பத்துப்பாட்டு' எனும் தொகை நூல்களுள் ஒன்று கடியலூர் உருத்திரங்கண்ணணனார் பாடிய பட்டினப்பாலை. இதில் சோழ நாடு, காவிரி ஆறு, கரிகாலனின் வீரம், வெற்றி, காவிரிப்பூம்பட்டினம், கடல் வணிகம், வாணிகச் சிறப்பு முதலிய பல வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு பற்றி பேசுவதால் இது "பட்டினப்பாலை' எனப்பட்டது.
இதன் பாட்டுடைத் தலைவன் கரிகாலன் என்பது "சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது' எனும் நச்சினார்க்கினியர் உரையால் அறியலாம். சோழ மன்னன் கரிகாலன், பட்டினப்பாலையை இயற்றிய புலவர்க்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசு கொடுத்தான் என்பதைக் கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
""தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்''
இது மட்டுமல்ல, பட்டினப்பாலை அரங்கேறிய 16 கால் மண்டபத்தையும் கரிகாலன் பரிசாகக் கொடுத்துவிட்டான். இச்செய்தியை சங்கர சோழன் உலா, தமிழ்விடு தூது, பாண்டி மண்டல சதகப் பாடல்களும் குறிப்பிடுகின்றன.
108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருவெள்ளறை திருக்கோயிலில், "நாழி கேட்டான் வாசல்' எனப்படும் வாயிலின் சுவரில் காணப்படும் கல்வெட்டு தமிழ் இலக்கியத்தைப் போற்றிய அரிய செய்தியைக் கூறுகிறது.
சோழ மன்னரது ஆட்சி வலிமைக் குன்றியவுடன் பாண்டிய மன்னர்களில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1238) சோழ நாட்டின் மீது படையெடுத்து பெரும் பகுதியை அழித்தான். ஆனால் பட்டினப்பாலை அரங்கேற்றப்பட்டதன் நினைவாக இருந்த 16 கால் மண்டபத்தை அப்படியே விட்டுவிட்டான் பாண்டிய மன்னன் என்பதை கீழ்க்காணும் கல்வெட்டுப் பாடல் கூறுகிறது.இப்பாடலின் வழி, தமிழின்பால் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக அம் மண்டபத்தை அழிக்காமல் பெருமை சேர்த்தான் பாண்டிய மன்னன் என்ற உண்மை விளங்குகிறது. பாடல் வருமாறு:
""வெறியார் துவளத்தொடைச் செயமாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப்
பறியாத தூணில்லை "கண்ணன் செய் பட்டினப்பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறுமேயங்கு நின்றனவே!''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.