சித்திரைத் திருநாள்

விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப.எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து.தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பத்திற்று இருக்கையுள்...
சித்திரைத் திருநாள்
Updated on
2 min read

விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப.

எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து.

தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பத்திற்று இருக்கையுள்...

என்பது பரிபாடலின் 11-ஆவது பாடல். பகலவன் மூன்று வீதிகளில் இயங்குவதாகவும், அவ்வீதிகளில் உள்ள இருக்கைகளில் (இராசிகளில்) 27 நட்சத்திரங்கள் உள்ளதாகவும் நமது முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். பகலவன் இயங்கும் வீதிகள் இடப வீதி, மிதுன வீதி, மேட வீதி என்பனவாகும். ""இடப வீதி கன்னி, துலாம், மீனம், மேடம் என்பன; மிதுனவீதி தேள், வில்லு, மகரம், கும்பம் என்பன; மேட வீதி இடபம், மிதுனம், கற்கடகம், சிங்கம் என்பனவாகும்'' என்று பரிமேலழகர் பரிபாடல் உரை விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

""மேட வீதி யிடப வீதி மிதுன வீதி என வொருமூன்றே அவைதாம் இருசுடர் முதலிய வியங்குநெறியே'' என்று பிங்கல நிகண்டு (274) தெரிவிக்கிறது. அதாவது, மேட வீதி (வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி), இடப வீதி (புரட்டாசி, ஐப்பசி, பங்குனி, சித்திரை), மிதுன வீதி (கார்த்திகை, மார்கழி, தை, மாசி) ஆகிய மூன்று வீதிகளில் பகலவனும் சந்திரனும் பயணிக்கின்றன என்கிறது.

பூமி பகலவனை ஒருமுறை சுற்றிவரும் காலம் ஓராண்டாகும். பூமியின் சுழற்சியால் கால மாற்றங்கள் உண்டாகின்றன. பண்டைத் தமிழர் காலமாற்றங்களை அறிந்து கொள்வதற்காக, பூமி பகலவனைச் சுற்றிவரும் பாதையைப் பன்னிரு ராசி மண்டலங்களாகப் பகுத்தனர்; அந்த ராசிகளில் பகலவன் பயணிப்பதாக வகுத்துள்ளனர்.

பகலவன் இராசிகளில் இயங்கும் ஒரு சுற்றுவட்டத்தினை, இரண்டு அரைக்கோளங்களாகப் பகுத்தால், மேட வீதிக்கான மாதங்கள் வட அரைச்சுற்றிலும், மிதுன வீதிக்கான மாதங்கள் தென் அரைச்சுற்றிலும், இடப வீதிக்கான மாதங்கள் இரு அரைக்கோளங்களுக்கு மத்தியிலும் அமைவதைக் காணலாம். எனவே, மேட வீதி வடக்குத் தெரு

என்றும், மிதுன வீதி தெற்குத் தெரு என்றும், இடப வீதி நடுத்தெரு என்றும் வழங்கப்படும். இடப வீதியில் (புரட்டாசி, ஐப்பசி, பங்குனி, சித்திரை) உள்ள மாதங்களில் பகலவன் பூமத்தியில் இயங்குகிறது. அக்காலங்களிலேயே சமபகலிரவு காலங்கள் வருகின்றன.

புவியியலார் கூறியுள்ள சமபகலிரவு காலங்கள் செப்டம்பர் 23 (புரட்டாசி), மார்ச் 21 (பங்குனி) ஆகிய மாதங்களாகும். புவியியலார் கூற்றுப்படி, அக்காலங்களில் பகலவன் பூமத்தியில் (பூஜ்ஜியம் டிகிரி பூமத்திய ரேகையில்) இயங்குகிறது. தமிழகத்தில் சமபகலிரவு காலங்கள் ஐப்பசி மற்றும் சித்திரை ஆகிய மாதங்களாகும். இந்த கால வேறுபாடு புவியில் தமிழகத்தின் அமைவிடம் பூமத்தியிலிருந்து 8 டிகிரி (வட அட்சக்கோடு) தொலைவில் அமைந்துள்ளதே காரணமாகும்.

தமிழகத்திற்கு நேராக பகலவன் இயங்கும் சித்திரைத் திங்களே தமிழகத்தில் சமபகலிரவு காலமுமாகும். தமிழறிஞர் கா.சுப்பிரமணியப் பிள்ளை "தமிழர் சமயம்' என்னும் நூலில், ""இரவும் பகலும் சமமாக இருக்கின்ற நாள் வேனிற்காலத்தில் ஆண்டில் ஒரு தடவை ஏற்படும். அது தொல்காப்பியர் காலத்தில் ஆவணி தொடக்கத்தில் ஏற்பட்டதாகும். அது சித்திரை தொடக்கத்தில் ஏற்பட்ட பொழுது சித்திரை மாதம் முதல் மாதங்களை எண்ணும் இக்கால வழக்கம் தொடங்கியிருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளமை இங்கு அறியத்தக்கதாகும்.

எனவே, சங்க இலக்கியங்களைப் பகுத்து ஆராய்ந்து உண்மையாக நாம் தெளிவோமானால், பண்டைத்தமிழரின் கால கணக்கீட்டு முறையின் தோற்றமும் சித்திரைத் திருநாளுக்கான காரணமும் நமக்கு விளங்கும்.

நமது முன்னோர் பகலவன் தோன்றும் காலைப் பொழுதினை நாளின் தொடக்கமாகக் கொண்டு, 60 நாழிகை காலம் கொண்டது ஒருநாள் என்றனர். பகலவனின் (ஞாயிறு) பெயரினை முதலாகக்கொண்டு 7 நாள்கள் கொண்டது ஒரு வாரம் என்று வகுத்தனர். அவ்வாறே தமிழகத்திற்கு நேராக பகலவனின் இயக்கம் இருக்கும் சித்திரைத் திங்களை முதன்மையாகக்கொண்டு 12 மாதங்களை வகுத்தனர். இதனை விளக்கும் வண்ணம், சித்திரை முதல் நாளில் இறைவழிபாடுகள், தானங்கள் செய்து, அந்நாளினைச் "சித்திரைத் திருநாள்' என்று குறிப்பிட்டு போற்றினர். திருக்கோயில்களுக்கு தானம், நிவந்தங்கள் செய்யப்பட்டுள்ளதை கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூறுகின்றன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

சித்திரைத் தலைநாளினை சித்திரை விஷூ என்று வடநூல்கள் தெரிவிக்கின்றன. விஷூவம் என்னும் சொல்லுக்கு பகலும் இரவும் சமமான நாள் என்று பொருள். இது மும்மூர்த்திகளும் ஒன்று சேரும் புண்ணிய காலமாகும். சம பகலிரவு (சித்திரை விசு) காலத்தில் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்வது மிகவும் உத்தமம்.

திருக்கோயில்களுக்கு அளிக்கப்பட்ட இத்தகைய நிவந்தங்களால், பல நூறு ஆண்டுகளாக தமிழர்களது வாழ்வில் சித்திரைத் திருநாள் பெற்றிருக்கும் சிறப்பினை அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com