
'எண்' என்பது கணிதத்தின் மூலக்கூறு. இது அறிவியலின் மொழி எனப்படுகிறது. இந்த எண் (கணிதம்) அறிவியலின் அரசி என்றும் போற்றப்படுகிறது. இந்த எண்ணும் எழுத்தும் (அதாவது, கணிதமும் இலக்கியமும்-அறிவியலும் இலக்கியமும்) வாழும் உயிர்களுக்குக் கண் போன்றது (சமுதாயத்தின் கண்கள்) எனக் கருதிக் கற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார் வள்ளுவர் (குறள்-392). அவருடைய கருத்தை, ""எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'' எனக் கொன்றை வேந்தனில் எதிரொலித்தார் ஒüவையார்.
கணிதத்துறையில் பழந்தமிழர் ஓங்கித் திகழ்ந்தனர். கணிதத்திற்கு அடிப்படையான எண்களை மேல்வாய் இலக்கம், கீழ்வாய் இலக்கம் என்று இரண்டாகப் பிரித்தனர். ஒன்று என்ற எண்ணுக்கு மேற்பட்டது, மேல்வாய் இலக்கம். ஒன்றுக்குக் கீழ்ப்பட்டது கீழ்வாய் இலக்கம். ""ஐ, அம், பல் எனவரு உம்'' என்று தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (தொல்.எழுத்து. 394) உரை கூறிய உரையாசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் பேரெண்களைச் சொன்னார்கள். நெய்தல், சங்கம், கமலம் முதலிய பேரெண்களைப் பரிபாடலும் குறிப்பிட்டது. இவை எத்தனைக் கோடிகள் என்பது இன்று தெரியவில்லை.
ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட கீழ்வாய் இலக்கங்களிலும் தமிழர் வியக்கத்தக்க எண் முறையை வகுத்தார்கள். இது முக்காலே மூன்று வீசத்தில் தொடங்கி, தேர்த்துகள் வரை ஆழமாகச் சென்றுள்ளது. இவற்றுள் அடங்கிய அணு, இம்மி என்னும் சொற்கள் மட்டும் சிலருடைய பேச்சு வழக்கில் உள்ளது.
அணு என்பது 1/16558 0800 என்றும், இம்மி என்பது 1/215 0400 என்றும் குறிக்கப்பட்டுள்ளது. தேர்த்துகள் என்ற எண் 1/232382453022720000000 என்று இசைப் பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதர் அறிவித்துள்ளார் (கருணாமிர்த சாகரம், ப.651)
கணிதவியலைப் பற்றிய ஏரம்பம், சினராலயம், கணித இரத்தினம், சிறு கணக்கு முதலிய பல நூல்கள் முன்பு தமிழ் மண்ணில் வாழ்ந்தன. இன்று கணக்கதிகாரம், ஆஸ்த்தான கோலாகலம், கணித தீபிகை ஆகியவை மட்டும் இருக்கின்றன.
திருக்குறளில் ஒன்பது நீங்கலாக ஒன்று முதல் பத்து எண்களும் ஆயிரம், கோடி ஆகிய எண்களும் இடம்பெற்றுள்ளன. பத்தடுத்த கோடி (1,00,00010 ) என்ற அவருடைய குறியீடு இன்றைய அல்ஜீப்ரா என்ற கணித இயலை நினைவுபடுத்துகிறது.
காளமேகப் புலவர், எண்களைச் சிலேடையாகப் பயன்படுத்திப் பாடல் (பூநக்கி ஆறுகால்) படைத்தார். ஒüவையாரும் கணித எண்களைப் பயன்படுத்தியுள்ளார் (எட்டே கால் லட்சணமே). திருமழிசை ஆழ்வார் பாடிய திருச்சந்த விருத்தத்தில் அவர் இறைவனை (ஆறும் ஆறும் ஆறும் ஓர் ஐந்தும் ஐந்தும்) எண்களால் போற்றியுள்ளார்.
""முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
இருமா முன், மாகாணிக்கு ஏகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரை இன்று ஓது''
என்ற தனிப்பாடலில் முக்கால்(3/4), அரை(1/2), கால் 1/4, ஒருமா (1/20), மாகாணி (1/16), இருமா (1/10) ஆகிய கீழ்வாய் இலக்கங்கள் வந்துள்ளன. இவ்வாறு தமிழில் எண்ணும் எழுத்தும் இணைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.