மகிழ்ச்சிக்குக் காரணம் மனமா? வெளியா? மகிழ்ச்சியை உணர்கிறது மனம். ஆனால், அதற்குக் காரணம் மனதிற்குள் இருக்கிறதா? வெளியில் இருக்கிறதா? மனம் என்றால் என்ன? வெளி என்றால் என்ன?
தத்துவம், உளவியல், அறிவியல் துறைகள் அடிமுடி காணத் துடிக்கின்ற கேள்விகள் இவை. புற உலக நிகழ்வுகள் மன உலகில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மகிழ்ச்சியை அல்லது துன்பத்தை உண்டாக்குகின்றன. மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்கிற மனம், துன்பத்திற்குக் காரணமானவற்றை வெறுக்கிறது. மாற்ற முயற்சி செய்கிறது.
மாற்ற முடிந்தாலும் முடியாவிட்டாலும் அதற்கான செயற்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆகவே, வெளி உலகம் மனதை மகிழவைக்கிறது; அழ வைக்கிறது. வெளி உலகத் தப்பவெப்ப நிலை உடலுக்கு இதமாகவும் இருக்கிறது; இன்னல் தரக்கூடியதாகவும் இருக்கிறது. உடலுக்கு இதமான தப்பவெப்ப நிலையுள்ள இடங்களுக்குப் பறவைகளும் விலங்குகளும் இடம்பெயர்கின்றன. மனிதர்கள் தமக்குத் தேவைப்படும் தப்பவெப்ப நிலையைத் தாம் வசிக்கும் இடங்களில் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
உடல் இடம்பெயருகிற போதெல்லாம் மனமும் இடம் பெயருமென்று சொல்வதற்கில்லை. உடலையும் மனதையும் ஒத்துப் போகவைக்க வழி இருக்கிறதா? தியானம் செய்யச் சொல்கிறார்கள். "முடிசூட்டிக்கொள்' என்ற போதும், "காட்டிற்குப் போ' என்கிற போதும் இராமனின் முகம் "அப்போது அலர்ந்த செந்தாமரையினை' வென்றதாகக் கம்பர் கூறுகிறார். இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறானவை; ஆனால் மனவெளிப்பாடு இராமனுக்கு ஒன்றே!
இது சாத்தியமா? சாத்தியமென்று புத்தரே சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள். பாலி மொழியில் ஷநஹற்ண்' என்ற சொல்லை இதற்குப் பயன்படுத்தியுள்ளார். பாலி மொழி அறிஞர் Thomos William Rhys David என்பவர் நஹற்ண் என்ற பாலி மொழிச் சொல்லை 1881-இல் ஙண்ய்க்ச்ன்ப்ய்ங்ள்ள் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆனால் மனிதர்களுக்குப் பறவைகள் விலங்குகளைப் போல உடல் மட்டும் இல்லாமல் மனமும் இருக்கிறது. மனிதர்கள் உடலுக்கு ஏற்றவாறு இருக்கும் இடத்தின் சூழலை உருவாக்கிக் கொள்வதைப் போல மனதிற்கு ஏற்ற, இதமான புற உலக நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமலும் போகிறது. அப்போது புற உலக நிகழ்வுகள் பாதிப்புக்கு ஆளாகாத மன உலகைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. முடியும் போதெல்லாம் நினைவுகளை இறக்கைகளைக் கொண்டு மனப்பறவைகள் உகந்த இடங்களுக்குச் சென்று வருகின்றன. ஆனால், எங்கேயும் எப்போதும் இதமான சூழலிலேயே மனதை இருத்திக் கொள்வதற்கு நினைவுகளும் போதவில்லை; நிகழ்வுகளும் உதவுவதில்லை.
"கொன்றன்ன இன்னா செய்யினும் அவர் செய்த' நல்லது ஒன்றை நினைத்து இதமான நிலைக்கு மனம் இடம்பெயர வழி சொல்கிறார் திருவள்ளுவர். இப்படி அடிக்கடி மனதை அலைக்கழிக்க வைக்காத அதே நேரத்தில் இதமான சூழலில் மனதை இருக்க வைக்கவும் வழி இருக்கிறதா?
மனது அடிக்கடி புலம்பெயர மறுக்கக்கூடும். புலம் பெயர்ந்தாலும் புறப்பட்ட இடத்திற்குத் திரும்புவதிலேயே குறியாக இருக்கக்கூடும்.
Mindfulness இப்போது மதம் கடந்து முன்னேறத்திற்கான இயக்கமாகி இருக்கிறது. நடப்பவற்றை எந்தத் தீர்ப்புக்கும் உட்படுத்தாமல் கவனித்து, மன அழுத்தங்கள் இல்லாமல் சிந்தித்துச் செயற்பட உலகுக்குத் தேவைப்படும் மந்திரச் சொல்லாக Mindfulness மாறியிருக்கிறது.
பள்ளிக் குழந்தைகள் முதல் பன்னாட்டு நிறுவனப் பணியாளர்கள் வரை இதற்கான பயிற்சிகளைப் பெறுகின்றனர். தலைமைப் பண்பு வளரவும் இந்தப் பயிற்சிப் பயன்படுவதாக உளவியல் அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
Mindfulnessஎனும் சொல்லுக்கு பழ.கவிதா சிவமணி, சி.இராமச்சந்திரன், ஜி. தண்டபாணி, டி.வி.கிருஷ்ணசாமி, செ.சத்தியசீலன், இரா.ரெங்கசாமி, ஆனந்த கிருஷ்ணன், பெ. கார்த்திகேயன், இளநேசன், கோ.மன்றவாணன் ஆகியோர் பின்வருமாறு தமிழாக்கம் தந்துள்ளார்கள்:
கூர் கவனம், கவனமிகுநிலை, கருத்தாகச் செயல்படுதல், உறுவதுணர்தல், ஆழ்நிலை அறிதல், மனக்குவிப்பு, கவன மனநிலை, அதீத அக்கறை, மிகு விழிப்பு, மன ஒருமிப்பு, விழிப்புணர்வு மிகுந்த மனவிழிப்பு.
மனதால், பார்க்க முடிவதைப் போல, கேட்டவும் நுகரவும் முடியக்கூடும். வெளி உலக நிகழ்வுகள் இல்லாதபோதே கடந்த கால நினைவுகளில் நிகழ்கால மனதை விழிப்படையச் செய்ய முடிகிறது; எதிர்கால வாழ்க்கையின் கை சிமிட்டல்களுக்கு ஓடாமல் மனதை விழிப்புணர்வோடு வைத்திருக்க வேண்டியிருக்கிறது.
எனவே இதற்கான Mindfulness பயிற்சி மனவிழிப்புக்கான பயிற்சியாகக் கொள்ள முடிகிறது. எனவே, கோ. மன்றவாணன் குறிப்பிட்டுள்ள மனவிழிப்பு என்பதையே ஙண்ய்க்ச்ன்ப்ய்ங்ள்ள் என்பதற்கு இணையான தமிழ்ச் சொல்லாகப் பாவிக்கலாம்.
Mindfulness - மனவிழிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.