சொல் புதிது - 32

கலப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை; ஆனால் கலப்படம் வாழ்க்கையைக் கெடுக்கிறது. இயற்கையின் கலப்பில் உயிர்கள் வாழ்கின்றன. செயற்கையாகக் கலப்பது கலப்படம்; நோய்களை வாழவைக்கிறது.
Updated on
2 min read

கலப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை; ஆனால் கலப்படம் வாழ்க்கையைக் கெடுக்கிறது. இயற்கையின் கலப்பில் உயிர்கள் வாழ்கின்றன. செயற்கையாகக் கலப்பது கலப்படம்; நோய்களை வாழவைக்கிறது.

இப்போதெல்லாம் உண்மை எது? பொய் எது? என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி, உண்மையில் பொய்யும் பொய்யில் உண்மையும் கலந்து கிடக்கின்றன. அவற்றில் எந்தப் பாதி உண்மை? எந்தப் பாதி பொய்? என்பதைக் கண்டறியவும், உதவவும், தடுக்கவும் ஊடகங்கள் பயன்படுகின்றன.

தண்ணீரையும் பாலையும் தனித்தனியே பிரிக்கும் அன்னப்பறவையே இப்போது வந்தால்கூட பாலின் கலப்படத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், நவீனத் தொழில் நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

மக்களும் கலப்படம்தானாம்; குணம், குற்றம் இரண்டின் கலப்படம் மக்களாம் (குறள்-504) திருவள்ளுவர் சொல்கிறார், எனவே, குணம் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்து ஏற்கவும் குறை அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துத் தவிர்க்கவும் வள்ளுவர் வழி சொல்கிறார். வள்ளுவர் காலத்திலேயே குணமும் குற்றமும் பார்த்தவுடன் தெரிந்துகொள்ளும் நிலையில் இல்லாமல் ஆராய்ந்து அறிந்துகொள்ளும் அளவிற்குப் போயிருக்கின்றன.

"மக்களே போல்வர் கயவர்' என்று அடையாளம் காண முடியாமல் வள்ளுவர் திகைத்துப் போயிருக்கிறார்.

நெல்லைப் போலவே பதரும் இருக்கிறது. தோற்றத்தில் வேறுபாடு தெரிவதில்லை. நெல்லுக்குள் அரிசி இருக்கும்; உள்ளீடு அற்றுப் பதர் இருக்கும். பதர் எதற்கும் பயன்படாது; அதில் அரிசி இருக்காது; அதுபோல் பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவர்கள் மக்களில் பதர் போன்றவர்களாம். "மகன் எனல் மக்கள் பதடி எனல்' என்று வள்ளுவர் திட்டுகிறார். குறுந்தொகையில் ஒரு புலவர் பதடி வைகலார் என்று பெயர். பயனற்ற நாளைப் பதடி வைகல் என்று பாடுகிறார்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றிலும் சமுதாயத்திற்கும் தனக்கும் பயனுடையது, பயனற்றது என்று பிரித்துப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவும் தவிர்க்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், நமக்கே தெரியாமல் நமது முகவரிக்கு வருகிற - நமக்குப் பயனில்லாத மின்னஞ்சல்களை நல்ஹம் என்று சொல்கிறார்கள்.

இறைச்சி அடைக்கப்பட்ட டப்பாவைக் குறித்த சொல், போலி அல்லது மட்டமான இறைச்சி அடைக்கப்பட்ட டப்பாக்களைக் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது. வேண்டப்படாத தகவல்கள் விருப்பமில்லாதவர்களுக்கு இணையம் வழி வரத் தொடங்கியபோது ஸ்பேம் மின்னஞ்சலோடு தொடர்புடைய சொல்லாகவும் பயன் பாட்டிற்கு வந்துள்ளது.

