நாளை போவேனோ..?

சிவபெருமான் மீது ஆராக் காதல் கொண்ட நந்தனார் என்பவர், தில்லையிலுள்ள கூத்தபிரானைத் தரிசிக்க நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒத்திப்போடுவாராம். இதனால் அவர் "திருநாளைப் போவார்' என்று அழைக்கப்பட்டார். இது பக்தி இலக்கியம் காட்டும் ஒரு நிகழ்வு.
நாளை போவேனோ..?
Published on
Updated on
1 min read

சிவபெருமான் மீது ஆராக் காதல் கொண்ட நந்தனார் என்பவர், தில்லையிலுள்ள கூத்தபிரானைத் தரிசிக்க நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒத்திப்போடுவாராம். இதனால் அவர் "திருநாளைப் போவார்' என்று அழைக்கப்பட்டார். இது பக்தி இலக்கியம் காட்டும் ஒரு நிகழ்வு.

ஒத்திசைவாக, ஒரு தலைவனின் தவிப்பை, இன்று தங்கி நாளைப் போகலாமா? என்ற அவனின் மன ஊசலாட்டத்தை அகநானூறுப் பாடல் கவினுறக் காட்சிப்படுத்துகிறது. கீழ்க்கண்ட பாடலில் தலைவன் பிரிவாற்றாது தவிப்பது பேசப்படுகிறது.

""அன்பும் மடனும் சாயலும் இயல்பும்

என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி

இன்றே இவணம் ஆகி, நாளை

புதல்இவர் ஆடுஅமை தும்பி குயினற''

(அக.225:1-5)

அன்பும் மடமும், மென்மையும், ஒழுக்கமும், எலும்பையும் உருகச்செய்யும் இன்சொல்லும், பிறவும் ஆகிய என் தலைவியுடன் ஒன்றுபட்டு இன்று அவளைத் தழுவி இவ்விடத்தில் தங்கியிருப்போமா?

""பூத்தஇருப்பைக் குழைபொதி குவிஇணர்

கழல்துளை முகத்தின் செந்நிலத்து உதிர

மழைதுளி மறந்த அம்குடிச் சீறூர்ச்

சேக்குவம் கொல்லோ நெஞ்சே! பூப்புனை

புயல்என ஒளிவரும் தாழ் இருங்கூந்தல்

செறிதொடி முன்கை நம் கூதலி

அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?''

(அக:225; 11-17)

இன்று நம்மால் மகிழ்ந்து பாராட்டப்பட்ட இவள், நாளை நாம் பிரிந்தோமானால், நம்மைப் பிரிந்த துயரால் ஒப்பனை செய்யாத கூந்தலும், வளையல் நெகிழும் கையும், கலங்கிய பார்வையும் அதனால் சற்று வெறுப்பும் உடையவளாக விளங்குவாளே...! இன்று போகவேண்டாம், நாளை போகலாம்; அவளின் நிலையை நினைத்து இச்சிறிய ஊரில் நாம் தங்கியிருப்போம்; பிரிந்து செல்வோமாயின் அந்நிலையை யாம் ஆற்றுவோமா?' என்று அலைபாயும் மனத்தோடு இருக்கும் தலைவனின் மனப்போராட்டத்தை இப்பாடல் கூறுகிறது.

ஆண்டவனைக் காண ஓர் அடியார் நாளை... நாளை... என்றார். அடியாளைக் காணும் ஆவலில் ஒரு தலைவன் நாளை... நாளை... என்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com