செயற்கரிய செய்வார் பெரியர்!

பாரி மிகச்சிறந்த வீரனாகவும் வள்ளன்மையில் ஈடும் எடுப்புமற்ற கொடைஞனாகவும் விளங்கியுள்ளான்.  மூவேந்தரும் பொறாமையால் போர் தொடுக்க,
செயற்கரிய செய்வார் பெரியர்!
Published on
Updated on
1 min read

பாரி மிகச்சிறந்த வீரனாகவும் வள்ளன்மையில் ஈடும் எடுப்புமற்ற கொடைஞனாகவும் விளங்கியுள்ளான்.  மூவேந்தரும் பொறாமையால் போர் தொடுக்க, சிற்றரசனாகத் தனித்து அவர்களுடன் கடும்போர் புரிந்துள்ளான். இது பல ஆண்டுகள் நீடித்துளது. "யாண்டு பல கழிய' என்று கூறப்படுகிறது. இதனால் முற்றுகையிடப்பட்ட பறம்பு மலையில் வாழ்ந்த மக்களுக்கு, எத்தனை காலம் உணவு கிடைக்கும்?

÷இதனால் கபிலர் ஒரு தந்திரம் செய்தார். பறவைகளைப் பழக்கினார். அவை வயல்வெளிகளில் பறந்து சென்று "செழுஞ்செய் நெல்லின்' விளைந்த கதிர்களை அலகில் கொத்திக்கொண்டு வரும். அந்த அரிசியை "தடந்தாள் ஆம்பல் மலரால் ஆக்கப்பட்ட அவியலொடு கூட்டி மக்கள் உண்டு வாழச் செய்தார். இதை மதுரைப் புலவர் நக்கீரர் பதிவு செய்கிறார்.

""உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை

வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று

செழுஞ்செல் நெல்லின் விளைகதிர் கொண்டு

தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி

யாண்டுபல கழிய .......''(அகம்.78:15-19)

இதனை ஒளவையார் மேலும் விரிவாகப் பாடியுள்ளார். புலமைமிக்க இரவலர் சென்றால், யானையும் அணிகலன்களும் தருபவன் பாரி. புகழ் மிகுந்த பாரியின் பறம்பு மலையில் வரிசை வரிசையாகப் பறந்து செல்லும் குருவிக் கூட்டம் காலையில் அவ்வாறு சென்று முதிர்ந்து வளைந்த நெற்கதிர்களைக் கொத்திக்கொண்டு மாலையில் மலைக்குத் திரும்பும்.

""புலங் கந்தாக இரவலர் செலினே

வரைபுரை களிற்றொடு நன்கலம் ஈயும்

உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்

நிரைபறைக் குரீஇயினம் காலைப்போகி

முடங்குபுறச் செந்நெல் தரீஇய ஓராங்கு

இரைதேர் கொட்பினவாகிப் பொழுதுபடப்

படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு''

(அகம்.303: 8-14)

இதனை உவமையாக ஆளும் ஒளவையார், "பறவைகள் போலத் தலைவன் வருவான்' எனத் தலைவி ஆர்வத்துடன் இருந்ததாகப் பாடியதால், பறவைகளின் அரிய செயலை மட்டும் குறிப்பிட்டுள்ளார். நக்கீரர், "இது கபிலர் ஆழ்ந்து - ஆராய்ந்து செய்த அரிய செயல்' என்பதை விளக்குகின்றார்.

÷இதனால், அன்று "சிற்றுயிர்கள்' என்று கருதும் விலங்கு, பறவை முதலியவற்றுடன் உறவு

கொண்டாடி, உடனுறைந்த மக்களின் இயல்பு புலனாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com