

நமக்கு எப்போதும் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. எல்லோரிடமும் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் யாரிடமாவது சொல்லாமல் இருக்க முடிவதில்லை. தாய் மொழியில் சொல்லுவதில் தனிச் சுகம் உண்டு. ""காணி நிலம் வேண்டும்'' என்று கேட்ட பாரதியார், ""தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்'' என்றும் சொல்லி இருக்கிறார். சொல் வேண்டும்... வேறொரு சொல்லால் வீழ்த்தமுடியாத சொல் வேண்டும். சொல் சண்டை போடும், வெற்றி பெறும்.
""சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து''
என்ற வள்ளுவருக்குக் கிடைத்ததுபோல் வெல்லும் சொல் வேண்டும். வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது. மொழியையும் மாற்றிக்கொண்டு போகிறது. மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மொழிகள் கால ஓட்டத்தில் தங்கிப்போய்விடுகின்றன. தங்கிப்போன தம் மொழிகளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே உடன் வருகிற மொழியை எடுத்துக்கொண்டு வாழ்க்கை ஓடுகிறது. ஆனால், உடன் இருக்கும் தாய் மொழியை ஒதுக்கி வைத்துவிட்டுத் தேவையற்ற போலி காரணங்களைக் கற்பித்துக்கொண்டு, பயணிக்கும் சமுதாயம் உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிப் போகும். ஏனெனில், உலக வல்லரசு நாடுகள் எதுவும் தாய்மொழியை ஒதுக்கி வைத்துவிட்டுத் தாம் மட்டும் வளர்ந்துவிடவில்லை.
வாழ்க்கை முறைக்கேற்ப வளர்ந்து வந்திருக்கும் மொழிகளுள் தமிழும் ஒன்று. இன்றைய அதிரடி வாழ்க்கை மாற்றங்களுக்கும் ஈடுகொடுக்கும் சொல்வளமும் சொல்லாக்க வளமும் இப்போதும் தமிழில் வற்றிப்போய்விடவில்லை. பிற மொழிகளுக்குச் சொற்களைக் கொடுத்ததைப் போலவே இயலாதபோது தமிழும் கடன் வாங்கி இருக்கிறது. பின்னால் வந்தவர்கள் கடனில் வாழ விரும்பாமல் தம் காலில் நிற்க முயன்றார்கள்.
இப்போதும் வாழ்க்கையில் அவ்வப்போது பிறமொழிச் சொற்கள் வந்து விழுகின்றன. தன் மொழியில் சொல் இருந்தும் பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்தும் மனநிலை உடையவர்களை விட்டுவிடலாம். தன் மொழிச் சொல்லைப் பயன்படுத்த விரும்புகிறவர்களுக்குத் தமிழில் சொல் இல்லை என்ற குறை இருக்கக்கூடாது. எனவே, வந்துவிழும் பிறமொழிச் சொற்களை வாசலிலேயே தடுத்து நிறுத்த அவற்றுக்கு உரிய சொற்களைக் கண்டறியவும் உருவாக்கவும் உதவியாகத் தினமணியின் தேடல் தமிழ்மணியில் தொடர்கிறது. தேடுவோம் வாருங்கள்...
கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்-தினமணி
தமிழ்மணி-சொல் புதிது,
29, 2-ஆவது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை-58.
மின்னஞ்சல்: thamizhmani@dinamani.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.