போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!

காழிக்கண்ணுடைய வள்ளல் என்றொரு ஆன்மிகப் பெரியார், "ஒழிவில் ஒடுக்கம்' என்ற நூலை யாத்துள்ளார்.
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!
Published on
Updated on
1 min read

காழிக்கண்ணுடைய வள்ளல் என்றொரு ஆன்மிகப் பெரியார், "ஒழிவில் ஒடுக்கம்' என்ற நூலை யாத்துள்ளார். அதில் ஆன்மிக அனுபவம் ஏதுமற்று வெறும் வாசக ஞானம் மற்றும் தன் பேச்சு வன்மையால் மக்களின் மனத்தைக் கவரக்கூடிய போலியான ஆன்மிகக் குருவை அண்டி, அவர்தம் உரைகேட்டு மயங்கி, தனக்கேதும் ஞானவாழ்வு கிட்டாத நிலையில், பிறவிப் பெருங்கடலில் இருதரப்பாரும் மூழ்கி அழிவதை விளக்குமுகத்தான் ஓர் உவமை கூறியுள்ளார்.

ஒரு தாய்க்கரடி தன் குட்டிகளுடன் பெருக்கெடுத்தோடும் ஆற்றில் இறங்கி மறுகரை சேர நினைத்து, நீந்திச்சென்று கொண்டிருக்கிறது. எதிர் கரையில் நின்று இதை கவனித்த இடையன் ஒருவன், "கொழுத்த ஆடு ஒன்று தன் குட்டிகளுடன் நீந்தி வருகிறது. அவற்றை கரைசேர விட்டால், பிடிப்பது கடினம். நீந்தி வரும் வழியிலேயே மடக்கிப் பிடித்தால் பெருலாபம் கிட்டும்' என்றெண்ணி, ஆற்றில் இறங்கி அவற்றை நோக்கி நீந்திச் செல்கிறான்.

இடையன் நீந்தி வருவதைக் கண்ட கரடி தானும் தன் குட்டிகளும் கரைசேர தெப்பம் ஒன்று வருவதாகக் கருதியது. இடையன் ஆடு என்றெண்ணி கரடியைப் பற்றினான்; கரடி தெப்பமென்று கருதி இடையனை இறுகப் பற்றியது. இறுதியில் இருவரும் ஆற்றுப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

போலி ஆன்மிகவாதிகளை குருவாகக் கருதி மயங்கி, அவர்தம் வாய்ச்சொல்லில் மயங்குவோர் இதுபோன்று துன்பக் கடலில் மூழ்கிப்போவர் என்பதை எடுத்துரைக்கும் உவமைச் சிறப்பு வாய்ந்த அப்பாடல் இதுதான்!

குட்டி திரட்கரடி யாறொழுகத் கோந் குதித்துக்

கட்டிப் புதைந்த கதையாகும் - துட்டமலப்

பித்திலே மூத்தவர்கள் பேய்பிதற்றாம் பேதையர்க்கு

புத்திபோற் காட்டும் பொருள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com