பார்க்கக் கூடாத ஜாதியன்

25.6.1949-இல் "பார்க்கக் கூடாத ஜாதியன்' எனும் தலைப்பில் "லோகோபகாரி' இதழில் நெல்லையப்பர் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானது.

25.6.1949-இல் "பார்க்கக் கூடாத ஜாதியன்' எனும் தலைப்பில் "லோகோபகாரி' இதழில் நெல்லையப்பர் எழுதிய கட்டுரை மிகவும் முக்கியமானது. ஏனெனில், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் என்னும் புகழ்பூத்த பேரறிஞரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் சந்தித்ததைப் பற்றிய அரிய செய்தி இக்கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது. அப்பகுதி வருமாறு:

""1919-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நானும் காலஞ்சென்ற கவிஞர் பெருமான் சுப்பிரமணிய பாரதியாரும் திருநெல்வேலி ஜில்லாவில் பேர் பெற்ற சுகவாசஸ்தலமான திருக்குற்றாலத்தில் இரண்டு நாள் தங்கியிருந்தோம். பின்னர் ஒரு நாள் மாலையில் திருக்குற்றாலத்தினின்று புறப்பட்டுத் தென்காசியில் ரயில் ஏறிக் கடையத்திற்குப் போய்க்கொண்டிருந்தோம். இடையில் (ஆழ்வார்க்குறிச்சி அல்லது மாவூர்ச் சத்திரம் என்று நினைக்கிறேன்) ஒரு ஸ்டேஷனில் தமிழ்ப் பெருங்கிழவரான காலஞ்சென்ற வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் நாங்கள் இருந்த வண்டியில்

ஏறினார்.

அப்போது முதலியாருக்கு வயது அறுபதுக்கும் மேல் இருக்கும்... முதலியார், பாரதியாருடன் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். "மகாத்மா தீண்டாமை ஒழிய வேண்டுமென்று தேசமெங்கும் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், நமது ஜில்லாவில் தீண்டப்படாத ஜாதியன் மட்டுமல்ல, பார்க்கக் கூடாத ஜாதியாரும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் எப்போது விமோசனம்?' என்றார்''.

நெல்லையப்பர் இந்தச் சந்திப்பின் விவரமனைத்தையும், பாரதியாருடன் பல விஷயங்களைப் பற்றியும் பேசினார் என்பதின் முழு விவரத்தையும் எழுதியிருந்தால், இருபெரும் தமிழர்களிடையே நிகழ்ந்த உரையாடலின் சாராம்சத்தை மேலும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

"இந்திய விடுதலைக்கு முந்திய தமிழ் இதழ்கள்' எனும் தலைப்பில் "லோகோபகாரி' 1895 முதல் 1949 வரையில், தமிழ் இதழியல் கருத்தரங்கத்தில் படிக்கப்பெற்ற (பெ.சு.மணி) இக்கட்டுரை, "தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள்' எனும் நூலில் (2014) வெளிவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com