சொல் புதிது - 15

தமிழில் வீடு என்றால் குடியிருக்கும் வீட்டையும் குறிக்கும் சொர்க்கமாகிய மேல் உலகத்தையும் குறிக்கும். நம்பிக்கை உடையவர்கள் சொர்க்கத்திற்குப் போக எடுக்கிற முயற்சிகள் எல்லாம் நகர்ப் பகுதியில் வீடு பெற எடுக்க வேண்டி இருக்கின்றன. வீடுபேறு அடையத் தரகர்களைத் தவிர்க்க முடிவதில்லை.
Updated on
2 min read

தமிழில் வீடு என்றால் குடியிருக்கும் வீட்டையும் குறிக்கும் சொர்க்கமாகிய மேல் உலகத்தையும் குறிக்கும். நம்பிக்கை உடையவர்கள் சொர்க்கத்திற்குப் போக எடுக்கிற முயற்சிகள் எல்லாம் நகர்ப் பகுதியில் வீடு பெற எடுக்க வேண்டி இருக்கின்றன. வீடுபேறு அடையத் தரகர்களைத் தவிர்க்க முடிவதில்லை.

பயிரிடத் தகுதியற்ற இடங்களில் வீடுகட்டிக் கொண்டிருந்தவர்கள் இப்போதெல்லாம் பயிர் நிலங்களில் கட்டத் தொடங்கி இருக்கிறார்கள். குளம் குட்டை ஏரிகளும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. மழைநீர் போக வழி இல்லாமல் முட்டி மோதித் திகைத்துப்போய்த் தேங்கிக் கிடக்கிறது.

நிலம் மனையாகி, வீடாகி, விற்பனைப் பொருளாகிக் கொண்டிருக்கிறது. இடநெருக்கடிமிக்க நகர்ப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் என்ற புதிய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் வரும் போட்டிகளில் கொலைகளும் நடக்கின்றன. கூலிப் படைகள் எனும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தொழிலுக்குப் பாதுகாப்பான அரசியல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீடு வணிகமயமாகி வருகிறது. தரகர்கள் இல்லாமல் வாடகைக்குக் கூட வீடு கிடைக்க வழி இல்லை. தரையில் வீடு கட்டுவது என்பது மாறி வானத்திலும் தரைக்குக் கீழும் வீடுகள் வந்துவிட்டன.

தரைக்கு மேலே வானவெளியில் அண்ணாந்து பார்க்கிற உயரத்தில் பல அடுக்குமாடி வீடுகள் வந்துவிட்டன. மொட்டைமாடியில் வான் சிவிகை (ஹெலிகாப்டர்) இறங்கிப் பறக்கும் வசதியுடன் வீடுகள் வந்துவிட்டன. மொட்டை மாடியில் விவசாயமும் செய்யப்படுகிறது. ரியல் எஸ்டேட், வானவெளியைப் பட்டா போட்டு விற்பனை செய்கிறது.

அசையாச் சொத்தாக இருந்த வீடுகள், ஏரியில் மிதக்கும் வீடுகளாகவும் தரையில் சக்கரம் பொருத்திய நகரும் வீடுகளாகவும் அசையும் சொத்துகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இரவு படுக்கப் போகிறபோது தெற்குப் பக்கம் இருந்த வாசல் கதவும் சாளரங்களும் காலையில் கிழக்குப் பக்கம் திரும்பி இருக்கும்படி இரவெல்லாம் சுழலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்துவிட்டன. நாம் நினைத்தபடி நினைத்த நேரத்தில் வீட்டின் திசைகளை மாற்றிக்கொள்ள முடிகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்கி இருக்கிறது ரியல் எஸ்டேட்.

ரியல் எஸ்டேட் என்பதற்கு இணையான தமிழ்ச் சொற்களாக வாசகர்கள் பழ. கவிதா சிவமணி, ப.இரா.இராச அம்சன், முனைவர் க. அன்பழகன், கோ. மன்றவாணன், சோலை கருப்பையா, ஜி.தண்டாடபாணி, செ.சத்தியசீலன், சி. இராமச்சந்திரன், டி.வி.கிருஷ்ணசாமி, துரை ஏ. இரமணன் ஆகியோர் தெரிவித்துள்ளவை வருமாறு:

மெய்யான மனையியல் / சரியான சொத்து / உண்மைத் தரநிலை / வீடுமனை விற்பனை / விற்பகம் ஆதனத்துறை / ஆதனவியல் / நில விற்பகம் / ஆதன மாற்றகம் / மனை வாணிகம் / சொத்துமனை வணிகம் / இருப்பிட மனை வணிகம் / வீட்டுமனை வியாபாரம் / நிலமனைத் தரகு / நிலமனை வணிகம் / வாழிட வணிகம் / உடைமை வணிகம் / நிலைச்சொத்து வணிகம் / உண்மையான சொத்து / இயற்கைப் பண்ணை / அசையாச் சொத்துகள் / நிலைபெயரா உடைமை / பரிமாற்ற நிலம் / பரிமாற்ற மனை / விற்பணை நிலம் / உண்மை நிலத்தரகர் / கட்டட விற்பனையாளர் / நிலம் கட்டட வணிகத்தொழில்.

ரியல் எஸ்டேட் என்பது இருக்கிற நிலத்தை, இடத்தை, வீட்டை வாங்கி அப்படியே விற்பது மட்டுமில்லை. வெற்றிடத்தை வாங்கிப் பயன்பாட்டிற்கேற்பப் பண்படுத்தி விற்பதுமாகும். ஆகவே, ரியல் எஸ்டேட் என்பதை வீடு, மனை, நிலம் ஆகியவற்றை விற்பனை செய்வதாக மட்டும் குறுக்கிவிட இயலாது. எனவே, ரியல் எஸ்டேட் என்பதைத் தமிழில், இடநிலப் பயன்மாற்றம் என்று சொல்லலாம்.

இடமும் நிலமும் பயன்பாட்டிற்கேற்ப மாற்றப்படுகின்றன என்பதும்; வாங்குவோர் பயன்பெறவும் வணிகர்கள் பயன்பெறவும் ரியல் எஸ்டேட் பயன்படுகிறது என்பதும் இடநிலப் பயன்மாற்றம் என்ற தமிழாக்கம் தரக்கூடும்.

Real Estate - இடநிலப் பயன்மாற்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com