போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து!

ஆண்டு தவறாமல் வந்துவிடும் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்வைத்து, தமக்குத் தெரிந்த மரபில் பாக்கள் பல புனைந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்தாய் அனுப்பும் புலவர் கூட்டம் தமிழில் மலிந்திருந்த காலம் அது.
போலிகளைச் சாடி ஒரு பொங்கல் வாழ்த்து!

ஆண்டு தவறாமல் வந்துவிடும் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் முன்வைத்து, தமக்குத் தெரிந்த மரபில் பாக்கள் பல புனைந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்தாய் அனுப்பும் புலவர் கூட்டம் தமிழில் மலிந்திருந்த காலம் அது.

பாக்களைவிடவும் எழுதியனுப்பும் பாவலர்களுக்கு முன்னொட்டாய் அமையும் புலவர், கவிராயர் உள்ளிட்ட பகட்டுப் பட்டங்கள் பலவாக இருக்கும். அதுகண்டு எரிச்சலுற்றார் ஓர் எழுத்தாளர்.

அவருக்கு இவ்வழக்கம் இல்லை. என்றாலும், எரிச்சல் தாளாமல், இப்போலிப் புலவர்களை எச்சரிக்க வேண்டி,

பொங்கல் செய்தி என்ற தலைப்பில் ஒரு வாழ்த்துக் கவிதையை அச்சிட்டு அனுப்பினார்.

"போலிப் புலவர்களை அடையாளங்கண்டு தண்டிக்க, பிள்ளைப்பாண்டியன், வில்லியார், ஒட்டக்கூத்தன் போன்றோர் இல்லாத காரணத்தால், தேசமெங்கும் புலவர் எனப்பலர் திரிகிறார்கள்' எனக் கூறும் பாடல் அது. தனிப்பாடல் திரட்டில் இடம்பெறும் படிக்காசுத் தம்பிரானின், "குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை' என்ற அப்பாடலின் இறுதியில் இடம்பெறும் "தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே' என்ற அடியை மட்டும், தெருத் தெருவாய்ப் புலவர் எனத் திரியலாமே என்று திருத்தி அச்சிட்டுப் பலருக்கும் அனுப்பினார் அவர்.

பலனாய், இருவரைத் தவிர வேறு எவரும் அவருக்குப் பதில் எழுதவில்லை. ஒருவர் ஆறுதலாய் ""ஹிம்சை என்பது அனாதியான தத்துவம். இதற்கு நாமெல்லாம் கவலைப்படுவானேன்'' என்று எழுதினார். அவர் ரசிகமணி டி.கே.சி.

இன்னொருவரோ, இலக்கணத்தைப் பொருட்படுத்தாமல், இரண்டு வெண்பாக்களைப் பதிலாக எழுதி அனுப்பினார்:

குட்டுவதற்கும் வெட்டுவதற்கும் கூட்டமுடன் அன்னவரைச்

சுட்டு எரித்துத் தகிப்பதற்கும் வெட்டரிவாள்

பாட்டுண்டு, நானுண்டு, நீயுண்டு, பாட்டறியா

மோட்டெருமைக் கவிராய னுண்டு.

மோட்டெருமைக் கவிராயன் முக்காரம் கேட்டால்தான்

நாட்டமுள்ள பாட்டின் நயந் தெரியும் - பாட்டுள்ள

ரகுநாதா, நெஞ்சே, ரவைவைத்துப் பாட்டிசைக்கும்

ரகுநாதா ஏங்காதே நீ

வேளூர்க் கவிராயரின் வெண்பாக்களைப் பெற்ற அந்த எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் விட்டபாடில்லை. பதிலுக்கு நான்கு வெண்பாக்களில் தன் வயிற்றெரிச்சலை விரித்து எழுதி அனுப்பிவைத்தார் இப்படி:

வேளூர்க் கவிராயா, விண்ணாரச் செந்தமிழில்

வாளத்த கவியிரண்டும் வாசித்தேன் - நாளெல்லாம்

வெந்தழலால் பாட்டெழுதும் விருத்தா சலப்பெரியோய்

தந்திட்டேன் மிகவந் தனம்.

தோணியப்பர் பாடிவச்ச சூத்திரத்தைப் பார்த்தபின்னும்

வீணுக்கே கவியெழுதும் வெட்டிகளைக் - கோணிக்குள்

போட்டடைச்சி, பெருச்சாளி போலடிச்சிச் சாகடிக்கப்

பாட்டெழுதின் உண்டு பலன்.

காமனையும் சோமனையும் காலினையும் தென்றலையும்

வாம முலையழகும் வருணித்துச் - சாபத்தில்

குடைபிடித்துக் கூத்தாடும், கூட்டத்தார் தம்குடுமிச்

சடைபிடித்துச் சாத்தல் சரி.

தங்கக் கவியெனவே தமுக்கடிச்சிச் சொல்லிவரும்

வெங்கத் திருக்கூட்டம் வீடுபெறச் - சங்கத்து

நக்கீரன் நம்வழியில் நாமிருவர் சென்றுநிதம்

மொக்க வுண்டு பேனா முனை.

சரியாய், 68 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 12.1.1946 அன்று வேளூர் வேனாக் காணா என்று கையொப்பமிட்டு, ரகுநாதனுக்கு அனுப்பிய, விருத்தாசலம் என்னும் இயற்பெயர் உடைய வேளூர்க்கவிராயர் வேறு யாரும் இல்லை. சொ.வி எனப்படும் புதுமைப்பித்தன்தான்.

வந்ததில் சிறந்ததைத் தேர்ந்து தனது வாழ்த்தாகப் பலருக்கும் அனுப்பும் குறுஞ்செய்திக் காலத்தில், இந்த வசைமொழி வாழ்த்து, ஒரு வரலாறாக நினைவுகூரத் தக்கதுதானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com