ஒரு மின்னஞ்சலாக உள்ளே நுழைந்து, விருப்பமூட்டித் திறக்கச் செய்து, நமது கணினியில் குடி இருந்து, தகவல் திருடும் கணினியை முடக்கிப்போடும்; கணினியில் நோய் பரப்பும். உலகம் முழுதும் இணையக் குடிமக்கள் இந்த நல்ஹம் இலிருந்து விடுதலைபெற முயற்சி செய்கிறார்கள்.

நெல்லிலிருந்து பதரைப் பிரிப்பது போலவே, ஸ்பேம் மின்னஞ்சலைக் கண்டுபிடித்துத் தவிர்க்க வழி சொல்கிறார்கள். மின்னஞ்சல் அனுப்புகிறபோது பொருள் என்ற இடத்தில், மூன்று ஆச்சரியக் குறிகளோ, 100 இலவசம், குறைந்த விலை, நல்ல வாய்ப்பு, கூடுதல் வருமானம் என்றெல்லாமோ இருந்தால், அந்த மின்னஞ்சல்களைத் திறந்து பார்க்காதீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனாலும் முழுதும் விடுபட முடியவில்லையாம்.

இப்படித் தவிர்க்க முடியாத நல்ஹம் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்கள் தெரிவித்துள்ள தமிழாக்கங்கள் வருமாறு:

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி - தேவைப்படாதது / வேண்டப்படாதது/ விரும்பத்தகாதது

கோ. மன்றவாணன் - சேதிப்பொதி/ தொகைசேதி/ அஞ்சல்பொதி/ பொதியஞ்சல்/ பலர்பால் சேதி/ சுற்றஞ்சல்/ தவிர்சேதி/ வேண்டாச்சேதி/ சேதிப் பரண் ஒதுக்கறை/ தள்ளுறை எரித மின்னஞ்சல்/ பொதியுணவு/ பொதி இறைச்சி.

செ. நாராயணசாமி - வேண்டா விளம்பி

ப.இரா. இராச அம்சன் - சட்ட முரணான குறுஞ்செய்தி/ முறைகேடான குறுஞ்செய்தி/ விரும்பப்படாத குறுஞ்செய்தி/ தேவையில்லாத குறுஞ்செய்தி/ விழைவிலாத் தகவல்

எஸ். சுரேஷ் - அனாமத்து மின்னஞ்சல்

இராம.வேதநாயகம் - பழுது, பழுதான

மீனா. கண்ணன் - நறுக்குப் பேச்சு / நறுக்குரை

சோ. முத்துமாணிக்கம் - தொடைக்கறி உணவு

ஜனநேசன் - தேவையற்ற விளம்பர மின்னஞ்சல் / பதப்படுத்தப்பட்ட டப்பா இறைச்சி

நல்ஹம் பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படுகிறது. தமிழில் பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படுத்துவதற்கு உரிய சொல் வேண்டும். இயலாதபோது போஸ்ட் என்பதற்கு அஞ்சல் என்றும், அஞ்சல் செய் என்றும் பயன்படுத்துவதைப் போல ஸ்பேம் என்பதற்கும் அச்சொல் பயன்படலாம்.

ஸ்பேம் என்பது, பயனற்ற, விரும்பாத தகவல்களைக் கொண்ட, நேரத்தை வீணடிக்கிற மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியாக இருக்கிறது. தோற்றத்தில் வேறுபாடு தெரியாமல் மயங்க வைக்கிற தன்மையும் இருக்கிறது. எனவே, "மகன் எனல் மக்கள் பதடி எனல் ' என்ற வள்ளுவரிடமிருந்து பதடியைப் பெற்றுக் கொள்ளலாம்.

நல்ஹம் மின்னஞ்சலைப் பதடி அஞ்சல் என்று சொல்லலாம். பதிவு அஞ்சல் போன்று இந்தப் பதடி அஞ்சலும் வழக்கில் வருவதற்கு எளிதாக இருக்கும்.

நல்ஹம் - பதடி / நல்ஹம் ம்ஹண்ப்- பதடி அஞ்சல்

அடுத்த வாரத் தேடல் - voice mail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com