இலக்கியத்திற்கு மிக முக்கியமானவள் தலைவி. அத்தலைவியைப் பெற்றவள் நற்றாய். வளர்ந்த தலைவியோ, தலைவனோடு புறப்பட்டுப் போய்விட்டாள். தலைவியை மணம் புரியும் பொருட்டுத் தனது ஊருக்குப் பாலைநிலம் வழியாகப் பிறர் அறியாமல் அவளை உடன் அழைத்துச் சென்றுவிட்டான் தலைவன்.
மறுநாள் பொழுது புலர்ந்ததும் தம் அருகில் படுத்திருந்த மகளைக் காணாமல் நற்றாய் கலங்கினாள். தலைவியைப் பிரிந்த செவிலி வருந்தி உரைத்த பாடல்கள் சங்க அக இலக்கியங்களில் மிக உண்டு. ஆனால், நற்றாய் வருந்தி உரைத்த பாடல்கள் சிலவே காணப்படுகின்றன. இதற்குக் காரணம், இல்லறம் செய்யும் தாய், தான் பெற்ற பெண் குழந்தையைப் பாலூட்டிச் சீராட்டினாலும், அதனை எடுத்து வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைச் செவிலியே மேற்கொண்டிருந்தாள் என்று தெரியவருகிறது.
செவிலிக்கு கூற்று நிகழுமென்று (நூ.113) வரையறுத்தத் தொல்காப்பியர், நற்றாய்க்கு இவ்வாறெல்லாம் கூற்று உண்டென்று இலக்கணம் வகுக்கவில்லை. இதனால் பெற்ற தாயினும் வளர்த்த தாயே தலைவியின் வாழ்க்கையில் பெரிதும் பங்கேற்றுள்ளாள் என்பது தெளிவாகிறது. அரிதாக வரும் நற்றாயின் கூற்றுகள் அகநானூறு, நற்றிணை போன்ற அக இலக்கியக்கியங்களில் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, தான் பெற்ற அருமை மகள் ஊர் அறியாமல், உறவு அறியாமல் இரவில் காதலனோடு பாலை வழியே அவனது ஊருக்குச் சென்ற செய்தியை மறுநாள் காலைப் பொழுதில் அறிந்த நற்றாய் வாடிவருந்தி உரைத்த அவலத்தை நற்றிணை வாயிலாக அறியலாம்.
""இளைய மார்பகம் நோகுமென்று இறுக அணைத்திருந்த என் கைகளைச் சற்றே நெகிழவிட்டாலும் அதைப் பொறுக்காத என் மகள், இப்பொழுது வெப்ப மிகுதியால் கண்ணில் நீர் வழிய நெருப்பாக மூச்செறிந்து நெடுங்கூந்தலும் மடமும் நல்ல பாங்கும் கொண்டவளாய் அனலாக வீசுகின்ற வெயிற்காலக் கானகத்தில் நிற்பதற்கும் நிழலின்றிப் பெற்ற குட்டிகளைக் காக்கும் பெண் புலியின் பசியைப் போக்க ஆண்புலி மாலை மயக்கும் பொழுதில் வழியில் செல்வோரைக் கொல்வதற்குப் பார்த்திருக்கும் ஒற்றையடிப் பாதையில் எப்படித்தான் நடந்து செல்வாளோ?'' என்கிறாள்.
""நின்ற வேனில் உலந்த காந்தள்
அழலவிர் நீளிடை நிழலிடம் பெறாஅது
ஈன்றுகான் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலிபார்த்து உறையும் புல்லதர்ச் சிறுநெறி
யாங்குவல் லுநள்கொல் தானே யான்தன்
வனைந்தேந்து இளமுலை நோவ கொல்லென
நினைந்துகைந் நெகிழ்ந்த வனைத்தற்குத் தான்தன்
பேரமர் மழைக்கண் இரீஇய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல்
மையீர் ஓதிப் பெருமடத் தகையே! (நற்.29)
இவ்வாறு பெற்ற மகளைப் பிரிந்து வருத்தமுற்ற நற்றாயர் உண்டு. அவர்கள் மனைத்தக்க மாண்புடையராகி, இல்லத்திலிருந்து அறஞ்செய்த குடத்தில் இட்ட விளக்காய் விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.