எட்டுத் தொகை நூற்களுள் ஒன்று கலித்தொகை. அகவாழ்வை சிறப்பித்துக் காட்டும் அக இலக்கியமான இந்நூலில், மகாபாரத நிகழ்வுகளோடு, தலைவன் தலைவியின் காதல் வாழ்வு, ஊடல், உவமைகள் போன்றவை தொடர்பான பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில், கலித்தொகையில் காணப்படும் மகாபாரதச் செய்திகளைக் காண்போம்.
மனித சமூகத்திற்கு இரு கண்கள் போன்றவை இராமாயணமும் மகாபாரதமும். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்' என்பதே மகாபாரதக்கதை உணர்த்தும் உண்மை. மண்ணாசையின் விளைவை அடியொற்றி எழுந்த காவியம்.
அரக்கு மாளிகை:
துரியோதனன், ராஜ்ஜிய மோகம் கொண்டு, பஞ்ச பாண்டவர்களை அழிக்க அரக்கு மாளிகைக்குத் தீ வைக்கிறான். அது தீப்பற்றி எரிகிறது. அதுபோல, களிப்புத் திகழும் மதநீரை உடைய கடிய களிறுகள் உள்ளேயாக, உலர்ந்த மூங்கிலை உடைய உயர்ந்த மலையை, முழங்குகின்ற நெருப்பு சூழ்ந்தது என்பதை,
""முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தார
கைபுனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,
களி திகழ் கடாஅத்த கடுங்களிறு அகத்தவா,
முளி கழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்''
(கலி: 25) எனும் பாடல் பதிவு செய்கிறது.
பீமன் காப்பாற்றுதல்:
அரக்கு மாளிகை தீப்பற்றி எரிந்ததால், மிக்க தோள்பலமும், யானையின் வலிமையும் கொண்ட பீமன் தன் தாயையும், சகோதரர்களையும் காப்பாற்றுகிறான். அதுபோல, கணைய மரத்தினும் மாறுபடுகின்ற தடக்கையினை உடைய, தன் இனத்தைக் காக்கும் அழகினை உடைய வேழம், காட்டினை சூழ்ந்து நின்ற புகையையும், அழலையும் மிதித்துத் தன் குழுவோடு இடம் பெயர்ந்தது என்பதை கீழ்வரும் பாடல் விளக்குகிறது.
""ஒள் உரு அரக்கு இல்லை வளி மகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகுவான் போல
எழுஉறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில் வேழம்,
அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவோடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ்சுரம்''
(கலி:25)
துரியோதனனை பீமன் தாக்குதல்:
சூதாட்டத்தில், துரியோதனிடம் பாண்டவர்கள் திரெüபதியை இழக்கின்றனர். இதனால் துரியோதனன், அவையில் வைத்து அவளை தன் தொடையில் அமரும்படி கூறுகிறான். இதற்கு பழி வாங்கும் விதமாக, பாரதப் போரில் துரியோதனனைத் தொடையிலே அடித்து உயிரைப் போக்கினான் பீமசேனன். அதுபோல, தன்னுடைய கூரிய கோட்டினது நுனியாலே குத்தி, புலியினது மருமத்தைத் திறந்து மாறுபாடு தீர்த்தது அழகினையுடைய யானை என்பதை கலித்தொகை பாடல் 52 விளக்குகிறது.
துச்சாதனனின் நெஞ்சை பீமன் பிளத்தல்:
ஏற்றினை நோக்கிப் பாய்கிறான் வீரன் ஒருவன். அவனை, அவ்வேறு சாவக்குத்தி, தன் கொம்புகளுக்கிடையே கொண்டு அவனுடலை குலைக்கின்ற எருதின் தோற்றத்தையும், இந்நிகழ்வு, திரெüபதியை அவைக்கு அழைத்து, அழகிய சீருடைய, மனமிசைந்த இயல்பினளாகிய, அவளின் கூந்தலிலே கை நீட்டிய துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து, பகைவர் நடுவிலே தன் வஞ்சினத்தை நிறைவேற்றிய பீமனைப் போன்றிருந்ததாம் (கலி:101). இவ்வாறு, எருதின் தோற்றம், செயல் பீமன் செயலுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதப் போர்க்களமோ, எருதுகளை அடக்கும் இடம் போன்றிருந்ததாம் (கலி :104). மகாபாரதப் போர்க்களக் காட்சிக்கு ஒப்பாக எருதுகளை மறவர் அடக்கிய காட்சி காணப்பட்டதாம்.
மகாபாரதத்தில், போர் மூண்டதற்கான காரணங்களுள் ஒன்று சூதாட்டம். அதாவது, பெருந்தாயம் இன்றிச் சிறுதாயம் பெற்றுத் தோற்றவன் போல் தலைவி வருந்துகிறாள். அதாவது, நெறியில்லாத நெறியிலே சூதாடி, கூட்டி வைத்திருந்த பொருளை இழந்தவனைப் போல, தலைவி துயரில் அழுந்துவாள் என்பதை, ""முன்ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம்போல, நந்தியாள்'' (கலி:136) என்கிறாள் தோழி.
இவ்வாறு, அக இலக்கியமான கலித்தொகையில், காவிய நிகழ்வுகள் கலந்திருப்பது, புராணச் சிறப்பையும், சங்க கால நிகழ்வுகளையும் அறிவதற்கு ஏதுவாகக் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது, புராண வாழ்க்கை உண்மைகளையும் மக்கள் உணர்ந்து, அதன்வழிச் சென்றனர் என்பதும் புலனாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.