மரஞ்சாக மருந்து கொள்வரோ?

நுனித்துக் கற்றாரேயன்றி ஏனையோரும் இலக்கிய இன்பம் துய்ப்பான் வேண்டிச் செய்யுள் யாத்த புலவரும் பலருளர்.
மரஞ்சாக மருந்து கொள்வரோ?
Updated on
2 min read

நுனித்துக் கற்றாரேயன்றி ஏனையோரும் இலக்கிய இன்பம் துய்ப்பான் வேண்டிச் செய்யுள் யாத்த புலவரும் பலருளர். அவருள் ஒருவரே கணிபுன்குன்றனார் ஆவார். இவரைச் சிலர் கணியன் பூங்குன்றனார் எனவும் மொழிவர். ஆயினும், கணிபுன்குன்றனார் என்னும் பெயரால் இவர் பாடிய அகப்பாடல் ஒன்றே நமக்குக் கிட்டியுள்ளது.

பொருள்தேடச் சென்ற தலைவனை நினைத்து, பிரிவுத் துயரைப் பொறுக்கலாற்றாது பெரிதும் வருந்துகிறாள் தலைவி. மாலைக் காலமும் வெண்மதியும் அவளது துயரை மிகுவிக்கின்றன.தலைவியின் துயரை அறிந்த அவள் தோழி, அவளை ஆற்றுவிக்க முயற்சி செய்கிறாள். "நம் தலைவர் நின்மாட்டு அன்பு மிக்குடையவர்; உன்னை நீண்ட காலம் பிரிந்துறையார்; பொருள் தேடியதும் விரைந்து வந்துவிடுவார்' தலைவர் என்கிறாள்.

இதற்கு மறுமொழியாகத் தலைவி கூறுகின்றாள், ""தோழி! நல்ல மருந்து மரமொன்றுள்ளது. அம்மரம் வேர் முதல் கனி வரையில் மருந்தாகப் பயன் தந்து நோய் நீக்கும் தன்மையுடையது. அதற்காக நோயைப் போக்க மருந்து வேண்டுபவர், அம்மரத்தையே வேரோடு வெட்டிச் சாய்ப்பரோ? மாட்டார். மருந்திற்குப் பயன்படுமாறு சிறிதளவே பயன்படுத்திக் கொள்ளுவர். மேலும், நாடு காக்கும் வேந்தனும் மக்களைக் காக்க வரிவாங்குவது உலக இயல்பே. ஆனால் பொருள் சேர்ப்பதற்காக - வரி வாங்குவதற்காக - மக்களையே கொன்று அவர்தம் பொருளைப் பெற முயல்வரோ? அவ்வாறு பொருள்பெற முயன்றால் அம்மன்னனது ஆட்சி நிலைபெறுமா? அழிந்தல்லவா போகும். இதனையறியாயோ தோழி நீ'' என்கிறாள் தலைமகள். மேலும், "தவம் செய்வோர் உயர்நிலை அடையவே தவம் செய்வர். தம் இன்னுயிர் நீக்கவா தவம் செய்வர்?' என்ற வினாவையும் எழுப்புகிறாள். அதுமட்டுமல்லாமல், ""என் காதல் தலைவரோ என்னைப் பிரிந்து பொருள்தேடச் செல்வாராயின், என்னுயிரும் என்னுடலில் தங்காது அவரோடு சென்றுவிடுமன்றோ? உயிரைப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ முடியும்? அவர் தேடிக் கொண்டுவரும் பொருள்,

பிரிந்த நம் இன்னுயிரை மீட்டுத் தருமா? கூறாய் தோழி'' என்கிறாள்.

இப்பாடல் அகத்திணைப் பாடலாயினும், இவற்றில் இடம்பெற்றுள்ள மூன்று உவமைகளால் உலக மக்களுக்கு நல்லறிவு புகட்டுகிறது.

1. மருந்திற்காக மரத்தையே கொல்லலாமா? என்ற வினாவின் வாயிலாக மருந்துக்குத் தேவை வேராயினும், பட்டையாயினும் தமக்குத் தேவையான சிறிதளவே கொள்ளல் வேண்டும். ஏனெனில் மருந்து சிறிதளவே உண்ணுதற்குரியது. அஃது உணவன்று. அதனாலேயே மரஞ்சாம் மருந்துங் கொள்ளார் மாந்தர், என்றார் இப்புலவர். ஆனால், சில இடங்களில் மருந்துப்பயன் வேண்டி மரத்தையேயழிப்பதைக் காண்கிறோமே நாம், இந்நிலை இனியேனும் மாறவேண்டும்.

2. தவம் செய்வது நற்பயன் பெறவே; தம் உயிரைப் போக்குவதற்கன்று எனவே, நற்பயன் நோக்கியே நாம் எச்செயலையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து.

3. நாடு வளம்கெடுமாறு மன்னர் வரிவாங்க மாட்டார். இஃது ஆட்சியாளர்க்கு என்றுந் துணைபுரியும் - வழிகாட்டும் அறிவுரையாகும். இதே கருத்தைப் புறப்பாடல் 184இல் புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைநம்பிக்கு அறிவுரை கூறுமுறையில் விரிவாகக் கூறியுள்ளார். இக்கருத்துகள் ஆட்சியாளர்களுக்கு என்றும் பொருந்துவன. இனி, பொருள்செறிந்த அந்நற்றிணைப் பாடலைக் காண்போம்:

மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்

உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்

பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்

நாந்தம் உண்மையின் உளமே அதனால்

தாஞ்செய் பொருளளவு அறியார் தாங்கசிந்து

என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்

சென்றோர் மன்றநங் காதலர் என்னும்

இன்ன நிலைமைத் தென்ப

என்னோரும் அறிபஇவ் வுலகத் தானே.(நற்: 226)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com