எது காமம்?

சங்க இலக்கியங்களில் காமத்தைப் பற்றி பலவாறு சுவைபட புலவர்கள் பலர் பாடியுள்ளனர்.
எது காமம்?

சங்க இலக்கியங்களில் காமத்தைப் பற்றி பலவாறு சுவைபட புலவர்கள் பலர் பாடியுள்ளனர். கபிலர் ""சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள் உயிர்தவச்சிறிது; காமமோபெரிது'' என்று குறுந்தொகை பாடல் 18-இல் தோழி கூறுவதாகப் பாடியுள்ளார். இதன் உட்பொருள் "சிறிய உயிர்க்கிளையில் பெரிய காமக்கனி தொங்குகிறது. அது எப்போது வேண்டுமானாலும் ஒடிந்துவிடும் - அதாவது தலைவியின் உயிர் போய்விடும்' என்கிறார்.

இங்கு "காமம்' என்பது புத்தியில் விதையாகி தடுமாற்றத்தைத் தரும் என்கிறார். குதிரை என மடல் ஊர்வர், பூ என எருக்கம் பூவைச் சூடுவர்; தெருவில் மற்றவர் கேலி செய்யும்படி நடப்பர் என்கிறார் (பா.17).

""மா என மடலும் ஊர்ப; பூஎனக்

குவி முகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;

மருகின் ஆர்க்கவும் படுப,

பிறிதும் ஆகுப... காமம் காழ்க்கொளினே''

திருவள்ளுவர், ""தும்மல்போல் தோன்றிவிடும்'' (1253) என்கிறார். நக்கீரரோ, ""தன்னை நன்று என ஊரார் மாட்டும் சென்று நிற்கும் பேதமை-காமம்'' (குறு.பா.78) என்கிறார். தேவகுலத்தார் குறுந்தொகை பாடல் 3-இல் ""நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, நீரினும் அளவற்றது'' எனக்கூறி காமத்தை நட்பாகக் காட்டுகிறார். ஆனால் இது எல்லாவற்றையும்விட குறுந்தொகை பாடல் 204-இல் மிளைப்பெருங்கந்தன் எனும் புலவர் காமத்திற்கு வரையறை செய்து "இதுதான் காமம்' என்கிறார்.

""காமம் காமம் என்ப; காமம்

அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்

முதைச் சுவல் கலித்த முற்றா இளம்புல்

மூதா தைவந் தாங்கு

விருந்தே "காமம்' - பெருந்தோளோயே!''

அதாவது, ""பெரிய தோள்களை உடையவளே! காமம், காமம் என்கிறார்கள், அக்காமம் வருத்தமோ பிணியோ கிடையாது. நன்றாக ஆராய்ந்து பார்க்கின் அது பழைய மேடான நிலத்தில் (முதைச்சுவல்) கலித்த (முளைத்த) முற்றாத பசுமையான இளம்புல்லைக் கிழப்பசு (மூதுஆ) நக்கிச்சுவைப்பது போன்ற புதுமையான விருந்தே காமம்'' என்று சுவையாகவும் நயமாகவும் பாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com