நூல்களின் வகைகள்

மொழி நூலுக்கு வித்திட்டவர்கள் தமிழர்களே. தமிழ்ச் சொற்களை, இலக்கண வகைச் சொல் மூன்றும் பொருள் வகைச் சொல் ஒன்றும் சொற்பிறப்பியல் வகைச் சொல் மூன்றாக வகுத்துள்ளனர்.
நூல்களின் வகைகள்
Published on
Updated on
1 min read

1. மொழி நூல்

மொழி நூலுக்கு வித்திட்டவர்கள் தமிழர்களே. தமிழ்ச் சொற்களை, இலக்கண வகைச் சொல் மூன்றும் பொருள் வகைச் சொல் ஒன்றும் சொற்பிறப்பியல் வகைச் சொல் மூன்றாக வகுத்துள்ளனர். தொல்காப்பிய நூற்பாக்களும் (தொல்.பெயர்.1,4,5), (தொல்.எச்ச.4,7) முதனிலை, இடைநிலை, ஈறு, உருபு, புணர்ச்சி, சாரியை முதலிய சொல்லுறுப்புகளும், பண்டைத் தமிழரின் மொழி நூலறிவைக் காட்டும்.

2. அறநூல்

இது பொருள்களை அறம், பொருள், இன்பம், வீடு என நான்காகப் பகுத்து நல்லொழுக்கத்தைக் கூறும்.

3. பொருள் நூல்

இது எல்லாரும் தத்தம் தொழிலாற் பொருளீட்டுவதற்கு இன்றியமையாத பாதுகாப்புச் செய்யும் அரசியலைப் பற்றிக் கூறும்.

4. இன்ப நூல்

இது ஆடவர்-பெண்டிர் காமவின்பத்தைச் சிறப்பித்துக் கூறும். இன்ப வாழ்க்கையைக் கூறுவது அகப்பொருள் நூல் என்றும், இன்பத்துய்ப்பை மட்டும் கூறுவது காமநூல் அல்லது வேணூல் என்றும் பெயர் பெறும்.

5. மறைநூல் (Theology)

இது பெரும்பாலும் சமயக் குடுமிகளை அல்லது கொண் முடிபுகளைக் கூறும். இது மந்திரம் எனவும் வாய்மொழி எனவும் படும். மன்னும் திரம்(திறம்) மந்திரம். மன்னுதல் - கருதுதல், எண்ணுதல். இது உண்மையாகும் என்று திண்ணமாய் எண்ணிச் சொல்வது மந்திரம். மந்திரம் சமயக் கொள்கையைப் பற்றியதும், கடவுள் வழுத்து, கொண் முடிவு நூல் என இரு திறப்படும். நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி கடவுள் வழுத்து; திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் கொண்முடிபு(சித்தாந்த) நூல்.

6. பட்டாங்கு நூல் (Philosophy)

பட்டாங்கு - உண்மை, பட்டாங்கு நூல் மெய்ப்பொருள் நூல். மாந்தன் உடலமைப்புப் பற்றித் தமிழர் கண்ட மெய்ப்பொருள்கள் (தத்துவங்கள்) 96. அவை ஆதன்(ஆன்ம) மெய்ப்பொருள் 24, நாடி 10, நிலை (அவத்தை) 5, மலம் 3, குணம் 3, மண்டலம் 3, பிணி 3, திரிபு (விகாரம்) 8, நிலைக்களம் (ஆதாரம்) 6, தாது 7, ஊதை(வாயு) 10, உறை(கோசம்) 5, வாயில் 9 என்பன. ஆதன் மெய்ப்பொருள் 24 ஆவன: பூதம் 5, புலன் 5, அறிவுப்புலன் 5, கருமப்புலன் 5, கரணம் 4.

(ஞா.தேவநேயபாவாணரின் "பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்' நூலிலிருந்து...)

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com