எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?'' என்று மெளனி கேட்டார். நாமே நிழல்; நமது காலடியில் நமது நிழல். வெளிச்சத்தை நோக்கி நடக்கிறபோது நம்மை நிழல் பின்தொடர்கிறது; வெளிச்சத்துக்கு எதிர்த் திசையில் நடக்கிறபோது நிழலை நாம் பின்தொடர்கிறோம்.
சமுதாய வளர்ச்சிக்கான இலக்கை நோக்கி நடக்கிறபோது மக்கள் பின்தொடர்கிறார்கள்; அத்தகைய இலக்கில்லாமல் நடக்கிறவர்கள் மக்களைப் பின் தொடர்கிறார்கள். காந்தியை மக்கள் பின் தொடர்ந்தார்கள்; காந்தி வழிகாட்டினார்; ஆற்றுப்படுத்தினார்.
குடியாட்சியில் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிரதிநிதிகள் சேர்ந்து மற்றொருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதிகாரத்தை ஒப்படைக்கிறார்கள். உலகில் பெரும்பான்மை மக்கள் இந்த முறைக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் தனித் தீவாக வாழமுடியாது. சார்ந்திருத்தலில்தான் வாழ்க்கை இருக்கிறது.
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. சூரியன் முதல் பூமி வரை எதையும் சாராமல் எதுவும் இல்லை. சார்ந்திருப்பதாலேயே எல்லாவற்றிற்கும் சார்பாக இருக்க வேண்டும் என்பது இல்லையே.
நாம் உலகத்தைச் சார்ந்து இருக்கிறோம்; அதற்காக உலகில் நடக்கும் எல்லாவற்றிற்கும் சார்பாக இருப்பதில்லை. மனசாட்சியின் சார்பாக இருக்க முயற்சி செய்கிறோம். எதற்குச் சார்பாக இருக்கலாம் என்பதை முடிவு செய்கிறோம். நமக்குச் சார்பாக எது என்பதைக் கண்டறிகிறோம். நமது சார்பாக யார் என்று தேர்ந்தெடுக்கிறோம். ""மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'' என்றபோது மக்களின் சார்பாக மன்னன் இல்லை; மன்னனைச் சார்ந்தே மக்கள் வாழும் கட்டாயம் இருந்தது. இப்போது குடியாட்சி; தங்கள் சார்பாகப் பணியாற்ற மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கென்று சட்டம் இருக்கிறது. (PEOPLE REPRESENTATIVE ACT)
தேர்ந்தெடுக்கிற பெரும்பான்மை மக்களின் தகுதிக்கேற்பவே தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் இருக்க வேண்டியதில்லை; இருக்கவும் கூடாது. தேர்ந்தெடுக்கிற பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மட்டும் நிறைவேற்றுகிறவர்களைவிட, சமுதாய வளர்ச்சியின் தேவை அறிந்து ஆற்றுப்படுத்தும் வல்லமை உடையவர்களையே வரலாறு போற்றுகிறது.
தனி மனிதர், மனசாட்சியின் REPRESENTATIVE ஆக இருக்கிறார். சமுதாயப் பண்பாட்டின் REPRESENTATIVE ஆகக் கலை, இலக்கியங்கள் இருக்கின்றன. இவற்றைக் கட்டமைத்துக் காப்பாற்றச் சட்டங்கள் இருக்கின்றன. இவற்றை வளர்த்தெடுக்க அவ்வப்போது சிந்தனையாளர்களையும் தத்துவவாதிகளையும் REPRESENTATIVEந ஆகச் சமுதாயம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
ஐ.நா. மன்றம் முதல் அங்காடிப் பொருள்கள் வரைக்கும் Representative தேவைப்படுகிற காலம் இது.
REPRESENTATIVE என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்கள் தெரிவித்துள்ள தமிழாக்கங்கள் வருமாறு:
மருந்துக்கும் வணிகப் பொருள்களுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டுமல்லாமல் தொகுதிக்கும் மக்களுக்கும் REPRESENTATIVE இருக்கிறார்கள்.
REPRESENTATIVE, சார்பாக இருக்கிறார்கள் என்றால், ஆதரவாக இருக்கிறார்கள் என்று மட்டும் பொருள் தரும். மக்கள் REPRESENTATIVE, மக்கள் சார்பாக- ஆதரவாக இருக்கிறவர்கள் மட்டுமில்லை; மக்களைச் சார்ந்து நல்வழிக்கு ஆற்றுப் படுத்துகிறவராகவும் இருக்க வேண்டும். எனவே, REPRESENTATIVE என்பவரைத் தமிழில் கோ. மன்றவாணன் தெரிவித்திருக்கும் சார்ந்தாற்றுநர் என்ற சொல்லாலேயே அழைக்கலாம்.
REPRESENTATIVE - சார்ந்தாற்றுநர்
அடுத்த வாரத் தேடல் - Upset
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.