சொல் புதிது - 30

எதிர்பார்த்தது நடக்கிறபோது வெடி வெடிக்கிறார்கள்; நடக்காதபோது UPSET ஆகிறார்கள். ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
Updated on
2 min read

எதிர்பார்த்தது நடக்கிறபோது வெடி வெடிக்கிறார்கள்; நடக்காதபோது UPSET ஆகிறார்கள். ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. துன்பத்திற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறியும் எதிர்பார்ப்பில் புத்தர் போதி மரத்தடியில் தவம் இருந்திருக்கிறார். தவம் செய்த முனிவர்களுக்கும் வரம் பெறும் எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது.

எதிர்பார்ப்பில்தான் வாழ்க்கை ஓடுகிறது. இயல்பிற்கும் தகுதிக்கும் மீறிய எதிர்பார்ப்புகளால் சிலர் அப்செட் ஆகிறார்கள்; ஏமாற்றம் அடைகிறார்கள்; வருத்தம் அடைகிறார்கள்; கலக்கம் அடைகிறார்கள்; தடுமாற்றம் அடைகிறார்கள்; மனச் சோர்வு அடைகிறார்கள்; நிலைகுலைகிறார்கள்; சீர்குலைகிறார்கள்.

விளையாட்டுப் போட்டிகளில், தேர்தல்களில், வழக்குகளில், வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் தவிர்க்க முடியாதவை. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே எல்லா முடிவுகளும் இருக்கும் என்பது இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான எதிர்பார்ப்பும் இருப்பதற்கு வாய்ப்பில்லை; ஒருவர் எதிர்பார்ப்பு நடந்தால் அது இன்னொருவரை அப்செட் ஆக்கக்கூடும். எதிர்பார்ப்புக்கு மாறாக முடிவு வரும்போது எதிர்பார்த்திருந்தவர்கள் அப்செட் ஆகிறார்கள். அப்செட் தற்காலிகமானதுதான்; அது நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் செயல்களைச் செய்துவிடத் தூண்டும். ஆனால், அப்போதும் நிலைகுலையாமல் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தருகிறது அரிச்சந்திரன் கதை.

""பொய் சொல்கிறார்களே என்பதற்காக இல்லை, பொய் சொல்கிறவர்கள் நண்பர்களாக இருக்கிறார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது'' என்று குட்டி பொய் சொல்லியதற்காக இல்லை, இனிமேல் இவர்களை நம்ப முடியாமல் செய்துவிட்டார்களே என்று அப்செட் ஆவதும் உண்டு. நம்மிடம் பொய் சொல்லும் படியாக அவர்களை வைத்து விட்டோமே என்று அப்செட் ஆகிறவர்களும் உள்ளனர். நாம் வருத்தமடையக் கூடாது என்பதற்காக இவற்றை எல்லாம் சொல்லி நம்மை மகிழ வைக்க இவர்கள் பொய் சுமக்கிறார்களே என்று அப்செட் ஆகிறவர்களும் உள்ளனர்.

கோபத்தில் சொல்கிற பதிலும் மகிழ்ச்சியில் தருகிற வாக்குறுதியும் பாதிப்பில் எடுக்கிற முடிவும் அப்செட் உருவாகும் விளைநிலங்கள் என்கிறார்கள். புயலை நாமே உருவாக்கிவிட்டு மழை பெய்கிறதே என்று அப்செட் ஆகலாமா?

தோழனிடமும் ஏழ்மையைப் பேசக்கூடாதாம்; அப்போது சுமை குறைவதாகத் தெரியலாம்; ஆனால், எப்போதாவது நம்மை அப்செட் ஆக்கலாம். ஏனெனில், கேட்பவர்களில் 20% பொருட்படுத்த மாட்டார்களாம்; மற்ற 80% மனதிற்குள் மகிழ்ச்சி அடைகிறவர்களாம்.கெட்டவர்களுடன் ஆட்டம் போடுவதைவிட நல்லவர்களுடன் சோகத்தில் இருப்பது நாம் அப்செட் ஆகிற தருணங்களைக் குறைக்கக் கூடும்.

