

பெற்றோரின் அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்படாத, குறிப்பாக பெண் பிள்ளைகளின் காதல் உணர்வுகள், தோழியரின் அன்பிற்கு அடங்கிப் போய்விடும் என்பதற்குப் புலவர் கயமனாரின் "நற்றிணைப் பாடல் (12) சான்றாகத் திகழ்கிறது.
தலைவி, தலைவனோடு ஒருவருக்கும் தெரியாமல் புறப்பட்டுவிடுவது என முடிவு செய்கிறாள். திட்டமிடப்பட்ட அந்த இரவு விடிந்து கொண்டிருந்த நேரம்; எல்லோருக்கும் முன்பாக எழுந்து பெண்கள் தயிர் கடைகின்றனர். அந்த ஒலி தெளிவாகக் கேட்கத் தொடங்குகின்ற வேளையில் தலைவி, மெல்ல படுக்கையிலிருந்து எழுந்து, ஒருவர் கண்ணிலும் படாமல் இருப்பததாக உடல் முழுவதையும் போர்வையால் போர்த்திக் கொள்கிறாள்.
கால்களில் அணிந்திருந்த சிலம்பு அவள் செல்வதை விளம்பரப்படுத்திவிடும் என நினைத்து, அதைக் கழற்றி கைகளில் எடுத்துக் கொண்டு, அவளுடைய விளையாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று, அங்கிருக்கும் பந்துகளுடன் சிலம்புகளை வைக்க எண்ணுகிறாள். அப்போது அவள் உள்ளம் திடுக்கிடுகிறது!
"தோழிகள் வந்து, காலையில் என்னை எழுப்புதற்கு முற்படுவர்; நான் அங்கில்லாததைக் கண்டு நற்றாயிடமும், செவிலித்தாயிடமும் கூறுவர்; வரிப்புனை பந்துகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சென்று பார்ப்பர். அங்கே சிலம்புகளும் இருப்பதனைக் கண்டு கூவுவர்! ஆயத்தோர் அளியர் (பாங்கியர் பாவம்) வருந்துவரே!' என்று நினைத்து தலைவி அழுகிறாள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தோழி தலைவனிடம், "அப்படிச் செல்வதற்கும், வீட்டை விட்டுப் பிரிவதற்கும் வருந்துகிறாள் தலைவி' என்று காரணம் காட்டி "அவள் வருந்தும்படி நாம் அவளை அழைத்துச் செல்லுதல் தகாது' என்று தலைவனுக்கு அச்சம் உண்டாக்குகிறாள். அப்பாடல் வருமாறு:
"விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசந் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் .....
....... ...... ......... .............
இவைகாண் தொறும் நோவர் மாதோ!
அளியரோ அளியர்என ஆயத்தோர் என்
நும்மொடு வரவுதான் அயரவும்
தன்வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே''
பெண்கள், பெண்களோடு பழகுவதற்கும் அவர்களின் பழக்கவழக்கங்களைப் பெற்றோர் ஊக்குவித்தல் வேண்டும் என்பதோடு, பெண் பிள்ளைகள் ஆசைப்படுகின்ற, விரும்புகின்ற பொருள்களைப் பெற்றோர் வாங்கித் தருதல் வேண்டும் எனவும் இப்பாடல் பொருள் கூறினாலும், தோழியர் வீட்டுப் பெற்றோர் இப்படிப்பட்டப் பெண்ணோடு, நம் வீட்டுப் பெண்கள் பழகிவிட்டனரே என்று அஞ்சுவரோ என்றெல்லாம் உடன்போக்கு மேற்கொள்ளவிருந்த தலைவியின் நெஞ்சம் ஊசலாடியிருக்க வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.