ஒளவையின் பாடலில் திருக்குறள் விளக்கம்

திருக்குறள் தமிழர் பண்பாட்டின் பிழிவாகும். குறள் மேன்மேலும் பொருள் சிறக்குமாறு, "தேடல்' உத்திக்கு வழிவகுத்துள்ளது.
Published on
Updated on
1 min read

திருக்குறள் தமிழர் பண்பாட்டின் பிழிவாகும். குறள் மேன்மேலும் பொருள் சிறக்குமாறு, "தேடல்' உத்திக்கு வழிவகுத்துள்ளது. இதனால் பலர், ஒரு குறளுக்கு வெவ்வேறு பொருள் காண முயல்கின்றனர். குறளுக்குப் பொருள் தேடும்பொழுது, அது தோன்றிய சமுதாய நிலையும், சங்க இலக்கியப் பின்புலமும் தெரிந்திருத்தல் தெளிவு தரும்.

""தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று'' (236)

இதற்கு, "பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்; புகழ் இலாதார் பிறத்தலைவிடப் பிறவாமையே நன்று' என உரை கண்டனர். அது தவறு. ஏனெனில், பிறத்தலும் பிறவாமையும் அவரவர் கையில் இல்லை. பரிமேலழகர் இதனையொட்டி, "மக்களாய்ப் பிறக்கின் அதற்கேற்ப புகழுடன் பிறக்க வேண்டும்; அஃதிலாதார் மக்களாய்ப் பிறத்தலைவிட, விலங்காய் பிறத்தல் நன்று' என உரை எழுதியுள்ளார். இதற்குப் பொருத்தமான பொருளை ஒளவையின் புறப்பாடல் ஒன்று விளக்குகிறது.

""...... ..... நெடுமான் அஞ்சி

இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்

தோன்றாதிருக்கவும் வல்லன், மற்றதன்

கான்றுபடு கனைஎரி போலத்

தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே''

(புறம்.315)

இல்லிறை - வீட்டின் முன்னுள்ள இறப்பு. ஞெலிகோல் - தீக்கடைகோல். தீக்கடைகோல் வீட்டின் முன்னுள்ள இறப்பிலே செருகப்பட்டிருக்கும். அப்போது, அதன் ஆற்றல் வெளியே தோன்றாது இருக்கும். அதனைக் கடைந்து தீயை உண்டாக்கிவிட்டாலோ, கனன்று கூவி எரியும் நெருப்பு வெளிப்படும். அதியமான் நெடுமானஞ்சியும் தன் ஆற்றல் தெரியாதவாறு அடக்கி இருக்கவும் வல்லவன்; போரில் வெளிப்பட்டாலோ, தீக்கடைகோலிலிருந்து வெளிப்படும் நெருப்புப் போலத் தன் ஆற்றலை வெளிப்படுத்தவும் வல்லவன் ஆவான்.

இதன் பழையவுரை தெளிவாக உளது. ""அவன் வீட்டின் இறப்பிற் செருகப்பட்ட தீக்கடைகோலைப் போலத் தன்வலி வெளிப்பட வேண்டாத காலத்து அடங்கி இருக்கவும் வல்லன். ஞெலிகோலாலே கக்கப்பட்டுத் தோன்றுகின்ற காட்டுத் தீயைப்போல, வெளிப்படத் தோன்ற வேண்டிய காலத்துத் தோன்றவும் வல்லன்'.

இதனடிப்படையில் குறளுக்குப் பொருள் காணமுடியும். தோன்றிற் புகழொடு தோன்றுக - ஒரு காரியத்திற் புகுந்தால் அதில் மிகச்சிறந்து விளங்குமாறு தோன்ற வேண்டும். அவ்வாறமையாதெனில், அக்காரியத்தில் புகாதிருத்தலே நன்று. அஃதின்றேல் அக்காரியத்தில் பிறரினும் மேம்பட்டு விளங்க வேண்டும். அதற்குரிய ஆற்றலோ, திறமையோ இல்லாவிட்டால், அதில் தோன்றி - அதாவது அக்காரியத்தில் புகுந்து, அவமானப்படுவதினின்றும் நீங்குமாறு, முதலிலேயே அதிற் புகாவாறு தவிர்ப்பது நல்லது.

தோன்றுதல் - விளங்கித் தோன்றுதல்; புகழுடன் மேம்பட்டுத் திகழ்தல். "தோன்றுதல்' என்ற சொல்லாட்சி ஒளவையின் பாடலிற் போலக் குறளிலும் உள்ளதை ஒப்பிட்டறிதல் வேண்டும். இவ்வாறு ஒளவையின் பாடலால், குறளின் பொருள் தெளிவுறுகிறது எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com