மொழிபெயர்ப்புக்கு எதற்காக மறுபதிப்பு?

உலக இலக்கியங்கள் சிலவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் காலம்தோறும் புதிய நபர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகின்றன.
மொழிபெயர்ப்புக்கு எதற்காக மறுபதிப்பு?
Published on
Updated on
2 min read

உலக இலக்கியங்கள் சிலவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் காலம்தோறும் புதிய நபர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகின்றன. இதைப் போல உலக இலக்கியங்களில் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், உபநிடதங்கள், பகவத்கீதை, பைபிள், திருக்குர்ஆன், திருக்குறள் எனப் பல நூல்களுக்கும் காலம்தோறும் புதிய மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

படைப்பு ஒன்றுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஒவ்வொரு மொழிபெயர்ப்பையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு பார்த்தால், அதன் மொழி நடையில், சொற்களில் மெல்லிய வேறுபாடுகள் இருப்பதைக் காணமுடியும். அன்றைய இளைஞன் அதைப் படித்தால், அவனுக்குப் புரியும் சொற்கள் கையாளப்பட்டிருப்பதைக் காணமுடியும். தமிழில் இந்த நிலை இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது.

மாக்ஸிம் கார்க்கியின் "நான் பெற்ற பயிற்சிகள்' என்ற புதிய படைப்பைப் படிக்க நேர்ந்தபோது இந்த வருத்தம் மீண்டும் ஏற்பட்டது. இதை ராமநாதன் மொழிபெயர்த்திருக்கிறார். குறைந்தது 30 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதற்கு இதில் இடம்பெற்றுள்ள பின்வரும் வரிகளே சாட்சி:

"......... காரியஸ்தனின் மனைவி சந்தேகாஸ்பதமான முறையில் என்மீது கவனம் செலுத்தினாள். அவள் குளிப்பதற்கு நான் தினமும் ஜலம் கொண்டு செல்ல வேண்டும்...'

காரியஸ்தன், சந்தேகாஸ்பதமான, ஜலம் ஆகிய வார்த்தைகள் தமிழ்நாட்டில் ரொம்பப் பழைய பயன்பாட்டுச் சொற்கள். காரியஸ்தன் என்று சொல்லப்படுவதன் ஆங்கிலச்சொல் மானேஜர். இன்றைய இளைஞரிடம், "செயலாளர் யார்?' என்றால் பதில் சொல்வார். அல்லது "செக்ரட்டரி யார்?' என்று கேட்டாலும் பதில் சொல்வார். "காரியஸ்தன் யார்?' என்று கேட்டால் பதில் தெரியாமல் விழிப்பார். இன்றைய தேதியில் "காரியம்' என்பது இறந்தவர்களுக்குச் செய்யும் ஒரு சடங்கு மட்டுமே!

மாக்ஸிம் கார்க்கியின் அற்புதமானப் படைப்பு இன்றைய இளைஞனைப் போய்ச்சேர வேண்டுமானால், அது இந்தக் காலத்துக்கான மொழிபெயர்ப்பாக இருக்க வேண்டும். சொற்கள் இன்று புழக்கத்தில் இருப்பதாக இருக்கவேண்டும். இல்லையென்றால், 50 வயது கடந்தவர்களின் மறுவாசிப்புக்குப் பயன்படுமே தவிர, இளைஞர்கள் படிக்க உதவாது.

1970-களில்கூட தமிழர்கள் புரிந்துகொண்ட சொற்கள் அக்ராசேனர் (சட்டப்பேரவைத் தலைவர்) அபேட்ஷகர் (வேட்பாளர்). ஆனால் அவை இன்று இல்லை. தர்னா (போராட்டம்), ஹர்த்தால் (கடையடைப்பு), ரஸ்தா ரோகோ (சாலை மறியல்) இன்றில்லை; மாறிவிட்டன. விஞ்ஞானம் என்ற சொல் இன்றில்லை. அறிவியல் வழக்கத்துக்கு வந்தாகிவிட்டது. பஸ் ஸ்டாண்டு என்பது பேருந்து நிலையம் ஆகி, மிகவும் இயல்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், மிகச் சிறந்த இலக்கியங்களைத் தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கும்போது மட்டும் ஏன் நம்மால் இதைச் செய்ய முடிவதில்லை. நல்ல இலக்கியங்களை மீண்டும் மீண்டும் காலம் மாறுவதற்கு ஏற்ப, தமிழில் மொழியாக்கம் செய்துகொண்டே இருக்க வேண்டாமா?

திருக்குறளுக்கு மட்டும் ஜி.யு.போப் தொடங்கி இன்று வரை பல மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் வந்தாகிவிட்டது. ஒரே திருக்குறள். ஆங்கிலத்தில் தரப்படும் விளக்கம் மிக அரிதாகவே மாறுகிறது. ஆனால், விவரிக்கும் சொற்கள் எளிமைப்பட்டுக் கொண்டே வருகின்றன. இதே நியதியை, அயல்மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் சிறந்த நூல்களுக்கும் செய்யப்பட வேண்டாமா?

ஆங்கில, சீன, ருஷ்ய, பிரெஞ்சு இலக்கியங்கள் பல தமிழுக்கு வந்துள்ளன. ஆனால், ஒரே ஒருமுறை மட்டும்தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

டி.எஸ். சொக்கலிங்கம் மொழிபெயர்த்த, டால்ஸ்டாயின் "போரும் வாழ்வும்' மட்டும்தான் இன்று நமக்குக் கிடைக்கிறது. அந்நூலின் வேறு மொழிபெயர்ப்புகள் இல்லை. டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மொழிபெயர்ப்பில் இருந்த சில சம்ஸ்கிருதம் கலந்த சொற்களை மட்டும் தமிழ் சொற்களாக மாற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் "போரும் வாழ்வும்' வந்தது. ஆனால், அது ஓர் எழுத்தாளனுக்குச் செய்யப்படும் துரோகம் என்றே சொல்லலாம். ஓர் எழுத்தாளனின் மொழிநடையை, அவர் பயன்படுத்திய வார்த்தைகளைச் சிதைக்க எவருக்கும் உரிமை இல்லை.

ஒரு படைப்பு, ஒரு புத்தகம் அற்புதமானது; ஆனால், அந்த மொழிபெயர்ப்புதான் காலம் கடந்தது என்று சொன்னால், புதிதாக மொழிபெயர்ப்பதுதான் சிறந்த செயல்.

பாரதியார், டி.எஸ்.சொக்கலிங்கம், பூ.சோமசுந்தரம் ஆகியோரது மொழிபெயர்ப்புகள் மிகச் சிறந்தவை. அவை இன்றைய தேதிக்கு ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கான கையேடாகப் பயன்படும் என்கின்ற அளவில் அந்த நூல்களை அப்படியே, அவர்கள் மொழிபெயர்த்த அதே சொற்களில் மறுவெளியீடு செய்வது அவசியம்தான். மற்றபடி புதிதாக வாசிப்புக்கு வரும் ஓர் இளைஞரைக் கவர்ந்திழுக்கவும், அறிவுத்தேடலைத் தொடங்கி வைக்கவும் முடியாது. மூல நூல்களுக்கு மட்டுமே மறுபதிப்பு தேவை; மொழிபெயர்ப்புகளுக்கு அல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com