சொல் புதிது - 16

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார்? என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய மாதிரி வினாக்களில் ஒன்று.
Updated on
2 min read

நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார்? என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய மாதிரி வினாக்களில் ஒன்று. அதற்கு, வ.உ.சி., மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திரு.வி.க., பாரதியார் ஆகிய நால்வர் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்.

"நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று சொன்னவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோது மாணவரைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்தவர்கள் உடல் நலம்பெற மருந்து சாப்பிட்டு ஓய்வெடுக்கச் சொன்னார்களாம். அப்போது மகாவித்துவான், "நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறி, மாணவரைத் தொடர்ந்து படிக்கச் சொன்னாராம். இந்தக் குறிப்பு, ஏழாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் உள்ளது.

அகவன் மகளைக் கூப்பிட்டுக் குறி கேட்பது, வேப்பிலை கொண்டு மந்திரிப்பது, தாயத்து கட்டுவது, கடவுளிடம் வேண்டுவது குறித்தெல்லாம் ஆய்வு செய்கிறது மருத்துவ மனிடவியல்.

திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்று உடலுக்கு மருத்துவம் போன்றே மனதுக்கும் நீதியால் மருத்துவம் பார்த்திருக்கிறார்கள். நோயுற்றவர், தீர்க்கும் மருத்துவர், மருந்து, உடனிருந்து கவனித்து மருந்து கொடுப்பவர் எனும் நாற் கூற்றே மருத்துவம் என்று சொல்கிறது திருக்குறள் (950). யானைக்கு வரும் "வயா' நோய்க்குப் புறநானூறு(91) மருந்து சொல்கிறது. குழந்தைகள் மருத்துவத்திற்குச் சீவக சிந்தாமணி(2703) மருந்து சொல்கிறது.

கைமருந்து தொடங்கிப் பக்கத்தில் உள்ள கிளினிக், பிறகு பெரிய மருத்துவமனை என்று நமது பயணம் தொடர்கிறது. கைமருத்துவம் போல உடனடியாகச் சென்று மருத்துவம் பார்த்திட, நகரங்களில் எல்லாம் கிளினிக் வந்துகொண்டிருக்கிறது.

ஹாஸ்பிட்டலை மருத்துவமனை என்கிறோம். இந்தக் கிளினிக் என்பதை எப்படித் தமிழில் சொல்லலாம்?

ப.கோபி பச்சமுத்து, சோலை. கருப்பையா, செ.சத்தியசீலன், பழ. கவிதா சிவமணி, டிவி.கிருஷ்ணசாமி, அ.கற்பூரபூபதி, டாக்டர் ஜி. தண்டபாணி, முனைவர் பா. ஜம்புலிங்கம், கோ. மன்றவாணன், செ.நாராயணசாமி, ப.இரா.இராச அம்சன், என்.ஆர். சத்தியமூர்த்தி ஆகியோர் இப்ண்ய்ண்ஸ்ரீ என்பதற்கு இணையான தமிழாக்கங்களாகத் தந்திருப்பவை வருமாறு:

""உடல் மன நலம் பேணுமில்லம், உடல் மனநோய் சோதனையகம், உடல்நலமையம், உதவிக்களம், உள்மருத்துவமனை, குறுமருத்துவமனை, குறுமருந்தகம், சிகிச்சையகம், சிறிய மருத்துவக் கூடம், சிறுமருத்துவமனை, சிறுமருந்தகம், தனிமருத்துவமனை, தனியார் சிகிச்சை மையம், தனியார் மருத்துவ மனை, நோய் சீராய்வு மையம், நோய் நாடலகம், நோய் நிவர்த்தி இல்லம், நோய்த் தடுப்புமனை, நோய்நாடும் சிறப்பாய்வகம், நோய் விலக்ககம், பண்டுவமனை, புற நோயாளர் சிகிச்சை மையம், மருத்துவ அகம், மருத்துவ ஆய்வகம், மருத்துவ ஆலோசகம், மருத்துவ இல்லம், மருத்துவ மையம், மருத்துவக் கூடம், மருத்துவச் சிற்றில், மருத்துவப் பயனகம், வெளிநோயாளி மருத்துவமனை.

கிளினிக் என்பது, பெரும்பாலும் நோயாளிகள் தங்கி மருத்துவம் பார்த்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய மருத்துவமனை இல்லை. பெரிய மருத்துவமனைக்குப் போவதற்கு முன் உடனடியாகச் சென்று காட்டிப் பெறும் முதலுதவியாகவும் இருக்கிறது. சோதனைக் கருவிகளோ சோதனைக் கூடமோ தனியாகப் பெற்றிருக்கும் நிலையிலும் பெரும்பாலான கிளினிக்குகள் இல்லை. எனவே, ஹாஸ்பிட்டல் மருத்துவமனை என்றால் கிளினிக்கை, "மருத்துவக் கைமனை' என்று சொல்லலாம்.

கைபார்த்தல் என்றால், "நாடி பார்த்தல்' என்று பொருள் இருக்கிறது. கைகொடுப்பது என்பதில் உடனடி உதவி செய்தல் இருக்கிறது; கைப்பெட்டி என்பது போலச் சிறிய அளவிலான மருத்துவம் தரப்படுகிற மனை என்பதும் தெரிய வருகிறது; மருத்துவக் கைமனை என்று புழக்கத்திற்கு வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

CLINIC - மருத்துவக் கைமனை

அடுத்தவாரத் தேடல் - Mindfulness

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com