலை அறிந்தும், தலைவனுடன் மாறுபடுவோர் அறிவில்லாதவரல்லவா?

ஊடல் எல்லை கடந்தால் என்ன ஆகும் என்ற தோழியின் இவ் அறிவுரை, அன்றைய மனையுறை மகளிரின் அவல நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. வெளிப்படப் புனைந்த இப்பாடலின் ஆசிரியர் ஓரம்போகியார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com