

தழிப் பயன்பாட்டில் தொடரமைப்பு முதன்மையாகிறது. தொடரமைப்பில், ஒரு செய்தியை இருதிறமாகக் கூறுதல் எல்லா மொழிகளுக்கும் உரிய பொது மரபாகும். அவ்வகையில் செய்வினை - செயப்பாட்டுவினை எனும் தொடரமைப்பு முதன்மையாகிறது. அதேசமயம் தற்காலம், படித்தவர்கள் செய்யும் மொழி சார்ந்த தவறுகளிலும் இதுவே முதன்மையாகிறது.
வேலன் மரம் வெட்டினான் - மரம் வேலனால் வெட்டப்பட்டது. இரண்டிலும் செய்தி ஒன்றுதான். முன்னது, "வேலன் இன்னது செய்தான்' என வேலனின் செயலை மையப்படுத்துவதால் செய்வினைத் தொடர். பின்னதில் "மரம் இன்ன செயலுக்கு ஆட்பட்டது' எனச் செயலுக்கு ஆட்பட்ட செயப்படுபொருள் மையமாவதால் செயப்பாட்டு வினைத்தொடர்.
சிலர், செய்வினை - செயப்பாட்டு வினையைத் தன்வினை - பிறவினையாக விளக்க முற்படுதல் தகாது. தன்வினை - தான் செய்தல். தூயன் ஆடினான் - தன்வினை. தூயன் அதியனை ஆட்டினான் - பிறவினை. ஆயின் இரண்டும் செய்வினைத் தொடர்கள். காரணம், இரண்டிலும் தூயன் என்ன செய்தான் என்பதே செய்தியாகிறது. "அதியன் தூயனால் ஆட்டப்பட்டான்' என்பது மட்டுமே செயப்பாட்டு வினைத் தொடராகும்.
இங்கே செய்தியாவது, அதியன் என்ன ஆனான் என்பதன்றி, அதியன் என்ன செய்தான் என்பதல்ல. ஆயினும் இதிலும் ஆடியவன் ஒருவன், ஆடச் செய்தவன் ஒருவன் என அமைவதால் இதனைப் பிற வினையாகவும் கொள்ளலாம் எனின், தன்வினை, பிறவினை இரண்டிலும் எழுவாய், செயப்படுபொருள் இரண்டும் வெவ்வேறாகின்றன. செயப்பாட்டு வினையில் எழுவாயே செயப்படுபொருள் - செயப்படுபொருளே எழுவாய் என்றாகிறது.
படு எனும் துணைவினை சேரும் செயப்பாட்டுவினை தமிழுக்குப் புதுவதன்று. தொல்காப்பிய முதல் நூற்பாவே, எழுத்தெனப் படுவ - என்றுதான் தொடங்குகிறது. கொலையுண்டான் - கொலை செய்யப்பட்டான், மையுண்ட கண் - மை பூசப்பட்ட கண் என்பனவும் இலக்கிய வழக்காகின்றன. துணை வினையின்றி, செயப்பாட்டு வினையாகக் கூறவேண்டியதைச் செய்வினை வாய்பாடாகக் கூறுதலும் மொழிகளுக்கிடையே பொது மரபாகிறது. "மண் குடம்' என்பதை மண்ணான் இயன்ற குடம் எனப் பொருள் விரிக்கின்றனர் தொல்காப்பிய உரையாளர். மண் தானாகக் குடமாவதில்லை. குடம் இயற்றப்படுவதன்றித் தானாக இயலுவதல்ல. மண்ணால் இயற்றப்பட்ட - செய்யப்பட்ட குடம் எனலே சரியான பொருளாகும்.
அவர்களே, ""அரசனால் இயற்றப்பட்ட தேவ குலம்'' - எனவும் சான்று காட்டுகின்றனர். புலி கொன்ற யானை என்பதைப் புலியைக் கொன்ற யானை என இரண்டாம் வேற்றுமைத் தொடராகத்தான் பொருள்கொள்ள வேண்டுமென அடம் பிடித்தவருண்டு. ஆனால், குரவர் ஊன்றிய குரம்பை - குரவரை ஊன்றிய குரம்பை, யானை புக்கபுலம் - யானையைப் புகுந்த புலம், புலி தின்ற யானை - புலியைத் தின்ற யானை, யானை தின்ற கரும்பு - யானையைத் தின்ற கரும்பு என அடம்பிடித்தல் ஆகாதல்லவா? கொலையாளி கைது - கொலையாளி கைது செய்யப்பட்டார். ஆசிரியர் இடைநீக்கம் - ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றாதலும் காண்க.
செய்வினைத் தொடராகும் தன்வினை, பிறவினை இரண்டும் எழுவாய்த் தொடராகவும், இரண்டாம் வேற்றுமைத் தொடராகவும் அமையும். அதனில் மூன்றாம் வேற்றுமையும் இடம்பெறும். செயப்பாட்டு வினை மூன்றாம் வேற்றுமைத் தொடராக மட்டுமே அமையும். அதில் இரண்டாம் வேற்றுமைக்குச் சற்றும் இடமில்லை.
ஆங்கிலத்தில் இரண்டாம் வேற்றுமைக்கெனத் தனி உருபு இல்லை. அங்கே மரம் வெட்டினான் என்றுதான் கூற முடியும். மரத்தை வெட்டினான் எனச் சொல்ல வழியில்லை. எனவே மரத்தை வெட்டப்பட்டது என்றுரைக்க வாய்ப்பில்லை. தமிழ் மரபுப்படி மரத்தை எனத் தொடங்கி, ஆங்கில மரபுப்படி வெட்டப்பட்டது என முடித்தலே பிழையாகிறது.
"ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் தோழர்களை மேடைக்கு முன்னால் வந்து அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'. "சொத்துக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்' என்றாற் போலும் பிழைகள் பத்திரிகைகளில், தொலைக்காட்சி செய்தி வாசிப்பில், படித்தவர்களின் பேச்சில் அன்றாட நிகழ்வுகளாகின்றன.
இதனில் இன்னொரு கொடுமையும் உண்டு. அவருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது என்பதில் அந்த அவர் அஃறிணையாகிறார். ஒன்று சிறப்பிக்கப்பட்டார் எனல் வேண்டும். அல்லது, சிறப்பு செய்யப்பட்டது எனலாம். கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எது? ஆடா? மாடா? ஒவ்வொன்றையும், பட்டது - படுகிறது என முடிக்கும் கெட்ட புத்தி வேண்டாமே? தமிழராகிய நாம் தமிழுக்குச் செய்வினை செய்ய வேண்டாமே? தமிழ் நமக்குப் பகையல்லவே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.