ஆனைக்குக் கால் பதினேழு!

'ஆனை' என்றால் யானை என்று பொருள். ஆனைக்கு நான்கு கால்கள் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால், பதினேழு கால்கள் என்று பெரும்புலவர் ஒருவர் கூறியுள்ளார்.
Updated on
1 min read

'ஆனை' என்றால் யானை என்று பொருள். ஆனைக்கு நான்கு கால்கள் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால், பதினேழு கால்கள் என்று பெரும்புலவர் ஒருவர் கூறியுள்ளார். புலவர்கள் பொய்யுரைப்பர் - மிகைப்படுத்தி வருணிப்பர் என்று கூறுவது வழக்கம். ஆனால், இப்புலவர் உண்மையைத்தான் கூறியுள்ளார். எப்படி என்று பார்ப்போம்.

""பூநக்கி ஆறுகால்; புள்ளினத்துக்கு ஒன்பது கால்;

ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே! - மானேகேள்!

முண்டகத்தின்மீது முழு நீலம் பூத்தது உண்டு;

கண்டது உண்டு; கேட்டது இல்லை காண்!''

பூ நக்கி ஆறுகால் என்றால், பூனை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. பூவை நக்குகின்ற வண்டு என்று பொருள். எனவே வண்டுக்கு ஆறுகால் என்று பொருள். அடுத்து, புள்ளினத்துக்கு ஒன்பது கால். புள் என்றால் பறவை. ஒன்பது கால் என்பது கணக்கீட்டு அளவின்படி இரண்டேகால் ஆகும். எனவே, பறவை இனத்துக்கு இரண்டு கால் என்று பொருள்.

அதற்கடுத்து ஆனைக்குக் கால் பதினேழு. பதினேழு கால் என்பது கணக்கீட்டு அளவுப்படி நாலேகால் ஆகும். எனவே, ஆனைக்கு நாலு கால் என்று பொருள்.

முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். அம்பாளுக்கு முண்டகக்கண்ணி என்று ஒரு பெயர் உண்டு.

பெண்ணின், தாமரை போன்ற முகத்தின் மீது, முழு நீலம் என்னும் குவளை மலர் போன்ற விழிகளைக் கண்டேன். ஆனால் கேட்டது இல்லை என்று கூறுகிறார். இப்போது புரிகிறதல்லவா புலவரின் மதிநுட்பம்! இப்பாடலை இயற்றிய அந்தப் பெரும்புலவர் கவி காளமேகப் புலவரேதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com