எல்லோரும் கேள்விகளோடு நடமாடுகிறார்கள். யாரைப் பார்த்தாலும் எது நடந்தாலும் கேள்விகள் கிளை விடுகின்றன. போகிற போக்கில் மணி என்ன என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் கூட காத்திராமல் போய்க்கொண்டிருப்பார்கள்.
ஊருக்குப் போனால் அதுவும் கிராமமாக இருந்தால், எந்த ஊர்? யார் வீட்டுக்குப் போறீங்க? யாரைப் பார்க்க வந்திருக்கீங்க? என்ற கேள்விகள் அறிமுகமே இல்லாத மக்களிடமிருந்து வரும். பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது. அப்படியான கண்ணுக்குத் தெரியாத கண்காணிப்பில் இப்போதும் கிராமங்கள் இருக்கின்றன.
கேள்விகள், கேட்பவரை யாரென்று காட்டும்; பதில்கள், சொல்பவரை அடையாளம் காட்டும். ஆக, அடுத்தவர் அடையாளம் தெரியவே கேள்விகளும் பதில்களுமாக வாழ்க்கை இருக்கிறது.
பால் அட்டை வாங்குவது முதல் வங்கிக் கணக்கு, செல்பேசி இணைப்பு என்று எல்லாவற்றிற்கும் படிவத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். நேரடியான சந்திப்பில் சில கேள்விகளுக்குத் தலை அசைப்புகள் சிலரது பதிலாக இருக்கும். அதைப்போல படிவங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தலையசைப்புக்குப் பதிலாக "டிக்' செய்யச் சொல்கிறார்கள்.
பிடித்ததைச் சொல்ல, நமக்குப் பொருந்துவதைச் சொல்ல, நமது தேர்வைச் சொல்ல தரமதிப்பீட்டைச் சொல்ல, சரியென்று நினைப்பதைச் சொல்ல, முடிந்த வேலைகளைச் சொல்ல, சரிபார்க்கப்பட்டதைச் சொல்ல "டிக்' அடிக்கிறார்கள்.
உலகின் பெரும்பான்மையான நாடுகளிலும் உடன்பாட்டுப் பொருளில்தான் மக்கள் "டிக்' அடிக்கிறார்கள். ஆனால் பின்லாந்து, இத்தாலி, ஜப்பான், கொரியா, நார்வே, ஸ்வீடன் போன்ற சில
நாடுகளில் டிக் அடித்தால் "பிடிக்கவில்லை' என்று எதிர்மறை பொருளாம்.
இப்படி வாழ்க்கையில் "டிக்' அடிக்கும் நிகழ்ச்சிகளும் வேலைகளும் நிறைந்திருக்கின்றன. இதனைத் தமிழில் எவ்வாறு சொல்லலாம்? வாசகர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு:
கோ.மன்றவாணன் - சரிகுறி/ சரிபார்ப்புக் குறி/ சரியேற்புக் குறி/ சரியிடு/ இசைவுக்குறி
நா.கிருஷ்ணவேலு - குறியீடு/ அடையாளக்குறி
டி.வி.கிருஷ்ணசாமி - சரியான குறியீடு/ மெல்லிய ஓசை/ஒப்புதல்
எஸ்.சுரேஷ் - நொடியொலி/ ஒப்புக் குறியீடு/ உண்ணி
வே.முத்துமாணிக்கம் - ஏற்புக்குறி / ஊசல் கடிகார ஒலி
இராம. வேதநாயகம் - சரி/ சரிபார்/ சரிசெய்
இரா.மோகனசுந்தரம் - நொடிப்பொழுது / கடிகாரத்தின் தொடர் ஒலி/ நாணயக் கடன்முறை/ சரி என்பதற்கான அடையாளக்குறி
வானவில் மூர்த்தி - தகுதிக் குறியீடு/ தேர்வுக் குறியீடு
ராஜ சிம்மன் - அனைத்தும் சரி
சோலை கருப்பையா - கடிகார ஓசை/ குறி
எம்.எஸ்.இரணியநாதன் - சரி/ நன்று/ நனிநன்று
சந்திர மனோகரன் - மணிப்பொறி ஒலி/ சிறுநொடி
என்.ஆர்.ஸத்தியமூர்த்தி - காலப்பகிர்வு/ கால அளவீடு/ காலக் கணிப்பு / நாய் தொடர்பான நோய்
ப.இரா.இராச அம்சன் - அடையாளமிடுதல்/ உண்ணி/ தெரிவு
ஜனநேசன் -நேர்(மறை) குறி/ சரிகுறி
தமிழ் இலக்கியங்களில் காதலர்கள் சந்திக்கும் குறியிடங்கள் பகற்குறி, இரவுக்குறி என்று கூறப்பட்டுள்ளன. களத்து மேட்டில் தானியக் குவியலின் மீது குறிபோடுதலும் உண்டு. குறி சொல்லுதலும் குறிகேட்டலும் வழக்கில் உள்ளன. சலவைத் தொழிலாளர்கள் கிராமத்தில் ஒரு வீட்டுத் துணிகளுக்கு ஒரு குறி என்று அடையாளமிடும் நடைமுறையும் உள்ளது.
டிக் செய்வது நமக்கு உடன்பாட்டுப் பொருளில் மட்டுமே இருப்பதால், கோ.மன்றவாணனும், ஜனநேசனும் தெரிவித்துள்ள சரிகுறி என்பதையே பயன்படுத்தலாம்.
Tick - சரிகுறி
அடுத்த வாரத் தேடல் - Overtake
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.