"மேதகு' எனும் சங்கச் சொல்!

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வீடுபேற்றை உணர்வதற்காக மாங்குடி மருதனாரால் இயற்றப்பட்டதுதான் மதுரைக்காஞ்சி. இதில் பாண்டிய மன்னனின் படைச்சிறப்புகளோடு மதுரை மாநகரின் சிறப்புகள் வெகுவாகப் பேசப்படுகின்றன. அம் மதுரையில் "கொண்டி' மகளிரும் (பரத்தையர்) இருந்துள்ளனர் என்ற குறிப்பையும் அறியமுடிகிறது.
Updated on
1 min read

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வீடுபேற்றை உணர்வதற்காக மாங்குடி மருதனாரால் இயற்றப்பட்டதுதான் மதுரைக்காஞ்சி. இதில் பாண்டிய மன்னனின் படைச்சிறப்புகளோடு மதுரை மாநகரின் சிறப்புகள் வெகுவாகப் பேசப்படுகின்றன. அம் மதுரையில் "கொண்டி' மகளிரும் (பரத்தையர்) இருந்துள்ளனர் என்ற குறிப்பையும் அறியமுடிகிறது.

"பழந்தேர் வாழ்க்கைப் பறவை போன்றவர்', "நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்' எனக் கொண்டி மகளிரை அவர்களின் இயல்புகளோடு சுட்டுகிறார். அவ்வகைக் கொண்டி மகளிர் தமது ஒப்பனைகளால் இளைஞர்களை எவ்வாறு கவர்கிறாள் என்பது பற்றிய வரிகளில் "மேதகு' எனும் சொல் பயின்று வந்துள்ளது. அப்பாடலடிகள்

வருமாறு:

""நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்டு

ஆய்கோல் அவிர்தொடி விளங்க வீசிப்

போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ

"மேதகு' தகைய மிகுநல மெய்தி'' (ம.கா. 562-565)

இப்பாடலில் வரும் "மேதகு தகைய மிகுநல மெய்தி' என்னும் பாடலடிக்கு "முற்படப் பலருடன் புணர்ந்த புணர்ச்சியாற் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமைதருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக வொப்பித்து' என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். அதாவது, இங்கு "மேதகு' என்பது "பெருமை தருகின்ற' என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. இதே பொருளில் இன்றைய தமிழில் அடையாக இச்சொல் வழங்கிவருகிறது.

பொதுவாக "மேதகு' என்னும் சொல்லை மேன்மை தங்கிய (ஏண்ள் உஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ஸ்ரீஹ்) என்ற பொருளில் கையாளுகின்றனர். "மேன்மையான' என்று தமிழ்மொழி அகராதி விளக்கம் தருகிறது. இன்றைய வழக்கில் பயின்றுவருதைக் கொண்டு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி "மேதகு' எனும் சொல்லை இலக்கண வகையில் பெயரடையாக வகைப்படுத்தியுள்ளது. இன்றைய தமிழில் அடையாகச் சுட்டப்படும் இச்சொல் மிக நெடுங்காலமாக வழக்கில் இருந்து வருகிறது.

பழந்தமிழில் இச்சொல் பெயர்ச் சொல்லாக மட்டுமே வழங்கிவந்துள்ளது. தமிழில் பெயர்ச்சொல் பெயரடையாக வழங்குவது இயல்பான நிகழ்வாகும். சங்கப் பாடல்களுள் மேற்கண்ட ஓர் இடத்தில் மட்டுமே இச்சொல் இடம்பெற்றுள்ளது. "மேதகு' என்னும் சொல் சங்க இலக்கியங்களுக்குப் பிந்தைய திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகிய பக்தி இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளன.

""பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன்,

மேதகு காலின் ஊக்கம் கண்டோன்'' (திருவாசகம், 3,25)

""விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியை'' (திருமந்திரம், 289)

""மேதகு பல்கலன் அணிந்து'' (நா.தி.பி. 2578: 7)

""மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே'' (நா.தி.பி.2672: 30)

தமிழில் "மேதகு' என்னும் சொல் சங்க காலம் முதற்கொண்டு வழக்கில் இருந்து வந்துள்ளதைத் தரவுகள் வழி அறியமுடிகிறது. அவ் வகையில் இன்றைக்கு "மேதகு ஆளுநர்', "மேதகு குடியரசுத் தலைவர்' என்று அடையாகச் சுட்டுவதைக் காண்கிறோம். இலக்கண நிலையில் சிறிதளவு மாற்றம் பெற்றிருப்பினும், சங்க காலம் முதல் சமகாலம் வரை உயர்ச்சிப் பொருளில் மட்டுமே "மேதகு' என்ற சொல் கையாளப்பட்டுள்ளது நினைவு கொள்ளத்தக்கதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com