
அரசர்களது வாழ்வில் திருமணம் என்பது முக்கியமான ஒன்று. அது சுயம்வரமாகவோ, காந்தர்வமாகவோ இருக்கலாம். மணப்பெண் ஒருத்தி, தான் காதலிக்கும் மன்னனுக்கு மாலையிட்டு அவனைத் தன் மணாளனாக ஏற்றுக்கொள்கிறாள். இதை "மணமங்கலம்' என்பர்.
அரசனின் பிறந்த நாளன்று அவன் அரியணையில் வீற்றிருந்து ஆடல் பாடல்களைக் கேட்டு ரசிப்பான். புலவர்களும், ஆடல் மகளிரும் அவனிடம் பரிசில் பெற்றுச் செல்வர். இப்பிறந்த நாள் "நாள்மங்கலம்' எனப்படும்.
அரசன் நீராடுவதே ஒரு திருவிழாவைப் போல இருக்கும். பெண்கள் தங்கள் கைகளால் பொற்குடங்களில் கங்கை நீரை மொண்டு மன்னனை நீராட்டுவார்கள். இதை "நீராடல் மங்கலம்' என்பர். மண்ணு மங்கலம் என்றும் அழைப்பதுண்டு.
பேரரசனின் குழந்தை தங்கத் தொட்டிலில் தவழ்கிறது. குழந்தை சிரித்தும், அழுதும், கண் சிமிட்டியும் விளையாடும் காட்சியை மன்னன் கண்டு குதூகளிக்கிறான். இதற்கு "பொலிவு மங்கலம்' என்று பெயர்.
நான்கு திசைகளிலும் தம் புகழ் ஓங்கி, தம் வெண் கொற்றக் குடையின் கீழ் மக்கள் அனைவரையும் அரவணைத்து ஆள்வதை "குடைமங்கலம்' என்பர்.
அரசனது வெண்கொற்றக் குடையினைப் போல அவனது வீரத்தைப் பறைசாற்றுவது வீரத்திருவாள். அதற்கு வாழ்த்துப் பாடுவது "வாள்மங்கலம்' எனப்படும். இவ்வாறு பலவகையான மங்கலங்களை புறப்பொருள் வெண்பா மாலை வகைப்படுத்திக் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.