உடலுக்குள் இரத்தத்தை ஓட விடுவதோடு மட்டும் இதயம் நிற்பதில்லை; மகிழ்ச்சியிலும் ஏமாற்றத்திலும் முன்னே நிற்கிறது. மற்றவரை அப்செட் ஆக்குவது எப்படி என்பதில் புதிய புதிய வழிமுறைகளைக் கண்டறிகிறார்கள். அதனால் வாழ்க்கையில் அப்செட் ஆகாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்செட் ஆக இருக்கும் ஒவ்வொரு விநாடியும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விநாடிகள் என்பதை மனத்தில் நிறுத்த வேண்டும். அப்செட் செய்யும் மற்றவர்களை மன்னிப்பதைவிட அவர்களை அனுமதிக்கும் நம்மை நாமே மன்னித்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டுமாம்.

"நியூ யார்க் டைம்ஸ்' பத்திரிக்கையில் UPSET என்ற சொல் 17.7.1877 ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றிருப்பதாகச் சொல் வரலாற்று ஆராய்ச்சியாளர் தாம்சன் சொல்கிறார். இப்படி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத UPSET என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரை வருமாறு:

சோ.முத்துமாணிக்கம் - கலக்கமடைதல்/ தலைகீழான மாற்றம்

சோலை. கருப்பையா - புரட்டு/ எதிர்மறை/ உருக்குலைதல்

டி.வி. கிருஷ்ணசாமி - தலைகுனிவு/ தலைகீழான பலன்/ எதிர்மறை பலன்/ விரக்தி

சி.இராமச்சந்திரன் - ஆழ்ந்த வருத்தம்/ உளம்நோதல்/ ஏமாற்றம்/ மன அயற்சி

இராம. வேதநாயகம் - தடுமாற்றம்/ மனச்சோர்வு

இரா. மோகனசுந்தரம் - கவிழ்ப்பு/ தலைகீழ்நிலை/ நிலைகுலைதல்/ மன அமைதிகெடல்/ கவிழ்நிலை

செ.நாராயணசாமி - நிறையழிதல்/ நிலை அழிதல்

கோ. மன்றவாணன் - நிலைகுலைவு/ சீர்குலைவு/ (நிலை)பிறழ்வு/ நிலைபுரள்/ நிலை புரளல்/ நிலை புரளுதல்/ உடைதல்/ நொறுங்குதல்

செ. சத்தியசீலன் - தலைகீழ்மாற்றம்/ புரட்டிப்போடல்/ கவிழ்த்துப் போடல்

பழ. கவிதா சிவமணி - உள்ளக் கெடுநிலை/

ஜனநேசன் - சீர்குலைத்தல்/ வருத்தமுறச் செய்தல்

UPSET வினைச் சொல்லாகவும் பெயர்ச் சொல்லாகவும் வருகிறது; வயிறும் UPSET ஆகிறது. எனவே, UPSET சீர் குலைக்கிறதா? நிலைகுலைக்கிறதா?

பெருமையும் புகழுமான சீரைக் குலைப்பதைவிட, ஒருவர் அந்த நேரத்தில் இருக்கும் நிலையைக் குலைப்பது என்பதே பொருத்தமாக உள்ளது. விளையாட்டுப் போட்டியிலும் தேர்தலிலும் வழக்கிலும் வாழ்க்கையிலும் ஒருவரின் எதிர்பார்ப்பு நடக்காதபோது அவரின் அந்த நேரத்திய மனநிலையைக் குலைப்பதாக UPSET இருக்கிறது. அது வயிற்றையும் நிலைகுலைய வைக்கிறது.

எனவே, UPSET என்பதற்கு இரா. மோகனசுந்தரம், கோ. மன்றவாணன் பரிந்துரைத்துள்ளவாறு நிலைகுலை என்பதைப் பயன்படுத்தலாம்.

UPSET - நிலைகுலை

அடுத்த வாரத் தேடல் - SELFIE

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com