

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை உவமைகளுக்குப் பெயர்பெற்ற இலக்கியம். இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பெருந்தேவனார். இது ஓர் அகப்பொருள் நூல். "நல்ல' (நல்ல குறுந்தொகை) எனும் அடைமொழியுடன் சிறப்பிக்கப்படும் நூல். அதில், செம்புலப் பெயல்நீரார் என்ற புலவர் இயற்றிய 4ஆவது பாடலான "யாயும் ஞாயும்' என்ற புகழ்பெற்ற பாடல் மொழியாக்கம் செய்யப்பட்டு, உலகத்தில் மிகச்சிறந்த பாடல்களுள் ஒன்றாக லண்டனில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் பொறிக்கப்பட்டிருக்கிறது!
யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!
என்ற இப்பாடல் இரண்டு உள்ளங்களின் சங்கமத்தை - அன்பு நெஞ்சங்களை மிக எளிமையான அடிப்படை உறவுச் சொற்கள் மூலம் உணர்த்துகிறது. உன் தாயும் என் தாயும் யாரோ? எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நானும் நீயும் கூட இதற்கு முன்பு அறிமுகமானவர்கள் இல்லை. ஆனாலும், பாலை (செம்)மண்ணில் பெய்த மழை போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்று கலந்துவிட்டனவே! என்பதுதான் இப்பாடலின் பொருள்.
"செம்புலம்' என்பது பாலை, செம்மண் ஆகிய இரு பொருள்களைத் தரும் சொல். செம்மண்ணில் பெய்யும் மழைநீர் மண்ணோடு கலந்த வினாடியில் தன்
சுயமிழந்து தானும் செந்நிறம் கொள்வதுபோல, நெஞ்சங்கள் ஒன்றாய்க் கலந்தனவாம். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இப்பாடல், லண்டனில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் மொழியாக்கம் செய்யப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்பது தமிழர்களாகிய நமக்குப் பெருமைதானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.