நம்மாழ்வார் பாசுரங்களில் ஹைக்கூ...

புதுக்கவிதையின் தொடர் வளர்ச்சியில் விளைந்த புதுமை மாற்றம் ஹைக்கூ வடிவம். "வாமன' வடிவம் என்பார்கள்.
நம்மாழ்வார் பாசுரங்களில் ஹைக்கூ...
Updated on
1 min read

புதுக்கவிதையின் தொடர் வளர்ச்சியில் விளைந்த புதுமை மாற்றம் ஹைக்கூ வடிவம். "வாமன' வடிவம் என்பார்கள். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்; சின்ன சொற்செட்டுக்களில் மிகப்பெரும் கருத்தை, அனுபவத்தை, ஆளுமையை வெளிப்படுத்துபவை; மூன்று வரிகளுக்குள் ஆழமான ஒரு பொருண்மையைப் படிப்போரின் மனத்துள் விதைப்பவை என்றெல்லாம் ஹைக்கூ குறித்து வரையறைகள் கூறப்படுகின்றன.

ஐங்குறுநூற்றின் பாடல்களை இவ்வடிவத்திற்கு ஒப்பிட்டுப் பேசுவதும் உண்டு. அவ்வகையில் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இவ்வடிவத்தினைக் காணமுடிகிறது. குறிப்பாக நம்மாழ்வார் பாடல்களில்!

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் எட்டாம் திருவாய்மொழியாக அமைவது "ஓடும்புள்' என்பது. இதில் அமைந்துள்ள பத்து பாடல்களும் ஹைக்கூ வடிவத்தை ஏற்றிருக்கின்றன.

ஓடும் புள் ஏறிச்

சூடும் தண்துழாய்

நீடு நின்றவை

ஆடு அம்மானே!

புள் - பறவை; துழாய் - துளசி. திருமாலுக்குரிய வாகனம் கருடப்பறவை. அவன் சூடுவது துளசி மாலை. இதில் அஃறிணை உயிர்களாகிய புள்ளும் துழாயும் அவனருளால் - அவன் பயன்படுத்துவதால் உயர்திணையாகி நீடு நின்றவை ஆயின. இது மேலோட்டமாக ஒரு பொருள் உணர்த்தி நிற்கின்றன. ஹைக்கூ என்றால், அவை நுட்பமான பொருளையும் உணர்த்த வேண்டும். அதனடிப்படையில், எப்போதும் பறந்தபடியே இருக்கும் புள் திருமாலுக்குக் கட்டுப்பட்டு இயங்குவதால் அதன் சுயதன்மையை இழந்து, இறைவன் அருளைப் பெறுகிறது. அதேபோன்று இயல்பாக துளசி வெப்பக் குணம் கொண்டது. ஆனால், அதைத் திருமால் சூடிக்கொள்வதால் அது தண் (குளிர்ச்சி) துழாய் ஆனது. இதுவும் தன் சுயத்தை இழந்தது. எனவே, நுட்பமான பொருள் என்னவெனில், தன்னுடைய சுயத்தை (யான், எனது) இழக்கையில் இறையருள் கிட்டும் என்பதைத்தான் நம்மாழ்வார் இப்பாசுரத்தில் உணர்த்தியுள்ளார். அடுத்து,

வைகலும் வெண்ணெய்

கைகலந்து உண்பான்

பொய்கல வாதுஎன்

மெய்கலந் தானே!

என்கிறார். தினமும் வெண்ணெய் உண்ணும் பெருமாள் பொய்யின்றி என்னுடைய உள்ளம்(மெய்) கலந்தானே என்பது இதன் பொருள். நுட்பமாகக் கவனித்தால், வெண்ணெய் கைகலந்து உண்பான் என்பதில், தனக்குப் பிடித்தமான பொருளைக் குழந்தைகள் இரு கைகளாலும் அளாவி உண்பர். அத்தகைய இயல்பான பெருமாள் பொய்யின்றி என்னுள்ளம் கலந்தான். ஆனால், இன்னும் நுட்பமாகக் கவனித்தால், தனக்குப் பிடித்ததைக் கைகலந்து உண்பான் எனும்போதே இறைவனுக்குப் பிடித்துவிட்டது என்றால், இரு கைகளாலும் தழுவி அருள்புரிவான், எப்படியென்றால் பொய்கலவாத (அந்த வெண்ணெய் போன்று வெண்மையாக, சுத்தமாக இருந்தால்) மனத்துடன் அவனைச் சரண் புகுந்தால், நம்முடைய உள்ளத்தினுள் (மெய்) அவன் புகுவான் என்கிறார்.

இவ்வாறு நம்மாழ்வாரின் பாசுரங்கள், வடிவத்திலும் பொருள் கூறும் முறையிலும் சிறந்த ஹைக்கூவின் வடிவத்தையும் பொருளுரைக்கும் பண்பையும் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com